நாட்டில் புதுமை மற்றும் தொடக்கத் திறன்களை வளர்ப்பதற்கு ஒரு வலுவான சுற்றுச்சூழல் அமைப்பதை இலக்காகக் கொண்டது ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம். தொழில் வளம்தான் இந்தியாவை நிமிர்த்தும், வேலை வாய்ப்புக்களை    உருவாக்கும், அதுவும் புதிய எண்ணங்களுடன் வரும் ஸ்டார்ட் அப்-கள் நாட்டை வளப்படுத்தும் என்பது தான் இந்த திட்டத்தின் எண்ணம். இதை மையமாக வைத்து ஆரம்பிக்கப்படும் கம்பெனிகள் தான்  ஸ்டார்ட் அப் கம்பெனிகள் எனப்படும்.

ஸ்டார்ட் அப் இந்தியா புரோகிராம் 2016ம் வருடம் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டது. இப்போது கிட்டதட்ட 4 வருடம் 7 மாதங்கள் ஆகிவிட்டது.

அரசாங்கத்தின் படி “ஸ்டார்ட் அப்” என்றால் உங்கள் நிறுவனம் பிரைவேட் லிமிடெட் கம்பெனியாகவோ அல்லது வரையறுக்கப்பட்ட பொறுப்பு உள்ள கூட்டு நிறுவனமாகவோ (எல்.எல்.பி.,) அல்லது கூட்டு நிறுவனவமாகவோ இருக்க வேண்டும். இந்தியாவில் 10 வருடங்களுக்குள் பதிவு செய்யப்பட்ட  நிறுவனமாக இருக்க வேண்டும். நிறுவனத்தின் வருட விற்பனை 100 கோடியை தாண்டியிருக்கக்கூடாது. முக்கியமாக உற்பத்தி முறைகள் அல்லது செயல்முறைகள் அல்லது சேவைகளில் புதுமை, மேம்பாடு அல்லது முன்னேற்றம் என்ற நோக்கத்துடன் அந்த கம்பெனி செயல்பட வேண்டும். மேலும் அதிக வேலைவாய்ப்பு உருவாக்கம் என்ற நோக்கமும் இருக்க வேண்டும்.

மேற்கண்ட கண்டிஷன்களை உங்கள் கம்பெனி பூர்த்தி செய்கிறது என்றால் நீங்களும் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனர்தான்.  அப்புறம் என்ன, உங்கள் நிறுவனத்தை “ஸ்டார்ட் அப் இந்தியா” வின் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டியது தான்.

ஸ்டார்ட் அப் என்றாலே பெரும்பாலும் சாப்ட்வேர் கம்பெனியாகத்தான் இருக்க வேண்டும் என்று பலரும் நினைக்கின்றனர். அது தவறு. 48 வகையான தொழில் பிரிவுகள் இருக்கின்றன. ஒவ்வொரு தொழில் பிரிவிலும் பல செக்டார்கள் இருக்கின்றன என்பதையும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.

ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் பதிவு செய்து கொள்வதால் என்ன நன்மைகள்? 

• உங்கள் கம்பெனியின் பொருட்களுக்கு டிரேட் மார்க் பதிவு  (Registration) செய்தால் அந்த செலவுகளில் 50 சதவீதம் மானியமாக கிடைக்கும்.

• அரசாங்கம் ஜெம் (GeM) திட்டத்தின் கீழ் தாங்கள் வாங்கும் பொருட்களை  உங்கள் ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் மூலமும் வாங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யும். இந்த ஜெம் திட்டத்தில் எப்படி இணைவது என்பதை  இந்த  லிங்க்  மூலம்  அறிந்து கொள்ளலாம். https://www.youtube.com/watch?v=yxKG84TaJJs

• ஸ்டார்ட் அப் கம்பெனிகளில் முதலீடு என்ற வகையில் இருக்கும் அரசாங்கத்தின் 10,000 கோடி ரூபாய் பண்டிலிருந்து முதலீடு (பண்டிங்) வாய்ப்புகள். இதை சிட்பி நிறுவனம் நிர்வகிக்கிறது. இதுவரை 323 கம்பெனிகள் இந்த பயனைப் பெற்றுள்ளன.

• வருமான வரியிலிருந்து 3 வருடங்களுக்கு 80 ஐஏசி பிரிவிலிருந்து விலக்கு. இதைப் பெறுவதற்கு முறையாக விண்ணப்பித்து  அதற்கான சான்றிதழ் பெற வேண்டும்.

• அறிவுசார் சொத்துரிமை (IPR – Intellectual Property Rights) களை எளிமையாக்குவதன் மூலம் ஸ்டார்ட் அப் கம்பெனிகளுக்கு  சுமையைக் குறைத்துள்ளது. IPR பதிவு கட்டணத்தில் 80 சதவீதம் தள்ளுபடி கிடைக்கிறது.

• நீங்கள் உங்களின் தனிப்பட்ட சொத்துக்களை ஸ்டார்ட் அப் கம்பெனி ஆரம்பிக்க விற்று அதை மூலதனமாக போட நினைத்தால், அந்த விற்று வந்த பணத்திற்கு மூலதன ஆதாய வரிகள் இல்லை. அதாவது கேபிடல் கெயின்ஸ் டாக்ஸ் இல்லை. 

• உங்களது நிறுவனத்தை ஸ்டார்ட் அப் இந்தியாவின் இணையதளத்தில் விளம்பரம் செய்யும் வாய்ப்பு. இது உங்களுக்கு பல ஆர்டர்களை பெற்று தரும்.

• தொழிலாளர் மற்றும் சுற்றுப்புற சூழ்நிலை விதிகள் சம்பந்தமான சட்டங்களை நடைமுறைப்படுத்த அந்த ஸ்டார்ட் அப் கம்பெனி சுய சான்றிதழ் (செல்ப் சர்ட்டிபிகேஷன்) கொடுக்கலாம் என்று விதிமுறைகள் தளர்த்தப்பட்டிருக்கின்றன. இதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால்  https://shramsuvidha.gov.in/startUp.action என்ற இணையதளத்தில் சென்று நீங்கள் அதற்கென கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுக்க  வேண்டும்.

ஸ்டார்ட் அப் இந்தியாவின் அரசாங்க இணையதளத்தின் முகவரி www.startupindia.gov.in. இதுவரை 33,200 ஸ்டார்ட் அப்கள் அங்கீகாரம் பெற்றுள்ளன.  இந்த இணையதளத்தில் 576 மெண்டர்கள் இருக்கிறார்கள். 83 முதலீட்டாளர்கள், 122 அக்சிலரேட்டர்கள், 567 இன்குபேட்டர்கள் இந்த இணையதளத்தில் இருக்கிறார்கள்

Spread the lovely business news