ஸ்டார்ட்அப் கம்பெனிகள் என்றாலே புதுமையான ஐடியாக்களுடன் வருபவர்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. தாடியை சிறப்பாக வளர்ப்பது எப்படி என்று ஒரு ஸ்டார்ட்அப் கம்பெனி தொடங்கி அதில் பெரிய வெற்றியும் பெற்றிருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
அந்தக் காலத்தில் எல்லாம் தாடி வைத்திருந்தால் என்ன சோகம் உனக்கு, தேவதாஸ் ஆகிட்டியா? இல்லை சாமியார் ஆகிட்டியா? என கேட்பது வழக்கம். ஆனால் இந்த காலத்தில் தாடி வளர்ப்பது பேஷனாகி விட்டது. தாடியை எப்படி சிறப்பாக வளர்ப்பது என்பதற்காகவே உருவாக்கப்பட்டதுதான் பியார்டோ.
பியார்டோ (Beardo) என்ற இந்த கம்பெனியில் 45 சதவீதத்தை நமது புகழ் பெற்ற உணவு எண்ணெய் உற்பத்தியாளர் மாரிகோ 2017 ஆம் ஆண்டு வாங்கியது. தற்போது மீதமுள்ள 55 சதவீதத்தையும் கடந்த வாரம் வாங்கியிருக்கிறது. அப்படியெனில் மாரிக்கோ கம்பெனிக்கு தாடி வளர்ப்பவர்கள் மேல் எவ்வளவு பிரியம் என்பது உங்களுக்கு புரிந்திருக்கும்.
இந்த பியார்டோ கம்பெனி ஆரம்பிக்கப்பட்டு ஐந்து வருடங்கள் ஆகிறது. தாடி வளர்ப்பிற்காக தடவப்படும் எண்ணெய், தாடியை சுத்தம் செய்ய உதவும் சோப், வேக்ஸ் ஆகியவற்றையும் மற்றும் ஆண்களுக்கான முக அழகு சாதனங்களையும் தயாரிக்கிறது, ஆன்லைனிலும் விற்கிறது. வியாபாரத்தில் சக்கைப் போடு போட்டு வருகிறது.
பெண்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்வதில் மிகுந்த ஆர்வமாக இருப்பார்கள் என்பது அந்தக் காலம். ஆண்களும் தங்களை அழகாக்கிக் கொள்வதில் ஆர்வமாக இருப்பது இந்தக் காலம். ஆண்களின் அழகு சாதன மார்க்கெட்டின் மதிப்பு 2014 ஆம் வருடம் 3,200 கோடியாக இருந்தது, தற்போது அது 10,000 கோடி ரூபாயாக வளர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்களின் தாடி வளர வளர இந்த கம்பெனியும் வளரும் என்பதில் ஒரு சந்தேகமும் இல்லை. வளர்க தாடி!