தொழில் தொடங்க தேவையான நிதி திரட்டுவதில் உள்ள சிரமம்தான் சிறு தொழில் முனைவோருக்கான முதல் சவால். அடுத்தசவால், தொழில் நடத்த தேவையான நடைமுறை மூலதனம் (Working capital).ஏற்கனவே பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை யாரும் உறுதிப்படக் கூற முடியாது. இந்த சூழ்நிலையில் சிறு தொழில் முனைவோர்கள் தங்களது நடைமுறை மூலதனத்தை சரியாக கையாள்வதில் கவனம் அதிகம் வேண்டும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் (MSME) வளர்ச்சிகளுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது. அவற்றில் குறிப்பிடத்தக்க திட்டம் ‘முத்ரா’ கடன் திட்டம்.
முத்ரா திட்டம் பற்றி அறிவோம்
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சிக்காக, சிறுதொழிலை மேம்படுத்த, விரிவுபடுத்திக் கொள்ள மத்திய அரசால் உருவாக்கப்பட்டதுதான் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் (PMMY). இந்த திட்டம் குறுந்தொழில் மேம்பாட்டு மற்றும் மறுநிதி நிறுவனம் (Micro Units Development and Refinance Agency – MUDRA) மூலமாக செயல்படுத்தப்படுகிறது.
முத்ரா திட்டத்தின் வகைகள்
அதிகபட்சம், ரூ. 10 லட்சம் வரை முத்ரா திட்டத்தின் கீழ் கடன் பெறலாம். இது மூன்று வகைப்படுத்தப்படுகிறது, சிசு, கிஷோர் மற்றும் தருண் ஆகிய முறைகளில் வழங்கப்படுகிறது. சிசு திட்டத்தின் கீழ் ரூ.50,000 வரை கடன் பெறலாம். கிஷோர் திட்டத்தின் கீழ் ரூ. 50,000 முதல் ரூ.5 லட்சம் வரையும், தருண் திட்டத்தின் கீழ், ரூ.5 லட்சம் முதல் 10 லட்சம் வரையும் கடன் பெறலாம்.
சொத்து இல்லாமல் 10 லட்சம்
மத்திய அரசால், 2015 ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தில் அனைத்து பொதுத்துறை மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் முத்ரா கடன் பெற விண்ணப்பிக்கலாம். குறிப்பாக, எந்தவிதமான சொத்து பிணையம், மூன்றாம் நபரின் உத்திரவாதமும் தேவையில்லை. அதிகபட்சமாக 12 சதவீதம் வட்டி. கடனை திரும்ப செலுத்தும் காலம் 5 வருடம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.உங்கள் தொழிலின் வளர்ச்சி, தேவை மற்றும் கடனை திரும்ப செலுத்தும் முறை போன்றவற்றை பொறுத்து உங்கள் தொழிலை விரிவுபடுத்த நடைமுறை மூலதன கடன் பெறவும் வாய்ப்புகள் அதிகம். இத்திட்டத்தின் கீழ் அரசு மானியம் கிடையாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஏற்கனவே தொழில் செய்பவர்கள் என்றால், உங்களுக்கு வேறு எந்த வங்கியிலும் வராக்கடன் இல்லாத பட்சத்தில் உங்களுக்கு வங்கிகள் முன்னுரிமை கொடுப்பார்கள். முத்ராவில் கடன்பெற வங்கி அதிகாரிகளின் நம்பிக்கையை பெறுவது மிக அவசியம்
உகந்த தொழில்கள்
பண்ணை தொழில்சாரா உற்பத்தி நிறுவனங்கள், வர்த்தக மற்றும் சேவை நிறுவனங்கள் ஆகிய அனைவரும் இந்த திட்டத்தில் பயன் பெறலாம். அதாவது தள்ளு வண்டி கடைகள், கைவினை கலைஞர், உற்பத்தி தொழிற்சாலை, அழகு நிலையம் மேம்படுத்த, சிற்றுண்டிகள் சரக்கு வாகனம் வாங்க என அனைத்து துறையினரும் முத்ரா திட்டத்தின் கீழ் கடன் பெற தகுதியானவர்களே. பண்ணை சார்ந்த தொழில்கள் அதாவது மாட்டுப்பண்ணை, கோழிப்பண்ணை, விவசாயம் போன்றவற்றிற்கு இந்த திட்டம் பொருந்தாது. மேலும் தனிநபர் திருமண செலவு, வீட்டு செலவு போன்றவற்றிற்கு முத்ரா கடன் கிடையாது. இது முழுக்க முழுக்க தொழில் தொடங்கவும் தொழிலை விரிவுபடுத்தவும் மட்டுமே உருவாக்கப்பட்ட திட்டமாகும்.மேலும் கடன் தொகை, ரொக்கமாக, அதிகபட்சம் 10 ஆயிரம் வரைதான் கிடைக்கும். மாறாக, முத்ரா அட்டை வழங்கப்படும். இந்த அட்டையை பயன்படுத்தி மூலப் பொருட்கள் வாங்கும்போது கிரடிட் கார்டுபோல பயன்படுத்தலாம் அல்லது வாங்கும் சரக்குகள், இயந்திரம், உபகரண பொருட்கள் ஆகியவற்றுக்கான விலைப்பட்டியல் அடிப்படையில் தொகை பெறலாம்.
வங்கிகளுக்கு இலக்கு
பல பெரிய கடன்கள் வராக்கடனாகி, வங்கி மேலதிகாரிகள், சிபிஐ அலுவலகத்திற்கு பதவிக் காலத்திற்கு பிறகும் நடந்து வருவதைப் பார்க்கும், இப்போதைய வங்கி மேலாளர்கள், கடன் கொடுப்பதையே அதிலும் குறிப்பாக சிறு தொழில்களுக்கு பிணையம் இல்லாமல் கடன் கொடுக்க மிகவும் தயங்குகின்றனர்.
இதனை நிவர்த்தி செய்யும் வகையில், முத்ரா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வங்கி கிளையிலும் 25 பேருக்கு முத்ரா கடன் வழங்க வேண்டும் என்பது மத்திய அரசின் கட்டளை. உங்களிடம் தெளிவான வியாபாரத் திட்டம் இருந்து வங்கிகள் கடன் வழங்க மறுத்தால் ஒவ்வொரு மாவட்டத்தில் இருக்கும் முத்ரா அலுவலகத்தை அணுகி, உங்கள் குறைகளை சொன்னால் நிவர்த்தி கிடைக்கும். முத்ரா வலைத்தளத்திலும் உங்கள் குறைகளை பதிவு செய்யலாம்.
முத்ரா திட்டம் பற்றி மேலும் அறிய www.mudra.org.in என்ற இணையதளத்தில் பார்க்கவும்.
முத்ரா சில தகவல்கள்
- 2017- 18ல் 4,81,30,593 கடன்கள் மூலம் ரூ.2,46,437 கோடி வழங்கப்பட்டுள்ளது.
- முத்ராவின் கீழ், நாட்டிலேயே தமிழகம்தான் அதிகம் பயனடைந்துள்ளது.
- தமிழகத்தின் தொழில் பிரதேசமாக கருதப்படும் கோவை, திருப்பூர் ஈரோடு மாவட்ட தொழில்முனைவோர் முத்ராவை பயன்படுத்தலாம்.
- வங்கியில் கடன் பெற்று சிறு தொழில் செய்யும் அமைப்புகள் எண்ணிக்கை 5 % என்ற அளவிலேயே இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
- மற்றவர்கள், தனியார் நிதி நிறுவனங்களிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்கி தொழில் புரிகின்றனர்.
- வரவு, செலவு இவற்றை வங்கிகள் மூலமே செய்வதால், தொழில் வளர்ச்சிக்கு வங்கிகள் உதவ வாய்ப்புள்ளது.
உங்கள் கேள்வி; என் பதில்!
எம். நாதன், கருவலூர், திருப்பூர்:
எங்களிடம் நல்ல வியாபார திட்டம் இருந்தும் அடமானம் இல்லாததால் சிறு தொழில்களுக்கு வங்கிகள் உதவ மறுக்கின்றன.
பதில்: உங்களிடம் தெளிவான வியாபாரத் திட்டமும், அதை செய்து முடிக்கும் திறமையும் இருப்பதாக வங்கிகள் உணர்ந்தால், அதற்கு சொத்துப் பிணையம் இல்லாமல் முத்ரா மூலம் கடன் வழங்கும். அதிகபட்சமாக ரூ. 10 லட்சம் வரை கடன் பெற முடியும். நம்பிக்கையுடன் முயற்சி செய்யுங்கள். உங்கள் வங்கி பரிசீலிக்கவில்லை என்றால் உங்கள் மாவட்ட முத்ரா அலுவலகத்தை அணுகவும்.