கார்ப்பரேட் செகரட்ரிஷிப் படித்து, எம்.பி.ஏ. முடித்து தனியார் நிறுவனத்தில் 16 வருடங்கள் பணியாற்றியவர் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீரஞ்சனி. இன்று சென்னையின் பிரபலமான ‘டேக் அவே’ உணவகங்களில் ஒன்றான ‘ரைஸ் அண்டு நூடுல்’ உணவகத்தின் உரிமையாளர் இவர்.
ஸ்ரீரஞ்சனிக்கு நீண்டகாலமாகவே சொந்தத் தொழிலின் மேல் தீராக் காதல் இருந்தது. ‘‘சொந்தமாக பிசினஸ் ஆரம்பிக்கலாம்னு முடிவு செய்ததும், ஃபுட் பிசினஸ்தான் பண்ணனும் என்பதில் நான் தீர்மானமாக இருந்தேன். அந்த சமயத்தில் சைனீஸ் ஃபுட் மேல் மக்களுக்கு இருந்த ஆர்வமும், சாலையோர வண்டிகளில் பிஸியாக இயங்கும் நூடுல்ஸ் கடைகளும்தான் ஞாபகம் வந்தது. ஒரிஜினல் சுவையில் நல்ல தரமான உணவை நாம் கொடுத்தால் என்னன்னு தோணுச்சு! ஒரு தொழிலைத் தொடங்குவதற்கான திட்டமிடுதல், செயல்படுத்துதல் எல்லாத்திலும் எனக்கு நல்ல அனுபவம் இருந்தது! அப்போது உதயமானதுதான் ‘ரைஸ் அண்டு நூடுல்’!’’ என்று தான் தொழில் தொடங்கிய கதையை விவரித்தார் ஸ்ரீரஞ்சனி.
இவருடைய கணவர் விஜய் பாலாஜியும், பெற்றோரும் ஸ்ரீரஞ்சனியின் தொழில் ஆர்வத்துக்கு முழு ஆதரவு கொடுத்ததும் இவருடைய வெற்றிக்கு ஒரு காரணம்.
‘‘ஃபுட் இண்டஸ்ட்ரி என்றாலே அதன் வெற்றிக்கு சுவைதான் அடிநாதம். அதுக்கு நல்ல மாஸ்டர்ஸ் வேணும். இதே தொழிலில் இருந்த நண்பர்கள் எங்க கடைக்கு நல்ல மாஸ்டர்களை அறிமுகம் செய்துவச்சாங்க. முதல் கடையை 2016 நவம்பரில் ராஜகீழ்ப்பாக்கத்தில் ஆரம்பிச்சோம். பிசினஸ் தொடங்கிய மறுவாரத்திலேயே மிகப் பெரிய சவாலாக பணமாற்றம் வந்தது. அந்தச் சமயத்தில் யாரும் பணம் கொடுத்து வாங்கவே முன்வரலை. அக்கம்பக்கத்தில் இருந்த பலருக்கு, பணத்தைப் பிறகு வாங்கிக்கிறேன்னு சொல்லி, எங்க உணவை கிரெடிட்ல கொடுத்தேன். ஏன்னா, என்னோட கடை உணவின் சுவையை முதலில் அவங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கணும் என்பதுதான் அப்போதைக்கு என் நோக்கமாக இருந்துச்சு! பணமாற்றம் என்கிற சவாலை எதிர்கொண்டு சமாளிச்சு வர்றதுக்குள்ள, அடுத்த மாசமே வந்து தாக்குச்சு வார்தா புயல்! இப்படி ஒவ்வொரு சவாலாகச் சந்திச்சு, அதிலிருந்து மீண்டு வந்ததுதான் எங்க ‘ஸ்டார்ட் அப்’ பிசினஸ்!’’ என்று சிரித்தபடி சொல்கிறார் ஸ்ரீரஞ்சனி.
நாங்க ஆரம்பிக்கும்போது ‘டேக் அவே’ என்னும் கான்செப்ட் அவ்வளவு பரவலாக இல்லை. ஆனால் நாங்க தொடங்கும்போதே ‘டேக் அவே’ அல்லது ‘டோர் டெலிவரி’ மட்டும்தான் என்பதில் உறுதியாக இருந்தோம்.
துவக்கத்தில் ரொம்ப ஆள் எல்லாம் போடலை. 2 மாஸ்டர்களுடன் தான் தொடங்கினேன். பில்லிங் எல்லாம் நானே பார்த்துக்குவேன். சில வேளைகளில் டெலிவரி கூட நானே வண்டியில் போய் பண்ணிட்டு வருவேன். பிசினஸ் கொஞ்சம் சூடு பிடிச்ச பிறகுதான் எல்லாத்துக்கும் ஆள் போட்டேன். முதல் சில மாதங்களிலேயே எங்க டேஸ்ட் பிடிச்சுப்போய் நிறைய ஆர்டர்கள் வந்தது. இப்போ நாலு மாதங்களுக்கு முன்னால் முகப்பேரில் ஒரு கிளை தொடங்கியிருக்கேன். ரெண்டு கடையிலும் சேர்த்து இப்போ கிச்சனில் மட்டும் 7 பேர் வேலை செய்றாங்க’’ என்கிறார் சந்தோஷமாக.
சைனீஸ் உணவு வகைகளுடன் தொடங்கிய இவருடைய கடையில் இப்போது வட இந்திய உணவு வகைகள், தந்தூரி உணவுகள் மற்றும் பிரியாணி வகைகளும் தயாரித்து, விநியோகிக்கின்றனர்.
‘‘மூன்று வருடங்களில் இன்னொரு கிளை தொடங்கியிருக்கீங்க.. உங்க வெற்றியின் ரகசியம்?’’
‘‘நாங்க உணவுகளைத் தயாரிக்கப் பயன்படும் மூலப் பொருட்கள்தான் முக்கிய காரணம். நூடுல்ஸில் தொடங்கி, சாஸ், பாஸ்மதி அரிசி வரை எல்லாமே தரமான, பிராண்டட் தயாரிப்புகளைத்தான் பயன்படுத்துகிறோம். முக்கியமாக, சைனீஸ் ஃபுட்டுக்கு உபயோகிக்கிற பொருட்கள் எல்லாமே சீனாவிலிருந்து வரும் பொருட்கள். தயாரிப்புகள் நல்லா வரணும் என்பதால், மூலப் பொருட்களின் தரத்தில் எந்த சமரசமும் செய்றது இல்லை. சைவம், அசைவம் ரெண்டுமே கொடுக்கிறோம். இறைச்சி வகைகளை வாங்கி ஸ்டோர் பண்றதில்லை. எல்லாமே ஃப்ரெஷ்தான். காய்கறிகளை தினமும் வாங்குறோம். ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிக்கும் கெமிக்கல்களை உபயோகிப்பதில்லை.
முக்கியமாக எந்த உணவையுமே செய்து வச்சுக்கிறதில்லை. மூலப் பொருட்கள் எல்லாமே முழுமையாக தயாராக இருக்கும். எவ்வளவு ஆர்டர் வந்தாலும், வந்த பின்னர்தான் அந்த உணவை சமைக்க ஆரம்பிப்பாங்க. அதனாலதான், சில கஸ்டமர்கள் ‘முட்டைகோஸ் போட வேணாம், குடமிளகாய் போட வேணாம்’ என்பது போல தங்கள் விருப்பத்தைச் சொன்னாலும் செய்து அனுப்ப முடியுது! ஏற்கெனவே செய்து வைத்தால் இதெல்லாம் சாத்தியமில்லை!
விலையும் எங்களிடம் அதிகமில்லை. பெரிய சைனீஸ் உணவகங்களுக்குப் போனால், இதே உணவுகளை ஒரு போர்ஷன் 300, 400 ரூபாய்னு சொல்லி விப்பாங்க. அதே போர்ஷனை நாங்க 110 ரூபாய்க்கு கொடுக்கிறோம்’’ என்று தன் வெற்றியின் ரகசியங்களை அடுக்குகிறார் ஸ்ரீரஞ்சனி.
இது ‘டேக் அவே’ யுகம்.. திரும்பிய இடமெல்லாம் இந்த மாதிரி கடைகள் பெருகிடுச்சு. ஆனாலும் சீராக, நிலையாக தரமான உணவை கொடுக்க வேண்டியது என் கொள்கை.. அதனால் எத்தனை பேர் வந்தாலும் ‘ரைஸ் அண்டு நூடுல்’க்கான வாடிக்கையாளர்களைத் தக்கவச்சுக்க முடியும்’’ அழுத்தமான நம்பிக்கை தெரிகிறது ஸ்ரீரஞ்சனியின் வார்த்தைகளில்.
கூடிய விரைவில் பல கிளைகளை எதிர்பார்க்கிறோம் ரஞ்சனி!