நிகில் இனாம்தார் எழுதிய ரோக்டா – புத்தகம் ‘பனியாக்கள்’ எப்படி வியாபாரம் செய்கிறார்கள் என்ற தலைப்பில் ஐந்து மார்வாரி தொழில்முனைவோரின் கதைகளை கொண்டது. ரோக்டா – பணம் என்று பொருள்.பனியா இந்தியாவின் ஒரு வர்த்தக வர்க்க பிரிவினர்.
நூலின் ஆசிரியர் இனாம்தார் ஐந்து பிராண்டுகளையும் அவற்றுக்கு பின்னால் அந்த பிராண்டுகளை ஆரம்பித்த தொழில் முனைவோர்களின் முயற்சிகளை சுருக்கமாக தந்திருக்கிறார். அவை ஒவ்வொன்றையும் படிக்கும்போது, அவர்கள் தங்கள் வேலையை அணுகும் விதம், வணிகத் துறையில் நுழைவது, வெற்றி மற்றும் தோல்விகளைக் கையாள்வது போன்றவற்றில் சற்று வித்தியாசமானவர்கள் என்பதை கண்டுகொள்ளலாம்.
காஸ்மெடிக்ஸ் என்று சொல்லப்படும் ஒப்பனை பொருள்களின் பிரபல பிராண்டான எமாமியின் நிறுவனர்களான ராதேஷ்யம் அகர்வால் மற்றும் ராதேஷ்யம் கோயங்கா,ஸ்னாப்டீலின் இணை நிறுவனர் ரோஹித் பன்சால்,மேரு கேப்ஸின் நிறுவனர் நீரஜ் குப்தா, ஹிண்ட்வேரின் ஆர். கே. சோமானி, மற்றும் வி. கே. பன்சால், சாதாரண கணினி ஆசிரியராக இருந்து பின்னர் கோட்டாவில் பெரிய பயிற்சி வகுப்புகளை உருவாக்கியவர்.
1968 ஆண்டுகளில் சுமார் 20000 ரூபாய் வியாபாரத்திலிருந்த எமாமி நிறுவனத்தின் இப்போதைய வணிகத்தின் தொகை 30 ஆயிரம் கோடிகள். முதலில் பற்பசை, வாசலின் போன்ற பொருள்களை மறு பேக்கிங் செய்ய ஆரம்பித்த இருவரும் 1974ல் இமாமி பிராண்டை ஆரம்பித்தனர். பான்ட்ஸ் போன்ற பவுடர்கள் டின்களில் வரும்போது இமாமி பவுடர்களை பிளாஸ்டிக் மோல்டு செய்த டப்பாக்களில் விற்பனை செய்து வெற்றிகளை குவிக்கஆரம்பித்தனர் . போரோ பிளஸ்,ஜண்டு பாம்,மென்தோபிளஸ் ,சார் அண்ட் ஹாண்ட்சம், நவரத்தின ஆயில் இவை அனைத்தும் இமாமியின் பிராண்டுகள்தான். சல்மான் கான் படத்தில் ஒரு பாட்டில் ,ஜண்டு பாம் என்ற பெயரைஉபயோகப்படுத்தியதற்காக வழக்கு தொடுத்த நிறுவனம் பின்னர் அதையே தனது விளம்பரங்களுக்கு உபயோகப்படுத்திக் கொண்டது ஒரு சுவாரஸ்யமான சம்பவம்.
ஸ்னாப்டீலின் கதை இளம் தலைமுறையினரை கவரக்கூடிய ஒன்றாகும். ஐ.ஐ.டி தேர்ச்சி பெற்று நல்ல வேலையில் நல்ல சம்பளத்தைப் பெற்றுக் கொண்டிருந்த ரோஹித் பன்சால் , பால் குணால் பஹ்லுடன் சேர்ந்து, 2010 ல் ஸ்னாப்டீலை நிறுவினார் .சிறிய தயாரிப்பாளர்களிடமிருந்து பொருள்களைப் பெற்று நகர்ப்புற ஊர்களில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட ஸ்னாப்டீல் நிறுவனத்தின் 50% வாடிக்கையாளர்கள் மொபைல் மூலமாகவே ஆர்டர் செய்கிறார்கள் என்ற தகவல் ஆச்சரியம்தான். ( ஆனால் இப்போது இன்னும் அதிகமாக இருக்கக்கூடும்). இந்திய இணைய சந்தையில், மின் வணிகத்திற்கு ஸ்னாப் டீல் ஒரு முக்கிய மைல்கல் அதற்கு வித்திட்ட இருவரின் முயற்சிகள், சிரமங்கள் நன்கு விவரிக்கப்பட்டுள்ளன.
துப்புரவு வணிக முன்னணி நிறுவனமான ஹிண்ட்வேருக்கு சொந்தமான Hindustan Sanitary ware& Industries Limited (HSIL) ஆர்.கே. சோமானி, கல்கத்தாவில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் மெதுவாக முன்னேறிய ஒரு குடும்பத்திலிருந்து வந்தவர். சகோதரர்கள் ஒவ்வொருவரும் தனியாகஒரு வணிகத்தை நடத்துவதற்கான தனது மூத்த சகோதரரின் யோசனையின் ஒரு பகுதியாக, ஆர்.கே துப்புரவு பொருட்கள் வணிகத்தில் இறங்கினார்.ஆர்.கே. வெளிநாடுகளுக்குச் சென்று சானிடேஷன் சம்பந்தமாக சிறந்த தொழில்நுட்பத்தைக் கற்றுக்
கொள்வதோடு மட்டுமல்லாமல் தனது சொந்த வணிக புத்திசாலித்தனத்தையும் வளர்த்துக் கொள்ள வழிவகுத்தது. சந்தையைப் புரிந்துகொள்வதற்கான தனது முயற்சிகளில் ஆர்.கே.யின் சமயோசித அணுகுமுறைகள் விளக்கமாகத் தரப்பட்டுள்ளன.
பன்சாலின் கதை மற்ற மனிதர்களைப் போல் அல்ல. ஜான்சி நகரில் ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்த பன்சால் பொறியியல் பட்டம் பெற்று மண வாழ்வைத் தொடங்கிய சமயம் உடல்நலக் கோளாறு ஏற்பட்டது. ஒரு மாணவருக்கு பயிற்சி அளிக்க ஆரம்பித்த பன்சால் பின்னர் கோச்சிங் கிளாஸ் என்ற பயிற்சி வகுப்புகள்பிரபலமடைந்தது. கற்பித்தலில் எந்த சமரசமும் செய்து கொள்ளாத அவரது முயற்சி வணிகர்களுக்கு தாங்கள் விற்கும் பொருட்களின் தரத்தை எப்படி பராமரிக்க வேண்டும் என்பது போல. பிற வணிகங்களைப் போலவே இந்தத் துறையிலும் நடக்கும் போட்டிகள் பற்றிய விவரங்களும் இருக்கின்றன.இந்தத் தொழிற்துறையைப் பற்றிய ஒரு வரி குறிப்பிடத்தக்கது “ முதலில் சம்பாதித்து பின்னர் செலவழிக்கும் ஒரு வணிகமாகும்”
இந்தியாவில் தனியார் டாக்சிகளின் ஒட்டுமொத்த வணிக நோக்கை மாற்றிய பெருமைக்குரிய நிறுவனம் மேரு கேப்ஸ். அதன் நிறுவனர் நீரஜ் குப்தா ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தவர்.மகாராஷ்டிரா அரசாங்கம் ஒரு முறை பொது போக்குவரத்தை தகர்ப்பதற்காக தனியார் ரேடியோ கேப்ஸ் என்ற முறைக்கு விடுக்கப்பட்ட டெண்டரில் நீரஜ் போட்டியிட்டு குருட்டாம்போக்கில் வெற்றி பெற்றாலும் தனது தவறுகளை ஒத்துக் கொண்டு அவைகளை மாற்றி தனது முயற்சியில் வெற்றிபெற்ற கதைதான் மேரு கேப்ஸ். கருப்பு மஞ்சள் வண்ணம் கலந்த பிரிமியர் பத்மினி கார்கள் ஓடிக்கொண்டிருந்த மும்பை நகரை மேரு கேப்ஸ் டாக்சிகள் மூலம் நகருக்கு எழில் சேர்த்த நீரஜ் குப்தாவின் பயணம் ஹைதராபாத், டெல்லி,ஜெய்ப்பூர், ஆமதாபாத், சென்னை என விமான நிலைய கார்களாக விரிந்தது நாம் அனைவரும் அறிந்ததே.அவரது வியாபார முறைகள் சரியா,தவறா அல்லது அதீத தன்னம்பிக்கை காரணமா என்பதை அவரவர்தான் தீர்மானிக்க வேண்டும்.
ஒரு வியாபாரத்தில் வெற்றி, தோல்வி வரும்போது நம்மை நாமே அலசி ஆராய்ந்து கொள்ள வேண்டியது எல்லா வணிகத்திற்கும் தேவையான ஒன்றுதான். புத்தகத்தின் நாயகர்கள் ஐவரின் வணிக வாழ்க்கையில்எதிர்க்கொண்டபிரச்சினை, சங்கடங்கள், தடைகள் தாண்டியது, வகுக்கப்பட்ட உத்திகள், அபகரிக்கப்பட்ட வாய்ப்புகள் மற்றும் தீர்வுகள் குறித்து திட்டவட்டமாக தெரிந்து கொள்ள பல விஷயங்கள் இந்த புத்தகத்தில் இருக்கின்றன. இந்த புத்தகத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. வணிகம் செய்வது எப்படி? வியாபாரத்தை எப்படி சிந்திப்பது? வியாபாரத்தை எவ்வாறு நடத்துவது?
அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் கிடைக்கும் இந்த புத்தகத்தை படித்துப் பார்த்தால் பனியாக்களின் வெற்றிக்கான ரகசியம் புரியும்.