ஆன்மிகமும் அரசியலும், தெய்வீகமும் தேசியமும் என்பதெல்லாம் அரசியல் களத்தில் புழங்கி வரும் வேளையில் வணிக உலகில் ஆன்மிகமும் தொழில்நுட்பமும் பேசு பொருள் ஆகி வருகிறது. ஃபின்டெக், எடுடெக் என்பது போலவே இன்றைக்கு `ஸ்பிரிட்சுவல் டெக் (Spiritual Tech)’ என்று நாமகரணம் சூட்டப்பட்டு நிதி உலகிலும், தொழில்நுட்ப உலகிலும் ஆன்மிகத்துறையும் அது சார்ந்த சுற்றுலா, ஜோசியம், `ஜெம் தெரபி’, எண் கணிதம் (numerology), டாரட் கார்டு வாசிப்பு (tarot card reading), கைரேகைப் பார்த்தல் போன்றவையும் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
இத்துறைகளில் தொழில்நுட்பமும் புத்தாக்கத் தொழில் நிறுவனங்களும் சிறிது சிறிதாக ஊடுருவ ஆரம்பித்திருக்கின்றன. 2023 ஆம் ஆண்டு இத்துறை சார்ந்த சேவைகளின் வருவாய் சுமார் 58.6 பில்லியன் டாலராகும். இதுவே 2032 ஆம் ஆண்டில் 127 பில்லியன் டாலரைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்து மதம் சார்ந்த எந்தவொருக் குடும்பத்திலும் ஒருவர் பிறப்பதிலிருந்து அவர் மரணிப்பது வரை பல சந்தர்ப்பங்களில் பண்டிட் அல்லது ஜோசியரைக் கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இத்துறையில் அடங்கியிருக்கும் பலவிதமான சேவைகளில் மிகவும் பொதுவான ஒன்று பத்திரிகைகளில் வெளியாகும் வாராந்திர பலனாகும். எந்தவொரு துறையைப் போலவே இதுவும் 1997 ஆம் ஆண்டில் டிஜிட்டல் உலகத்தில் கால்பதிக்க ஆரம்பித்தது. சைபர் மீடியா எனும் நிறுவனம் `சைபர் ஆஸ்ட்ரோ’ எனும் ஒரு பிரிவை ஆரம்பித்தது. அதைத் தொடர்ந்து சில ஆண்டுகளுக்குப் பின் ஏர்செல் நிறுவனம் 2014 ஆம் ஆண்டு `ஆஸ்ட்ரோ படி (Astro buddy)” என்கிற சேவையை ஆரம்பித்தது.
பிரபல ஜோதிடர் பெஜன் தாருவாலாவின் உதவியோடு 2003 ஆம் ஆண்டு `கணேஷா ஸ்பீக்ஸ்” என்கிற நிறுவனத்தை ஹேமங் அருண்பாய் பண்டிட் ஆரம்பித்தார். இது ஆரம்பித்த போது இத்துறையின் சந்தை வருமானம் சுமார் 10 பில்லியன் டாலராக இருக்கும் எனக் கணிக்கப்பட்டது. ஏனெனில், இத்துறை பெரும்பாலும் சீரமைக்கப்படாத துறையாகவே (unorganized) செயல்பட்டு வந்தது. இத்துறையின் பொருத்தப்பாடு குறித்து அதன் நிறுவனர், `Astrology, Bollywood, Cricket, Devotion (ABCD)’ ஆகிய நான்கு துறைகளும் அதீத பணம்புரளும் துறைகளாகும் என்றார்.
காதல், உறவு முறை, பணி வாழ்க்கையில் வளர்ச்சி, தொழில்சார்ந்த முடிவுகள் எடுப்பது போன்றவற்றில் ஜோசியம் பெரும்பங்கு வகித்து வருகிறது. சமீபத்தில் `ஆஸ்ட்ரோடாக் (Astrotalk)’ என்கிற ஜோசிய ஸ்டார்ட்-அப் ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இதன் வரவால் பாரம்பரியமான ஜோசிய, கைரேகை பார்க்கும் தொழில், தொழில்நுட்ப உதவியோடு ஓர் உத்வேகம் பெற்றிருக்கிறது.
ஆன்மிக தொழில்நுட்பத் துறை சார்ந்த ஜோசியம், டாரட் கார்ட் பலன்கள், மெய்நிகர் கோவில் சுற்றுலா (virtual temple visits)’ போன்றவை நம்பிக்கை சார்ந்த நன்கொடைகளால் செழிக்கின்றன. இதற்கு பணம் செலுத்தும் முறையில் ஏற்பட்ட UPI புரட்சி, குறைந்த கட்டணத்தில் கிடைக்கும் இணைய வசதி, செயலி பண்பாடு (App culture) ஆகியவை ஆகும்.
இந்தியாவின் புத்தாக்க நிறுவன சூழலில் ஆன்மிகத் துறைக்கு நல்லதொரு வாய்ப்பு இருக்கிறது என `சுப்பூஜா (Shubhpuja)’ என்கிற நிறுவனத்தின் இணை நிறுவனர் தெரிவிக்கிறார். `ஃபெயித்டெக் (faithtech)’ அதாவது, ஜோசியம் போன்ற நம்பிக்கை சார்ந்த சேவைகள் அளிக்கும் துறையில் ஜோசியத்தின் பங்கு சுமார் 40 சதவீதம் என இத்துறை சார்ந்த ஒருவர் குறிப்பிடுகிறார்.
IMARC குழுமத்தின் சமீபத்திய கணிப்புப்படி, இந்தியாவின் ஆன்மிகச் சந்தை 2023 ஆ ஆண்டில் 58.36 பில்லியன் டாலரை எட்டிவிட்டதாகவும் 2028 ஆம் ஆண்டு இது 97.2 பில்லியன் டாலரைத் தொடும் எனவும் `ஆருடம்’ கூறியிருக்கிறது.
குடும்ப ஜோசியர்களைத் தேடும் காலம் போய் இப்போது நம்பகமான டிஜிட்டல் ஜோசியரைத் தேடும் காலம் வந்து கொண்டிருந்தாலும் இன்னும் இது ஆரம்பக் கட்டத்திலேயேதான் இருந்து வருகிறது. ஆஸ்ட்ரோ டாக் என்கிற நிறுவனத்தின் கடந்த ஆண்டு வருமானம் ரூ 640 கோடியாகும். இதனுடைய லாபம் சுமார் ரூ 130 கோடி! இன்றைக்கான தொழில்நுட்பம் சார்ந்த ஜோதிடச் சந்தையில் இதன் பங்குச் சந்தை சுமார் 85 சதவீதம். வெகுவிரைவில் இவர்கள் ஐபிஓ வெளியிட இருக்கிறார்கள்.
ஆன்மிகம் சார்ந்த துறையின் வளர்ச்சிக்குக் காரணங்கள் என்ன?
- மதம் சார்ந்து வீசும் அலை: மத்தியில் ஆளும் கட்சி ஆட்சிக்கு வந்தபின் இது உத்வேகம் அடைந்திருக்கிறது. இளைஞர்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் ஏதோவொரு வகையில் மதம் சார்ந்த நடவடிக்கைகளான சுற்றுலா, பூஜை, மெய்நிகர் கோவில் சுற்றுலா, பூஜை சேவைகள் ஆகியவை நோக்கி ஈர்க்கப்பட்டு வருகின்றனர்.
- டிஜிட்டல் பரிவர்த்தனையில் ஏற்பட்டிருக்கும் எளிமை
- உள்ளடக்கத்திலிருந்து வணிகம் வரை: காளான்கள் போல பெருகி வரும் யூடியூப் காணொளிகள், இலவச ஆலோசனை, சமூக ஊடகம் மூலம் பெறக்கூடிய பொதுவான ஜாதக, நட்சத்திரப் பலன்கள் போன்ற சேவைகள் பல தரப்பினரையும் கவர்ந்திழுப்பதோடு வணிகத்துக்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கிறது.
- Z தலைமுறையினரின் ஈர்ப்பு: 2023 ஆம் ஆண்டு தொடர்ந்து ஆறு மாதங்களாக 5 லட்சம் இளைஞர்களிடையே நடத்தப்பட்ட ஓர் ஆய்வின் மூலம் தெரியவந்த சுவராசியமான ஒரு தகவல் என்னவெனில் ஆய்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தவர்களில் சுமார் 58.3 சதவீதத்தினர் ஜோசிய ஆலோசனைகள் கேட்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். இதில் தலையாய ஆலோசனை `உறவுமுறை’ குறித்ததாகும்.
- அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்டபின், ஆன்மிகச் சுற்றுலாத் துறை உத்வேகம் பெறும் எனக் கருதப்படுகிறது.
வேவ்மேக்கர் என்கிற துணிகர முதலீட்டு நிறுவனம் மெய்நிகர் ஆன்மிகச் செயலியான `வாமா’ வில் 1.5 மில்லியன் டாலர் முதலீடு செய்திருக்கிறது. இது மெய்நிகர் வழிபாட்டுக்காகவும் பூஜைகளுக்காகவும் 2020 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு `தேவ்தாம் (DevDham) என்கிற நிறுவனம் சுமார் 6 மில்லியன் டாலரை முதலீடாகப் பெற்றது. இன்னொரு புத்தாக்க நிறுவனமான ஆஸ்ட்ரோடாக் நியூயார்க்கை மையமாகக் கொண்டு இயங்கிவரும் லெஃப்ட் லேன் கேப்பிடலிலிருந்து 20 மில்லியன் டாலரை முதலீடாகப் பெற்றிருக்கிறது.
இத்துறையில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் உத்வேகம் காட்டி வந்தாலும் சவால்கள் இல்லாமல் இல்லை. இதில் முக்கியமானது இத்துறையில் அறிமுகமின்மையும் இதன் நிலையற்ற தன்மையும் ஆகும். 1.1 பில்லியன் இந்து மக்களையும் 1 மில்லியன் கோவில்களையும் கொண்ட நமது நாட்டில் இது ஒரு பசுமையான துறையாகும். இத்துறையில் நுழையும் புத்தாக்க நிறுவனங்கள் நம்பிக்கையான சேவைகளை வழங்கும்பட்சத்தில் இதன் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என இத்துறையில் நீண்டகாலமாக இயங்கி வருபவர்கள் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.
இன்றைக்கு இந்தியாவில் முன்னணியில் இருந்து வரும் ஆஸ்ட்ரோடெக் நிறுவனங்கள்: AstroSage, Astrotalk, AstroVision, Astroyogi, Cosmic Insights, CyberAstro, GaneshaSpeaks, Guruji, InstaAstro, Melooha.
கோவில் சம்பந்தப்பட்ட சேவைகளை வழங்குவதில் முன்னணியில் இருந்து வரும் நிறுவனங்கள்:
3ioNetra, DevDham, DevSeva, EPuja, MyMandir, Online Prasad, Shubhpuja, SriMandir/AppsForBharat, Utsav, Vama.
ஆக, இந்தியாவின் `ஸ்பிரிட்சுவல்டெக்’ துறையானது மாற்றத்தக்க வளர்ச்சிக்குத் தயாராக இருக்கிறது என்பதை அந்த `ஆண்டவனே’ தீர்மானித்திருப்பதாகத் தோன்றுகிறது!