இந்த நாடே பெருந்தொற்று நோயுடன் போராடிக் கொண்டிருக்கும்போது ‘Necessity is the mother of invention’ (தேவைதான் கண்டுபிடிப்பின் தாய்) என்ற வாசகத்துக்கு இணங்க, சில புதிய முயற்சிகளும் கண்டுபிடிப்புகளும் நாள்தோறும் வந்து கொண்டிருக்கின்றன. இப்போது எல்லா அலுவலகங்கள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் என எங்கு சென்றாலும் உள்ளே நுழையும்போதே சானிடைசர் பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்ய வேண்டியிருக்கிறது. சானிடைசரை டிஸ்பென்ஸ் செய்வதற்காக காலால் பெடல் மூலம் இயக்கப்படும் சானிடைசர் டிஸ்பென்சர் என்ற ஒரு இயந்திரம் கிட்டத்தட்ட கட்டாயம் இருக்க வேண்டும் என்ற சூழ்நிலை உருவாகியிருக்கிறது. இப்போது சந்தையில் விற்றுக் கொண்டிருக்கும் இயந்திரங்கள் ஸ்டீல் ஆங்கிள்களை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. அதற்கு மாற்றாக கார்ட்போர்டு என்ற காகித அட்டைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் சானிடைசர் ஸ்டாண்டுகளை பொறியியல் பட்டதாரி இளைஞர் திரு. கார்த்திக் ரத்தினம் ஒரு ஸ்டார்ட்அப்தொழிலாக ஆரம்பித்து இந்த தயாரிப்பை வெற்றிகரமாக சந்தைக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். அவருடன் நாம் அலைபேசியில் தொடர்பு கொண்ட கலந்துரையாடலின் விவரங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.