செய்தித்தாள்களிலும், இணையத்திலும் சமீபத்திய ஹாட் நியூஸ், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 9.9 சதவிகித பங்குகளை ஃபேஸ்புக் நிறுவனம் சுமார் 43,574 கோடி ரூபாய் விலை கொடுத்து வாங்கியுள்ளது 

அமேசான், பிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள் ஆன்லைன் வியாபாரத்தில் வந்த பிறகு தங்கள் வியாபாரங்கள் குறைந்து விட்டதாக பல சிறு வியாபாரிகள் தொடர்ந்து கூறிக் கொண்டுள்ளனர். காரணம் அமேசான், பிளிப்கார்ட் பொருட்களை மொத்தமாக வாங்கி அதை தங்களது கூரியர் மூலமாக வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே அனுப்பி வைக்கிறது.  இரண்டாவது பல மொத்த / சில்லறை வியாபாரிகளை தங்களுடன் இணைத்து கொண்டு தகுந்த டிஸ்கவுண்ட் கொடுத்து வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு கூரியரில் அனுப்பச் சொல்வது. இந்த  இரண்டு நடைமுறைகளும்  நம்ம ஊர் சிறிய அண்ணாச்சி கடைகளுக்கு  பொருந்தவில்லை. காரணம் டிஸ்கவுண்ட் பிளஸ் கூரியர் கட்டணம் அவர்களின் லாபத்தை பெரிய அளவில் குறைத்தது. மேலும் மளிகைப் பொருட்கள் எவ்வளவு தான் வாங்கினாலும் 1000, 2000 ரூபாய்க்கு மேல் வருவதில்லை, எடையும் கூடுதலாக இருக்கும்.

இந்த கொரோனா காலம் அமேசான், பிளிப்கார்ட் போன்றவற்றை  காணாமல் போகச் செய்து விட்டது. அண்ணாச்சி கடைகள்தான்  திறந்து வைத்திருந்தார்கள், மக்களுக்கு ஆபத்பாந்தவனாக இருந்தார்கள். இதனால் அவர்கள் மீது மக்களுக்கு ஒரு அபரிதமான நம்பிக்கை தற்போது வந்திருக்கிறது, சிறு வியாபாரிகளை சப்போர்ட் செய்ய வேண்டும் என்ற எண்ணமும் மக்களிடையே இருக்கிறது. 

இந்த சரியான சமயத்தில் தான் ரிலையன்ஸும், வாட்ஸப்பும் தங்களது டீலையும் வெளியிட்டார்கள்.

எப்படி செயல்படுகிறது?

இது தற்போது 200 நகரங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நீங்கள் ரிலையன்ஸின் JIO MART இணையதளத்திற்கு சென்று அதை உங்களது போனில் டவுன்லோட் செய்ய வேண்டும்.  உங்களுக்கு தேவையான பொருட்களை டிக் செய்து அவர்களுக்கு அனுப்பினால் அதை ரிலையன்ஸ் ஜியோ மார்ட் உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள தங்களிடம் ஒப்பந்தம் செய்திருக்கும் மளிகை கடைக்கு அனுப்பி அந்தப் பொருட்களை அனுப்ப  அல்லது அவர்களது நிறுவனமான RELIANCE RETAIL  மூலம் அனுப்ப ஏற்பாடு செய்யும். 

ரிலையன்ஸ் ஜியோ வில் 38 கோடி சப்ஸ்கிரைபர்கள் இருக்கிறார்கள், இந்தியாவில் வாட்ஸப் 40 கோடி பேர் உபயோகப்படுத்துகிறார்கள். இதுதான் தற்போது இவர்களின் பலம். 

வாடிக்கையாளர்களுக்கு என்ன லாபம்? 

பொருட்கள் அருகிலுள்ள அண்ணாச்சி கடைகளில் இருந்து அல்லது ரிலையன்ஸ் ரீடெயில் ஸ்டோர்களில் இருந்து  தள்ளுபடியுடன் கிடைக்கிறது.  

அண்ணாச்சி கடைகளுக்கு என்ன லாபம்? என்ன நஷ்டம்?

நிச்சயம் சிறிய டிஸ்கவுண்ட் கொடுக்க வேண்டியிருக்கும். அதை ரிலையன்ஸ் நிர்ணயிக்கும்.

உங்களுடைய வியாபாரங்கள் உங்கள் ஏரியா தவிர இன்னும் சிறிய தொலைவிற்கு விரிவுபடுத்த இதன் மூலம் சாத்தியப்படும். 

கடைகளின் வியாபாரங்கள் கூடும். அதிக வியாபாரம், மிதமான லாபம் என்பது உங்களது குறிக்கோளாக இருக்க வேண்டும்.

வருங்காலங்களில் குறிப்பிடும் ஏரியாக்களில் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு பொருட்களை டெலிவரி செய்ய வேண்டியிருக்கும்.

ரிலையன்ஸுக்கு சப்ளை செய்வதால் வருங்காலத்தில் வங்கிகள் மூலம் அவர்கள் உங்கள் வியாபாரத்தை பெருக்க கடன்கள் வாங்கித் தர வழி கிடைக்கும்.

6 கோடி சிறிய வியாபாரிகள், 45 லட்சம் கோடி சில்லறை வணிகம்:

இந்தியாவில் சுமார் 6 கோடி சிறு வியாபாரிகள் இருக்கிறார்கள். இந்த வியாபாரிகளைச் சார்ந்து பல கோடிக் கணக்கான மக்களின் வேலை இருக்கிறது. இத்தனை நாள், தங்களை ஆன்லைன் உலகத்தில், இணைத்துக் கொள்ளாத மளிகைக் கடை வியாபாரிகள் இனி, மெல்ல ஜியோ மார்ட் வழியாக நம் ஸ்மார்ட்ஃபோன்களில் எட்டிப் பார்ப்பார்கள். இந்தியாவின் சில்லறை வணிகம் சுமாராக 45 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது என்பது  குறிப்பிடதக்கது.   

Spread the lovely business news