பொறியியல் பட்டம் பெற்று, பிரபல ஐடி நிறுவனத்தில் பணிபுரிபவர் சென்னையைச் சேர்ந்த பவித்ரா. பணிக்குச் செல்லும் நேரம் போக, மீதி நேரத்தில் இவர் செய்யும் பிசினஸ் ‘பேங்கிள் பஸ்’ (bangle buzz). ஆடைக்குப் பொருத்தமாக வளையல்களை வடிவமைத்துக் கொடுக்கும் தொழில். பலவித வண்ணங்களில், கண்கவர் வடிவங்களில் இவர் வடிவமைக்கும் ‘கஸ்டமைஸ்டு’ வளையல்கள் பார்க்கவே மிக அழகாக இருக்கின்றன.
‘‘சின்ன வயதிலிருந்தே பெயிண்டிங், ஆர்ட் வொர்க்ஸ், கிராஃப்ட் போன்ற கலைகளில் எனக்கு ஆர்வம் அதிகம். படித்து முடித்த பின்னர் எனது சொந்த உபயோகத்துக்காக வளையல்களை டிசைன் செய்ய ஆரம்பித்தேன். சாதாரண பிளாஸ்டிக் வளையல்களில் ‘சில்க் த்ரெட்’ எனப்படும் ஒருவகை மெல்லிய நூலால் சுற்றி, அதன் மேல் நமக்கு வேண்டிய டிசைன் செய்யலாம். என்னுடைய உடைகளுக்கு மேட்சிங்கா நான் வளையல் போட்டதைப் பார்த்த என் ஃப்ரெண்ட்ஸ் சர்க்கிளில் கேட்க ஆரம்பித்தார்கள். இப்படியே வாய்வழியாகப் பரவி, இப்போது எனக்கு பல வாடிக்கையாளர்கள் உள்ளனர்’’ என்கிறார் பவித்ரா.
வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கும் அவர்கள் அனுப்பும் உடைகளுக்கும் ஏற்ற நிறங்களையும், கற்களையும் முதலில் தேர்வு செய்துகொள்கிறார் பவித்ரா. பிறகு தன் கற்பனைக்கேற்ப டிசைனிங் செய்கிறார். சில நேரங்களில் கேட்பவர்களின் ரசனைக்கேற்ப ‘கஸ்டமைஸ்டு’ டிசைனிங் செய்கிறார்.
‘‘மாடர்ன் டிரெஸ்ஸுக்கு இள நிறங்களில் த்ரெட் சுற்றி, அதன் மேல் முத்துக்களை வைத்து டிசைனிங் செய்தால் அழகாக இருக்கும். பட்டுப்புடவைகள் போல ட்ரெடிஷனல் உடைகளுக்கு புடவை நிறத்துக்கேற்ற அடர் நிறங்களில் நூல் சுற்றி, அதில் குந்தன் கற்கள் வைத்து டிசைன் செய்யணும் ரொம்ப பிரமாதமாக இருக்கும். சிலர், தங்கள் புடவை அல்லது சுடிதாரில் இருக்கும் டிசைன் வளையலில் வந்தால் நல்லாயிருக்கும் என சொல்வாங்க. அது மாதிரியும் செய்து கொடுத்திருக்கேன். தங்களின் டிரஸ் போட்டோ மற்றும் வளையல் சைஸ் அனுப்பி அவர்களின் விருப்பம் ஏதும் இருந்தால் அதைக் குறிப்பிடுவார்கள். இல்லையென்றால் என்னுடைய சாய்ஸுக்கு அவர்கள் டிரெஸுக்கு ஏற்றவாறு டிசைன் செய்வேன். ஆபீஸ் செல்பவர்களுக்கு தினசரி உபயோகத்துக்கு ஏற்றவாறு சிம்பிளான டிசைன்களும் இருக்கு.’’ என்று கூறியவர் மாதிரிக்கு சில டிசைன்களைக் காண்பித்தார்.
‘‘மெல்லிய வளையல், பட்டை வளையல்னு பல ரகம் இருக்கே! நீங்க எந்த டிசைன் செய்றீங்க?’’
‘‘பெரும்பாலும் கஸ்டமர்ஸ் சாய்ஸ் தான். ஆனால் பொதுவாக, பட்டுப் புடவைகள், பட்டுப் பாவடை தாவணி போன்ற உடைகளுக்கு மீடியம் கனத்திலுள்ள வளையல்கள் போட்டால் எடுப்பான தோற்றத்தைக் கொடுக்கும். ஃபுல் ஃப்ராக், பார்ட்டி வேர் போன்ற டிரெஸ்களுக்கு பட்டையான வளையல் பொருத்தமாக இருக்கும். டிசைனர் சாரீஸ், எம்பிராய்டரி வொர்க் செய்த புடவைகளுக்கு மெல்லிய வளையல்களில் டிசைன் செய்தால் சூப்பரா இருக்கும்.’’ என்று கூறும் பவித்ராவுக்கு, சீஸன் காலங்களில் நிறைய ஆர்டர்கள் வருகின்றன. வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் மூலமும், மொபைலிலும் நேரிலும் ஆர்டர்கள் கிடைப்பதாகச் சொல்லி புன்னகைக்கும் பவித்ரா, இதன் மூலம் வரும் வருமானத்தில் என்ன செய்கிறார் என்பதுதான் ஹைலைட்!
‘‘இதில் வரும் வருமானத்தை நான் சொந்தச் செலவுக்கு எடுப்பதில்லை. ஏழை குடும்பம் மற்றும் தேவை இருக்கும் பெண்களுக்கு உதவி செய்வதுதான் என் விருப்பம். எனவே இந்த பிசினஸை மேலும் டெவலப் செய்து , நிறைய வருமானத்திற்கு வழி செய்ய வேண்டும்!’’ என்று கூறும்போது அவர் குரலில் நம்பிக்கையும் உறுதியும் தெறித்தன.
இளம் வயதில் உயர்ந்த நோக்கம்! வாழ்த்துக்கள் பவித்ரா!
Phone no: 77084 41191.
Instagram: https://instagram.com/bangle_buzz?igshid=uls9mzkdvupr
Facebook : https://m.facebook.com/BangleBuzz/