தன்னுடைய நலத்திற்காக ஆரம்பித்து பல அணுகூலங்கள் கண்ட கரூரைச் சேர்ந்த இல்லத்தரசி கருணாம்பிகை, மற்ற பெண்களுக்கும் பயன்பட வேண்டும் என நினைத்து தொடங்கியதுதான் ‘மெல்லினம்’ ஆர்கானிக் சானிடரி நாப்கின் தயாரிக்கும் சிறுதொழில். அதற்கு துணையாக இருப்பவர் துணைவர் அருள்முருகன்.
‘‘நான் அக்குபங்சர் டிப்ளமா படித்தபோதுதான், ஆரோக்கியம் குறித்த சரியான விழிப்புணர்வு வந்தது. குறிப்பாக கர்ப்பப்பையில் வரும் பல பிரச்னைகளுக்கு காரணம் அவர்கள் உபயோகிக்கும் சிந்தெடிக் சானிடரி நாப்கின் என்பதுதான். இதனால் உதிரப்போக்கு அதிகமாவதோடு அடிக்கடி நாப்கின் மாற்ற வேண்டிய நிலை வரும் (இதுதான் அவர்களுடைய வியாபார தந்திரம்). பெண்களுக்கு கருமுட்டை உற்பத்தி கூட பாதிக்கப்படும் என்ற உண்மை தெரிந்து அதிர்ந்து போனேன்.
நம் முன்னோர் கையாண்ட விதம்தான் சிறந்தது என புரிந்து பருத்தித் துணிகளால் ஆன நாப்கின்களை உபயோகிக்கத் தொடங்கினேன். ரெடிமேடு நாப்கின்களை வாங்கிப் பயன்படுத்த மனமில்லாமல் நாங்களே தயாரிக்க ஆரம்பித்தோம்’’ என்று ‘மெல்லினம்’ உருவான விதத்தைப் பகிர்ந்து கொண்டார் கருணாம்பிகை.
‘‘ரெடிமேடு நாப்கின்கள் பழகியவர்களுக்கு பருத்தி நாப்கின்கள் பிடிக்குமா? எளிதில் அந்தப் பழக்கத்தை மாற்றிக்கொள்வார்களா?’’
‘‘முதலில் சிரமமாகத்தான் இருக்கும்.. பழகப் பழக சரியாகிவிடும். பருத்தி நாப்கின்களைத் தொடர்ந்து உபயோகிக்கும்போது, உடலின் தன்மை மாறி, உதிரப்போக்கு சாதாரணமாக ஆகும். ஆரம்பத்தில் ‘ரீ யூஸபிள்’ நாப்கின்தான் தயாரித்தோம். அது அவ்வளவு சுலபமானதாக இல்லை, இந்த பருத்தி நாப்கின்களால் கர்ப்பப்பைக்கு எந்தப் பிரச்னையும் வராது, பக்க விளைவுகளும் இல்லை என்பது சிறப்பம்சம். அளவுக்கு அதிகமான உதிரப்போக்கு இருப்பவர்கள் இந்தப் பருத்தி நாப்கின் பயன்படுத்தினால், முதல் 2 மாதம் அதிகமாக இருந்த ப்ளீடிங், கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து, சீராகும் என்பது அனுபவபூர்வமான உண்மை. வாழ்வியல் முறைகளிலும் கொஞ்சம் மாற்றம் செய்யவேண்டும்.
இந்த நாப்கின்களை துவைப்பதும் அவ்வளவு கஷ்டம் இல்லை. குழாய் தண்ணீரில் காட்டினாலே போதும். காயவைத்து மீண்டும் பயன்படுத்தலாம். கொஞ்சம் சகிப்புத்தன்மையும் ஆரோக்கியத்தில் அக்கறையும் இருந்தால் போதும். இதை உபயோகிப்பது, பராமரிப்பது எளிதுதான். வாய்மொழியாகவே நாப்கின்கள் பற்றி பலரிடம் பரவியிருப்பதால், இப்போது நிறைய ஆர்டர் வருகின்றது. லண்டன், கலிஃபோர்னியாவுக்கெல்லாம் ‘பல்க்’ ஆக வாங்கிட்டுப் போயிருக்காங்க’’ என்கிறார்.
இவர்களின் தயாரிப்புக்கு பெண்ணினத்துக்கு ஏற்ற ‘மெல்லினம்’ என்று பெயர் வைத்திருக்கும் இந்தத் தம்பதி, இந்த நாப்கின்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகக் கூறுகின்றனர். ஆர்டர் பார்சலில் அனுப்பப்படுகிறது. ஒருமுறை உபயோகித்தவர்கள், அதன் தரம் காரணமாக வேறு நாப்கின்களுக்குப் போவதில்லை. மற்றவர்களுக்கும் பரிந்துரைக்கின்றனர்.
‘‘எங்க நாப்கின்களுக்கு காடா துணியைத்தான் உபயோகிக்கிறோம். ‘ப்ளீச்’ செய்யாத ஒரிஜினல் கலர்தான். மெட்டீரியலை வாங்கி, சைஸ் வாரியாக கட்டிங், ஸ்ட்ரிச்சிங் எல்லாம் ஜாப் வொர்க்காகக் கொடுத்து வாங்கிவிடுகிறோம். இறுதியாக நான் பரிசோதித்த பின்னர், பேக்கிங் செய்து கூரியரில் அனுப்புகிறோம். சென்னை, ஈரோடு தவிர மற்ற இடங்களில் விநியோகஸ்தர்கள் கிடையாது. கடைகளுக்குக் கொடுத்தால் விலை அதிகமாகிவிடும். சமூகத்தில் ஒரு மாற்றம் வரவேண்டும் என்பதுதான் என் நோக்கம்’’ என்றவரிடம் விலை பற்றிக் கேட்டோம்.
‘‘டிஸ்போசபிள் நாப்கின் 6 பீஸ் பேக்கிங் ரூ 225. ரீ யூஸபிள் 4 பீஸ் பேக்கிங் ரூ 400. நம் பெண்களுக்குத் தகுந்த மாதிரி, சிறியது, நடுத்தரமானது, பெரியது என மூணு சைஸில் கிடைக்கும். கடைகளில் கிடைக்கும் ரெடிமேடு நாப்கின்களில், ‘எக்ஸ்ட்ரா லார்ஜ்’ என்னும் சைஸ் தான் எங்களுடைய முதல் சைஸ். அடுத்த சைஸ் அதை விடப் பெரியது. எனவே கசிவு ஏற்படும் என்கிற பயமில்லாமல் உபயோகிக்கலாம்.’’ என்றார் கருணாம்பிகை.
‘‘நாங்கள் எதிர்பார்த்த மாற்றம் இப்போது எங்கள் சுற்றுவட்டாரத்தில் ஏற்பட்டிருக்கு. அதோடு, நாம் சார்ந்த சமுதாயத்துக்கு ஒரு நல்ல விஷயம் செய்கிறோம் என்கிற திருப்தியும் மகிழ்ச்சியும் பல மடங்கு கிடைத்திருக்கின்றது. இயற்கைக்குக் கெடுதல் செய்யாமல், எந்த அளவுக்கு இயற்கையோடு இயைந்து வாழ்கிறோமோ, அந்தளவுக்கு மனசு நிறையும். இது எங்கள் அனுபவத்தில் உணர்ந்தது. பெண்களின் மாதவிலக்கு வேதனைகளைப் புரிஞ்சுக்கிட்ட எல்லா கணவர்களும், மகன்களும் இந்த நாப்கின் விஷயத்திலும் அக்கறை செலுத்தணும்’’ என்கிறார் அருள்முருகன்.
‘‘என் உடல் உபாதைகளுடன்தான் நான் மாற்று வழி தேடி, கண்டுபிடித்தேன். கூடிய விரைவில் எல்லா இடங்களிலும் கிடைப்பதற்கான முயற்சியில் இப்போது இறங்கியிருக்கோம். இந்த கொரோனா காலம் முடிந்தபிறகு, அதை முழுவேகத்தோடு செய்ய எண்ணம். பாதிக்கப்படும் பல பெண்களுக்கு ஒரு மாற்று வழி காட்டணும்’’ என்று அக்கறை நிரம்பிய குரலில் முடிக்கிறார் கருணாம்பிகை.
தான் பெற்ற துன்பம் பிற பெண்கள் படக்கூடாது என்ற இவரின் எண்ணம் ஒரு தொழிலாய் உருவெடுத்திருப்பது பாராட்டவேண்டிய விஷயம்!
தொடர்புக்கு : 99655 51157