இந்தியாவில் வளர்ப்புப் பிராணிகள் அல்லது செல்லப் பிராணிகள் சார்ந்த சந்தையானது வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் நுகர்வோர்களின் மாறிவரும் மனநிலையும், செல்லப் பிராணிகள் வளர்ப்போரிடையே படிப்படியாக மாறிவரும்  நடத்தைகளும் ஆகும். 

செல்லப் பிராணிகள் சார்ந்த சந்தையின் மொத்த விற்பனையில் அதற்கான உணவுப் பொருள்களின் பங்களிப்பு 70 சதவீதமாகவும், ஷாம்பூ, கண்டிஷனர், கூடுதல் சத்துணவு, மற்றும் செல்லப் பிராணிகளுக்குத் தேவையான பொருள்கள் ஆகியவை மீதமுள்ள 30 சதவீதமாகவும் இருக்கிறது. இச்சந்தையின் கூட்டு வளர்ச்சி சுமார் 20 சதவீதமாகும். இச்சந்தையானது 2025 ஆம் ஆண்டில் ரூ 20,000 கோடிக்கும் மேலான விற்பனையைத் தொடும் என இத்துறை சார்ந்தவர்கள் கணித்திருக்கின்றனர். 

`செல்லப் பிராணிகளை வளர்ப்பதில் இள வயது பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இவர்களுடைய குழந்தைகள் பெரும்பாலும் ஆறு வயதுக்கு குறைவான வயதை உடையவர்களாக இருக்கிறார்கள்’ என்று இத்துறை சார்ந்த நிறுவனமொன்றின் பொது மேலாளர் குறிப்பிடுகிறார். 

பெருநகரங்கள் மற்றும் நகரங்களில் வாழ்பவர்கள் பூனை வளர்ப்பதில் நாட்டம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். நாய் வளர்ப்பதில் கிராமத்தினர், நகரங்களில் வாழ்பவர் இரு தரப்பினரும் ஏறக்குறைய சம அளவில் இருக்கிறார்கள். 

இந்தியாவில் செல்லப் பிராணிகள் வளர்க்கும் குடும்பங்களின் எண்ணிக்கை நகர்ப்புறத்தில் 25 சதவீதமாக இருந்து வருகிறது. இது 2025 ஆம் ஆண்டில் 35 சதவீதத்தைத் தொடக்கூடும். 

பிராணிகளிடையே பரிவு காட்டுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தாங்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு சிறப்பான பொருள்களையும் சேவைகளையும் வாங்குவதற்கு அதன் உரிமையாளர்கள் அல்லது `பெற்றோர்கள்’ தயங்குவதில்லை. 

செல்லப் பிராணிகளுக்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்கு சந்தாவின் அடிப்படையிலான சேவைகள் அதிகரித்து வருகின்றன. அது போல செல்லப் பிராணிகளின் நலன் மீது அக்கறை கொண்டவர்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் வகையில் அதன் நலனைத் தொடர்ந்து கண்காணிப்பதற்குத் தேவையான நவீன தொழில்நுட்ப அடிப்படையிலானக் கருவிகளும், புதுமையான தீர்வுகளும் அதிகரித்து வருகின்றன. 

இத்துறையில் இயங்கிவரும் முக்கியமான ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள்: Heads Up For Tails (HUFT), Just Dogs & Zigly, Supertails, Vetic (இது பிராணிகளுக்கென வைத்தியசாலைகளை நிர்வகித்து வருகிறது) மற்றும் Wiggles ஆகும். இது வரை இத்துறை சார்ந்த நிறுவனங்கள் சுமார் 170 மில்லியன் டாலர் மூதலீட்டை ஈர்த்திருக்கின்றன. இதில் Drools என்கிற ஸ்டார்ட்-அப் மட்டும் L Catterton  என்கிற முதலீட்டாளரிடமிருந்து 60 மில்லியன் டாலரை முதலீடாகப் பெற்றிருக்கிறது. இது போல HUFT என்கிற ஸ்டார்ட்-அப் 37 மில்லியன் டாலரையும், Just Dogs என்கிற நிறுவனம் 7 மில்லியன் டாலரையும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இவை தவிர Sploot Products, Zoivane, Snouters போன்ற பல நிறுவனங்கள் இத்துறையில் காலடி பதிக்க ஆரம்பித்திருக்கின்றன. 

செல்லப் பிராணிகளுக்குக் காப்பீடு எடுப்பது என்பது ஆரம்பகட்டத்தில் இருந்தாலும் இது குறித்த விழிப்புணர்வும், விருப்பமும் அதிகரித்து வருகிறது. இதில் செல்லப் பிராணிகளுக்கு ஏற்படும் உடல்நலமின்மை, காயம், விபத்தில் மரணித்தல், அறுவை சிகிச்சை, மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவது, செல்லப் பிராணிகளால் பாதிப்புக்கு உள்ளாகும் மூன்றாம் தரப்பினருக்கான நஷ்ட ஈடு என அனைத்தும் அடங்கும்.  செல்லப் பிராணிகளுக்கானக் காப்பீட்டு பிரிமீயம் அதனுடைய வயது, அளவு, எந்த இனத்தைச் சேர்ந்தது, அதனுடைய உடல் ஆரோக்கியம், எவ்வளவு தொகைக்குக் காப்பீடு தேவை ஆகியவற்றைப் பொறுத்ததாகும். தற்சமயம் ஓரியண்டல் இன்சூரன்ஸ், பஜாஜ் அலியான்ஸ், நியூ இண்டியா அஷ்யூரன்ஸ், ஃப்யூச்சர் ஜெனராலே ஆகியவை செல்லப் பிராணிகளில் பிரதானமாக நாய்களுக்கான காப்பீட்டுச் சேவையை வழங்கி வருகின்றன. 

இத்துறைக்கான முதலீடு அதிகரித்து வருவதால் இதற்கென தெளிவான நெறிமுறைகளையும், தரநிலைகளையும் வடிவமைப்பது அவசியமென இத்துறையில் இயங்கி வரும் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். இதோடு செல்லப் பிராணிகளுக்கான உணவு தயாரிக்கும் நிறுவனங்களையும் `உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத் தொகை (Production Linked Incentive – PLI)’ திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்கிற கோரிக்கையையும் முன் வைத்திருக்கின்றனர். இத்துறை சார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்ய முதலீட்டாளர்களும் ஆர்வம் காட்டி வருவது நல்லதொரு சமிக்ஞை ஆகும். 

செல்லப் பிராணிகள் குறித்த சில சுவராசியமான புள்ளிவிவரக் கணிப்புகள் (2024 ஆம் ஆண்டு மார்ச்  வரை):

  • 2024 ஆம் ஆண்டில் செல்லப் பிராணிகளின் எண்ணிக்கை 42 மில்லியனைத் தொடும்
  • இதில் நாய்களின் எண்ணிக்கை சுமார் 36.5 மில்லியனாகவும் பூனைகளின் எண்ணிக்கை 5.5 மில்லியனாகவும் இருக்கும்
  • செல்லப் பிராணிகள் தொடர்பான பொருள்களின் சந்தைப் பங்கு மொத்த விற்பனையில் 20 சதவீதம். அதாவது 0.75 பில்லியன் டாலர், இதன் கூட்டு வளர்ச்சி அடுத்த 10 ஆண்டுகளில் 23.7 சதவீதமாக இருக்கும் என கணக்கிடப்பட்டிருக்கிறது. 

செல்லப் பிராணிகள் ஆரோக்கியம் சார்ந்த சேவையின் மதிப்பு சுமார் 1.25 பில்லியன் டாலர். இதன் கூட்டு வளர்ச்சி சுமார் 8.6 சதவீதமாக இருக்கும் எனத் தெரிகிறது.

Read More