கடந்த வாரம் துபாயில் பலத்த மழை பெய்தது. ஒரு வருடம் முழுவதும் பெய்யும் சராசரி மழையின் அளவை விட இது பல மடங்கு அதிகமாக இருந்தது. விமான நிலையத்தையும் மூட வைத்தது. இதற்கு மேக விதைப்பு என்கிற கிளவுட் சீடிங்தான் (cloud seeding) காரணம் என விஞ்ஞானிகள் ஏற்கவில்லை. மாறாக, காலநிலை மாற்றமும் அது உருவாக்கும் ஒழுங்கற்ற வானிலை முறையும் தான் இதற்குக் காரணம் என அவர்கள் கூறினார்கள். மேக விதைப்பு தான் காரணமா, இல்லையா என்பது குறித்து நாம் இங்கு விவாதிக்கப் போவதில்லை. மாறாக, இது சார்ந்த பொருளாதாரத்தைப் பார்ப்போம்.
அதற்கு முன்பாக, மேக விதைப்பு பற்றிச் சுருக்கமாகப் பார்க்கலாம்.
1946 ஆம் ஆண்டில், நோபல் பரிசு வென்றவரும் ஆராய்ச்சி விஞ்ஞானியுமான இர்விங் லாங்முயர் (Irving Langmuir) விமான இறக்கைகளில் பனிக்கட்டி உருவாவது பற்றி நியூயார்க்கில் இருந்த ஜெனரல் எலெக்ட்ரிக் லேப்ஸில் ஆய்வு செய்து கொண்டிருந்தார்.
அவருக்கு உதவ வின்சென்ட் ஷேஃபர் (Vincent Schaefer) இருந்தார். இவர் உறைவிப்பான் (freezer) தொடர்பாக தனது ஆய்வை மேற்கொண்டிருந்தார். இவர் கண்டுபிடிப்பின் மூலம் “மேகங்கள் அடிப்படையில் அதிகக் குளிரில் இருக்கும் நீரின் பைகள் என்றும் மழை என்பது உண்மையில் வானத்தில் இருந்து விழும் பனிக்கட்டிப் படிகங்கள் என்றும் அவை பூமியை நோக்கி விழும்போது உருகுகிறது” எனவும் அறிந்து கொண்டார். .
உறைபனியைத் தூண்டுவதற்கு மேகம் எனப்படும் நீரின் பைகள் மீது உலர்ந்த பனிக்கட்டிகளைக் (dry ice) தூவ முடிவு செய்த லாங்முயரும் ஷேஃபரும் ஒரு விமானத்தை வானத்தில் பறக்கவிட்டு அக்காரியத்தைச் செய்ய அவை பூமியை நோக்கிச் செல்லும் வழியில் மழையாக உருமாறி செயற்கை மழையாகப் பொழிந்தது.
ஆக, இப்படித்தான் மனிதர்கள் வானிலையை மாற்ற அல்லது இயற்கையை வளைக்கக் கற்றுக்கொண்டார்கள், இதன் மூலம் சில்வர் அயோடைடும் இதற்கு உதவும் எனக் கண்டறிந்தனர். .
நாளடைவில் மேக விதைப்பு என்பது ஒரு வணிகமானது. உலகின் மிகப்பெரிய மேக விதைப்பு முறையில் ஈடுபட்டிருக்கும் சீனா (இதிலும் அவர்கள்தானா?!) ‘வானிலையை மாற்றியமைக்கும் அலுவலகம் (Weather Modification Office) ‘ என்கிற ஓர் அமைப்பை உருவாக்கி சில்வர் அயோடைடை மேகங்களில் தூவி மழை பெய்யச் செய்தனர். மேலும் வடக்குப் பகுதி தண்ணீர் பற்றாக்குறையிலிருந்து பொருளாதார இழப்புகளை எதிர்த்துப் போராடவும் முயற்சி எடுக்க ஆரம்பித்தது.
சீனாவின் மிக நீளமான நதியான யாங்சே நதியும் (Yangtze River), அதன் இரண்டாவது பெரிய நதியான மஞ்சள் நதியும் நாட்டின் மிகப்பெரிய நன்னீர் ஆதாரங்களாக இருந்து வருகிறது.
தண்ணீர் நெருக்கடியிலிருந்து மீள. பல தசாப்தங்களுக்கு முன்னர், ”தெற்கிலிருந்து வடக்குக்கு தண்ணீரை திசை திருப்பும் திட்ட”த்தில் (South to North Water Diversion project) சுமார் 80 பில்லியன் டாலர் முதலீடு செய்தது. தண்ணீர் நெருக்கடியால் கடுமையாகப் பாதிக்கப்படாத யாங்சேயிலிருந்து அதன் வடக்குப் பகுதிகளுக்குத் தண்ணீரை மாற்றுவதே இதன் நோக்கமாகும். நீளமான சுரங்கப்பாதைகள் வாயிலாக வடக்கே இருக்கும் மஞ்சள் ஆற்றின் ஆற்றுப்படுகைக்கு தண்ணீர் செல்லும் படி இத்திட்டம் வடிவமைக்கப்பட்டது . மேலும் இந்த நீர் வடக்குப் பகுதியிலேயே நிலை கொண்டிருப்பதால் அப்பகுதியில் செயற்கையாக மழை பெய்யச் செய்ய மேக விதைப்பு அமைப்புகளையும் ஈடுபடுத்தியது.
சீனாவின் தெற்கு நீர் ஆதாரங்களும் இனி வரும் காலங்களில் வறண்டு போகலாம். சீனாவின் மேக விதைப்பு முயற்சிகள் மழையை மட்டும் பெய்யச் செய்வதோடு நின்றுவிடவில்லை. 2008 ஆம் ஆண்டில், பெய்ஜிங் ஒலிம்பிக்கின் போது மழை பெய்யாமல் இருக்க வேண்டும் என்பதற்காக மழைப் பொழிவைத் தடுக்கும் நுட்பத்தையும் கண்டறிந்தது!
ஆம்! நீங்கள் படித்தது சரிதான். ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கு முன்னதாக மழையைத் தூண்டுவதன் மூலம் அப்பகுதியில் இருக்கும் மேகங்களை செயற்கை முறையில் முன்கூட்டியே களையச் செய்தது. இதனால் ஒலிம்பிக் போட்டிகள் மழையின் இடையூறு இல்லாமல் நடந்தேறியது.
சீனாவின் இந்த முயற்சிகள் அனைத்தும் 2025 ஆம் ஆண்டளவில் 5.5 மில்லியன் சதுர கிலோமீட்டருக்கு மேல் செயற்கையாக மழை அல்லது பனிப்பொழிவை ஏற்படுத்துவதற்காக அதன் வானிலை மாற்ற அமைப்புகளை விரிவுபடுத்துவதற்கு உண்மையில் ஊக்கமளித்துள்ளது என்பதை அறியும் போது ஆச்சரியமளிப்பதோடு ஆதங்கத்தையும் ஏற்படுத்துகிறது.
இந்த முயற்சியால், சீனாவைச் சுற்றியிருக்கும் மற்ற பகுதிகள் மழை பெற முடியாமல் போனால் அப்பகுதிகள் என்னவாகும்? இதே கேள்விதான் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மேக விதைப்பு திட்டத்தில் பணிபுரிந்த பின்லாந்து நாட்டு விஞ்ஞானி ஹன்னெல் கோர்ஹோனனுக்குள்ளும் (Hannele Korhonen) எழுந்தது. இந்த மேக விதைப்பு முறையானது உண்மையில் மேகங்கள் வேறொரு பகுதிக்குச் செல்வதற்கு முன் ஒரு குறிப்பிட்ட நாட்டில் அல்லது பகுதியில் மழையைப் பொழியச் செய்யும். சொல்லப் போனால் வேண்டாத நாட்டுக்கு எதிராக இது ஓர் ஆயுதமாகக் கூட இனிவரும் நாள்களில் பயன்படுத்தப்படக்கூடும்.
இது ஒன்றும் புதிது இல்லை. உண்மையில், 1970 களில் வியட்நாம் போரின் போது, பருவமழையை நீட்டித்து அதனால் சாலைகளை வழுக்கும்படி செய்து எதிரிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் சாலையோரங்களில் நிலச்சரிவுகளை ஏற்படுத்தும் வகையில் வானிலையை அமெரிக்கா மாற்றியமைத்தது என அதன் மீது குற்றம் சாட்டப்பட்டது.
ஆக, மழையைப் பெய்ய வைப்பது என்பது பொருளாதாரத்தைப் பொருத்தவரையில் வரமா/சாபமா என்பதோடு வானத்தின் எந்தப் பகுதியை எந்த நாடு சொந்தம் கொண்டாடுகிறது என்ற கேள்வியும் இனி உலகளாவிய அளவில் எழக்கூடும். இதற்கென சர்வதேசக் கொள்கைகள் உருவாக்கப்படும் வரை இதற்குத் தீர்வு காண்பது கடினமாகும்.
(`ஃபின்ஷாட்’ என்கிற இணையதளத்தில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்)