காமிக்ஸ் என்றால் பலருக்கு சிவகாசி முத்து காமிக்ஸின் முத்தான புத்தகங்கள் தாம் நியாபகத்திற்கு வரும். அந்த அளவிற்கு அவர்களின் இரும்புக் கை மாயாவிலிருந்து பல கேரக்டர்கள் நமக்கு பரிச்சயமானவை. அதன் ஸ்தாபகர் செளந்திரபாண்டியன் தொழில் நிமித்தமாக வெளிநாடுகளுக்கு செல்லும் போது அங்கிருக்கும் காமிக்ஸ் புத்தகங்களை பார்த்து அதனால் ஈர்க்கப்பட்டு அவற்றை தமிழில் வெளியிடும் உரிமைகளை வாங்கி முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் என்று வெளியிட ஆரம்பித்தார். அது குழந்தைகளிடையே மிகவும் வேகமாக புகழ் பெற ஆரம்பித்தது. ஆனால் இவர்களின் காமிக்ஸ் புத்தகங்கள் வெளிநாட்டில் இருந்து காப்பிரைட்ஸ் மூலமாக வாங்கப்பட்டு மொழிபெயர்ப்பு மட்டும் செய்யப்பட்டு வெளியிடப்பட்டதால் கதைகளுக்கு படங்கள் வரையும் வேலையில்லை. முன்பு போல தமிழில் காமிக்ஸ் புத்தகங்கள் படிக்கும் ஆர்வம் மக்களுக்கு இல்லையென்றாலும், ஆங்கில காமிக்ஸ்கள் அதிகம் இடத்தை ஆக்கிரமித்து கொண்டாலும், இந்த நிறுவனம் ஆர்வம் காரணமாக இன்னும் 50 வருடங்களாக காமிக்ஸ் புத்தக வெளியீட்டில் இருக்கிறார்கள்.
இவர்கள் தவிர ஓவியக் கலைஞர்களை வைத்து காமிக்ஸ் கதைகளுக்கு படங்கள் வரைந்து வெளியிடும் கம்பெனிகளும் பல இருக்கின்றன. அமர் சித்ர கதா போன்றவை.
அந்த காலத்தில் காமிக்ஸ் கதைகளுக்கு படம் வரைவது என்றால் அதிக நாட்கள் எடுக்கும். ஒவ்வொரு படத்திலும் அந்த காமிக்ஸ் கேரக்டர்களின் முகத்தை சரியாக கொண்டுவருவது என்பது ஒரு பெரிய கலை. அதை சிறந்த ஓவியக் கலைஞர்களால் தான் கொண்டு வர முடியும். பின்னர் இந்த துறையில் டெக்னாலஜிகள் வளர ஆரம்பித்தன. தற்போது வந்திருக்கும் டெக்னாலாஜி மிகவும் ஆச்சரியமான ஒன்றாகும். இதை ஒரு ஸ்டார்ட் அப் சாதித்திருக்கிறது.
2022 வருடத்தில் சானித்யா நரேன், லலித் குடிபதி மற்றும் சௌம்யதீப் முகர்ஜி ஆகியோரால் நிறுவப்பட்ட டாஷ்டூன் (Dashtoon) என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் காமிக்ஸ் உருவாக்கத்தில் ஒரு புதிய அணுகுமுறையைக் கொண்டுவருகிறது, இது வரையும் திறன் இல்லாதவர்கள் கூட காமிக்ஸ் கதைகளுக்கு படங்கள் வரைய முடியும். இது ஆர்ட்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ் டெக்னாலஜியை உபயோகித்து கதைளை வசீகரிக்கும் காமிக்ஸாக மாற்றுவதற்கான ஒரு தளத்தை வழங்குகிறது.
இவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால் புதுமையான டாஷ்டூன் ஸ்டுடியோவைப் பயன்படுத்தி, படைப்பாளிகளின் ஸ்டோரி போர்டுகளைப் பதிவேற்றுகிறார்கள், பிளாட்ஃபார்ம் லைப்ரரியில் இருந்து கேரக்டர்களை தேர்ந்தெடுக்கிறார்கள் அல்லது காட்சிகளை உருவாக்க படங்களைப் பதிவேற்றுகிறார்கள், தயாரிப்பு நேரத்தை ஒரு எபிசோடிற்கு 40-50 மணி நேரத்திலிருந்து வெறும் 5-6 மணிநேரமாக வெகுவாகக் குறைக்கிறார்கள். இவர்களின் இந்த செயல்திறன் தினசரி எபிசோட் வெளியீடுகள் வெளிவர உதவுகிறது. கதை சொல்லுபவர்களை, எழுத்தாளர்களை ஓவியர்களாக மாற்றும் அதிசயத்தை இந்த ஸ்டார்ட் அப் செய்து வருகிறது.
கிரியேட்டர்கள் கதைகளை கோடிட்டுக் காட்டுகிறார்கள், முக்கிய நபர்களின் குணாதிசயங்கள் மற்றும் வரைபட ஸ்டோரிபோர்டுகளை உருவாக்குகிறார்கள், டாஷ்டூனின் தொழில்நுட்பம் இந்த கூறுகளை மெருகூட்டப்பட்ட காமிக் வெளியீட்டாக மாற்றுகிறது. இது ஒரு ஆச்சரியம் தான்.
காமிக்ஸ் சந்தை
காமிக்ஸ் சந்தை பெரியதாகும். Allied Market Research படி 2022 ஆம் ஆண்டில் உலகளாவிய காமிக் சந்தை 120,000 கோடி ரூபாய்களாக இருக்கிறது. மேலும் 2032 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 200,000 கோடி ரூபாய்களாக உயரும் வாய்ப்புகள் அதிகம்.இவர்களின் இணயதளம் www.dashtoon.com சென்று பாருங்கள். நீங்களும் ஒரு காமிக்ஸ் புத்தகம் கொண்டு வரலாம்.