மை, எழுதுபொருள் உலகில் அதிலும் குறிப்பாக இந்தியாவில் கேம்லின் ஒரு வீட்டுப் பெயர். 1931 ஆம் ஆண்டு பரசுராம் தண்டேகர் என்ற பட்டதாரி எழுத்து மை தயாரிக்கும் வணிகத்தைத் தொடங்கினார்.  மூத்த சகோதரர்  கோவிந்த் தண்டேகரும் வணிகத்தில் சேர்ந்து   தண்டேகர் & கோ நிறுவனம் உருவானது.

மை நன்றாக இருந்ததால் உள்ளூர் மற்றும்  பிற மாநிலங்களில் இருந்தும் தேவைகள் உயரத் தொடங்கியது. அந்த நேரத்தில்  ஏற்கனவே சந்தையில் பல பிரபலமான பிராண்டுகள் இருந்தன.  சகோதரர்கள்  ஃபவுண்டன்  பேனா உற்பத்தி தொடங்க நினைத்தனர்.

“கேம்லின்” என்ற பெயர் ” Camel-ஒட்டகம்” மற்றும் “Ink -மை” என்ற இரண்டு வார்த்தைகளையும் இணைத்ததில் இருந்து உருவானது, பின்னாளில் பேனா, பென்சில், ரப்பர், ஜியாமெட்ரி  பாக்ஸ், நோட்டுப் புத்தகங்கள், வண்ணங்கள் போன்ற பல்வேறு எழுது பொருள் துறை சம்பந்தமான பொருள்களை தயாரித்து வந்தாலும்   ஆரம்பத்தில் அவர்கள் மை தயாரிப்பில் தான் ஈடுபட்டார்கள் என்பதனால் அந்த பெயரே பிராண்டின் பெயராக விளங்கி வருகிறது. 

“கேம்லின் என்ற பெயர் வந்ததற்கான பின்னணி சுவாரசியமானது. சகோதரர் இருவரும் தங்களது பிராண்டிற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று விவாதித்துக் கொண்டிருந்த போது ஒரு சிகரெட் விளம்பரம் அவர்களது கவனத்தை ஈர்த்தது.”I’d walk a mile for a Camel.” ஒட்டகத்திற்காக ஒரு மைல் நடப்பேன் என்ற வாசகத்துடன் ஒட்டகத்தின் படம் அந்த விளம்பரத்தில் இடம் பெற்றிருந்தது. தண்டேகர் சகோதரர்கள் ஒட்டகம் என்ற வார்த்தை அவர்களது ஃபவுண்டன் பேனாவின் மை, உறுதியான தன்மை, தோழமை, நீடித்த தன்மை ஆகியவற்றின் சிறந்த உருவகமாக அவர்கள் கண்டனர். ஒட்டகம் தனது திமிலில் உள்ள தண்ணீருடன் பாலைவனத்தின் கடுமையான சூழ்நிலை தாங்கிக் கொண்டு யாருடன் இருந்தாலும் அவர்களுக்கு தோழனாக இருக்கிறது. ஒருமுறை பேனாவில் மை நிரப்பப்பட்டால் அந்தப் பேனா பல மைல்களுக்கு எழுதும் என்பதோடு நல்ல நேரங்களிலும் கெட்ட நேரங்களிலும் மாணவர்களுக்கு ஒரு நிலையான துணையாக இருக்கும் என்ற கருத்தை வெளிப்படுத்தும் சிறந்த உருவகமாகக் கண்டனர்.

1958 ஆம் ஆண்டில், கேம்லின் போஸ்டர் கலர் வண்ணங்கள் வெளியிடப்பட்டன, இது ஓவியக் கலைஞர்களிடமும் மாணவர்கள் மத்தியிலும்  விரைவாக பிரபலமடைந்தது. அந்த நாளில் மாணவர்களுக்கான பள்ளி பாடத்திட்டத்தில் ஓவியம் அவ்வளவு பிரபலமாக இல்லை. மிகப்பெரிய ஓவியக் கல்லூரிகளில் மட்டுமே வெளிநாட்டு கலைப் பொருள்கள் பயன்படுத்தப்பட்டன. 1960 களின் பிற்பகுதியில், தனது விற்பனையை பெருக்க வேண்டும், பிராண்டையும் பிரபலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மாவட்ட அளவில் ஓவியப் போட்டிகளை நடத்த தொடங்கியது கேம்லின். சில வருடங்களில் இந்த முயற்சி மிகப் பெரும் வரவேற்பை பெற்றது. 70களின் பிற்பகுதியில், கேம்லின் இது போன்ற ஓவிய போட்டிகளை தேசிய அளவில் நடத்த, பல்லாயிரக்கணக்கான பள்ளிகள் பங்கேற்று வருகின்றன. 1972 ஆம் ஆண்டு மெக்கானிக்கல் பென்சில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. பொறியாளர்களும் மாணவர்களும் மெக்கானிக்கல் பென்சில்களுக்கு வெளிநாட்டு பிராண்டுகளை எதிர்பார்த்திருந்த காலகட்டத்தில்  இந்த புதுமையான முயற்சி பெரிதளவு வரவேற்பைப்  பெற்றது. 1984 ஆம் ஆண்டில், நிறுவனம் தனது பிரபலமான தயாரிப்பு பிராண்டுடன் கார்ப்பரேட் அடையாளத்தை சீரமைக்கும் வகையில் தண்டேகர் & கோ. என்ற பெயரை கேம்லின் லிமிடெட் என மாற்றி அமைத்தது. தொடர்ந்து நவீனமயமாக்கல், மேம்பட்ட உற்பத்தி நுட்பங்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருந்தது.

முன்னணி ஜப்பானிய ஸ்டேஷனரி வணிக நிறுவனமான கோகுயோ கோ லிட், Kokuyo Co. Ltd, 2011 இல் கேம்லின் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை வாங்கிய பிறகு  கோகுயோ கேம்லின் லிட் உருவானது. இந்த மூலோபாய கூட்டணியின் மூலம் அதிநவீன ஜப்பானிய தொழில் நுட்பத்துடன் கேம்லின் உலகளாவிய சந்தைக்கு அணுக முடிந்ததோடு மட்டுமல்லாமல், தனது தயாரிப்புகளின் வரம்பை விரிவுபடுத்தி அதன் தரத்தை உயர்த்தியது. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்டேஷனரி பொருள்களை தயாரித்து வரும் கேம்லின் நிறுவனத்தின் சென்ற ஆண்டு வர்த்தகம் ரூ.218 கோடி.

கேம்லின் இப்போது ஜப்பானிய நிறுவனத்திற்கு சொந்தமானதாக இருந்தாலும் இந்தியாவில் நன்கு அறியப்பட்ட, மரியாதைக்குரிய பிராண்டாக தொடர்ந்து இருந்து வருகிறது. சந்தையில் வலுவான இருப்பைக் கொண்டு தரம், புதுமை, வாடிக்கையாளர் திருப்தி ஆகியவற்றில் அதன் அர்ப்பணிப்புக்காக அறியப்பட்டு வரும் பிராண்ட் கேம்லின் என்றால் அது மிகையில்லை. சாதாரண மையில் இருந்து ஆரம்பித்த வணிகம், முன்னணி ஸ்டேஷனரி  பிராண்டிற்கான கேம்லினின் பயணம், அதன் தாங்குதன்மை, புதுமை மற்றும் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்று. இந்த பிராண்ட் இந்தியாவில் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறியது மட்டுமல்லாமல் கல்வித் துறையிலும் கலைத்துறையிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்திருக்கிறது!

Read More