சுட்டெரிக்கும் வெயில்…. 44 நாள் கொண்டாட்டம்… 543 தொகுதிகள்…சுமார் 96.8 கோடி வாக்களர்கள்… 17 ஆவது நாடாளுமன்றத்துக்கான தேர்தல்!!
இந்தத் தேர்தல் திருவிழாவால் பல திட்டங்களின் செயல்பாடுகள் ஒரு தேக்க நிலையை சந்தித்து வருகின்றன. அது ஏன்? எப்படி?
ஒரு நாள் தேர்தல் ஊர்வலத்திலோ அல்லது பரப்புரையுரையிலோ கலந்து கொண்டால் ரூ 800 முதல் ரூ 1000 வரைக் கொடுக்கப்படுவதோடு சாப்பாடு, தங்குவதற்கு இடம், போக்குவரத்து வசதியும் வழங்கப்படுகிறது. எனவே தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியான சில தினங்களுக்குப் பிறகு வட இந்தியாவிலிருந்து தென் மாநிலங்களுக்குப் புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் பெரும்பாலோர் அவரவர் சொந்த ஊருக்குத் தற்காலிகமாகத் திரும்பிச் சென்றுவிட்டனர்.
பெரும் நிறுவனங்களின் தொழிலாளர்கள் தேவைக்கு ஆட்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பும் நிறுவனங்கள் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தொழிலாளர்கள் கிடைக்காமல் அல்லாடிக் கொண்டிருக்கின்றன. தென்மாநில நகரங்களில் தொழிலாளர்கள் கிடைப்பது அரிதாகி வரும் நிலையில் சில நிறுவனங்கள் வழக்கத்துக்கு மாறாக சம்பளம் / கூலி அதிகம் கொடுக்க சம்மதித்து வட மாநிலங்களிலிருந்து சிரமப்பட்டு ஆட்களை தேவைப்படும் நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கிறது.
இந்திய வரலாற்றிலேயே இரண்டாவது முறையாக, அதிக நாள்கள் இடைவெளியில் அதாவது, 7 நிலைகளாக சுமார் 44 நாள்கள் நடைபெறும் மாபெரும் தேர்தல் இதுவாகும்.
உதாரணத்துக்கு, மும்பை புறநகர் பகுதியில் இருக்கும் பிரபலமான சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வேலை பார்க்கும் ஒருவருக்கு மாதச் சம்பளம் ரூ 14,000 ஆகும். ஆனால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபின் அவர் தனது சொந்த மாநிலமான உத்தரப்பிரதேசத்துக்குச் சென்று அங்கு தொடர்ந்து நடைபெற்று வரும் கூட்டங்கள், ஊர்வலங்கள் ஆகியவற்றில் கட்சி பாரபட்சமின்றி (!) அனைத்துக் கட்சி நிகழ்வுகளிலும் கலந்து கொள்கிறார். இதன் மூலம் அவர் மாதம் ரூ 22,000 – ரூ 24,000 வரை சம்பாதிக்க முடிகிறது எனக் கூறுகிறார்.
இந்திய அளவில் தொழிலாளர்களை பிறமாநிலங்களுக்கு வழங்கும் மாநிலங்களாக உ.பி, பீகார், மே.வங்கம், ஜார்கண்ட், ஒடிசா ஆகியவை இருந்து வருகின்றன. இதில் முதல் மூன்று மாநிலங்களிலும் தேர்தலானது அனைத்து 7 நிலைகளிலும் அதாவது ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 1 ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இதனால் புலம் பெயர் தொழிலாளர்களை நம்பியிருக்கும் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, குஜராத், மஹாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்களில் தொழிலாளர்களுக்குக் கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இதைச் சமாளிக்க சில நிறுவனங்கள் தொழிலாளர்களுக்குக் கூடுதல் சம்பளம், தங்குவதற்கான வசதி, உணவு, போக்குவரத்துச் செலவு என பல சலுகைகளைக் கொடுக்கவும் தயாராக இருக்கின்றன. இருப்பினும் எதிர்பார்த்த வரவேற்பில்லை.
கோடைகாலத்தின் வெப்பத்தோடு தேர்தலும் சேர்ந்து கொண்டதால் மாநிலங்களுக்கு இடையே தொழிலாளர்கள் கிடைப்பது முன்பு இருந்த நிலையை விட 15 சதவீதம் குறைந்திருப்பதாக ஆட்சேர்ப்பு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.
தொழிலாளர் பற்றாக்குறையானது கட்டமைப்பு, உற்பத்தி, சேவை வழங்குவது ஆகிய துறைகளில் வேலை செய்து வரும் இயந்திரங்களைக் கையாள்பவர்கள், வெல்டர்கள், விற்பனையாளர்கள், சேவை வழங்கும் டெக்னீசியன்கள், பொருள்களை டெலிவரி செய்பவர்கள், கிடங்குகளை மேற்பார்வை செய்பவர்கள் என பல தரப்புகளிலும் இருந்து வருகிறது.
இந்தப் பற்றாக்குறையானது ஜூன் இறுதி வரை நீடிக்கும் என இத் துறை சார்ந்தவர்கள் குறிப்பிடுகின்றனர். ஜூன் 1 ஆம் தேதி தேர்தல் முடிவடைந்தாலும் அதன் முடிவுகள் ஜூன் 4 முதல் வெளியாகும் நிலையில் வெற்றி பெற்றக் கட்சிகள் வெற்றி ஊர்வலங்களை அடுத்து வரும் 10-15 நாள்களுக்கு மேற்கொள்ளும்பட்சத்தில் இவர்கள் கூடுதலாக வருமானம் ஈட்டுவதற்கு அது ஒரு வாய்ப்பாக அமையும்.
ஃபரிதாபாத் நகரில் ஸ்விக்கி நிறுவனத்தில் வேலைபார்த்து வந்த ஒருவர் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் அவரது சொந்த ஊரான பாலியாவுக்குச் சென்று விட்டார். அங்கு காலை 8 மணி அல்லது 9.30 மணியிலிருந்து மாலை 4.30 மணி வரை ஏதாவது ஒரு கட்சியின் தேர்தல் பரப்புரையில் கலந்து கொள்கிறார். இதற்காக அவருக்கு பிரியாணி, குளிர்பானம், டீ, சமோசா ஆகியவற்றை அக்கட்சி இலவசமாக வழங்குவதோடு பணமும் கொடுக்கிறது. இதன் மூலம் அவர் ரூ 22,000 சம்பாதிக்கிறார். ஸ்விக்கியில் அவருக்குச் சம்பளம் ரூ 16,000 அதுவும் வேறு ஊரில். இப்போது அவர் சொந்த ஊரில் இருப்பதாலும், தேர்தல் பரப்புரையில் கலந்து கொள்ளும் நாட்களில் உணவு இலவசம் என்பதாலும் அவரால் அவர் சம்பாதிக்கும் ரூ 22,000ல் பெரும்பகுதியைச் சேமிக்க முடிவதாகக் கூறுகிறார்.
இது தற்காலிகமானது என்றாலும் தினமும் சிரமப்படும் தொழிலாளர்களுக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களுக்கும் இந்த 44 நாள் தேர்தலானது அவர்கள் ஓரளவுக்குக் கூடுதலாக வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது. ஜூலை மாதத்திலிருந்து தொழிலாளர்கள் தட்டுப்பாடு அவ்வளவாக இருக்காது என இத்துறை சார்ந்தவர்கள் நம்பிக்கைக் கொண்டிருக்கிறார்கள். பார்க்கலாம்!
இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் பொறுப்பிலிருந்தவர்களில் பெரும்பாலோனார் அவர்களது பதவி காலம் முடிந்த பிறகு புத்தகம் எழுதுவதைக் கடமையாக அல்லது வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள் எனத் தோன்றுகிறது. இதற்கு உதாரணமாக ஒய் வி ரெட்டி, சுப்பாராவ், ரகுராம் ராஜன் ஆகியோரைக் குறிப்பிடலாம். இப்போது அந்த வரிசையில் சேர்ந்திருப்பவர் உர்ஜித் பட்டேல். 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது பதவி காலத்துக்கு முன்பே அப்பதவியிலிருந்து விலகியது அனைவரும் அறிந்த ஒன்று. அவர் எழுதி சமீபத்தில் வெளிவந்திருக்கும் புத்தகம் “ஓவர்டிராஃப்ட் – சேவிங் தி இண்டியன் சேவர் (Overdraft – Saving the Indian Saver). இந்தப் புத்தகத்தை அவர் `இந்திய சேமிப்பாளர்களுக்கு’ சமர்ப்பித்திருக்கிறார்.
இன்றைக்கு வங்கிகள் எதிர்கொள்ளும் பிரச்சனையிலிருந்து வெளிவருவதற்கு `9R உத்திகளைப் பரிந்துரைக்கிறார். அவை என்னவென்று பார்ப்போம்.
யதார்த்தம் (Reality)
பதிவுசெய்தல் (Record)
அறிக்கை கொடுத்தல் (Report)
மீட்டெடுத்தல் (Recovery) ஆகியவற்றைத் தெரிந்து கொண்டு அதன்பின்,
தீர்மானம் (Resolution)
வலுவூட்டப்பட்ட தீர்மானம் (Reinforced Resolution)
மறுமூலதனமும் நிதி பரிணாமும் (Recapitalization and Fiscal Dimension)
மீட்டமைத்தல் (Reset)
சீர்திருத்தம் (Reform)
ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டுமென்கிறார்.
வங்கிகளுக்குப் பூதாகரமான பிரச்சனையாக இருக்கும் வராக்கடனையும் அதனால் பொருளாதாரத்திலும், நிதி ஸ்திரத்தன்மையிலும் ஏற்படும் விளைவுகளையும் அதை சரி செய்வதற்கான வழி முறைகளையும் குறிப்பிட்டிருக்கிறார். இவையெல்லாம் ஏற்கனவே கேட்ட மாதிரி, படித்தமாதிரி இருக்கிறதென்றால் அதற்கெல்லாம் இது குறித்து ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர்களான ஒய்.வி. ரெட்டியும், ரகுராமும் அவர்களுடைய உரைகளையும், கட்டுரைகளையும் தொகுத்து ஏற்கனவே புத்தகங்களாக கொண்டு வந்திருப்பது காரணமாக இருக்கலாம்.
பட்டேலும் ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த போது பல கூட்டங்களில் ஆற்றிய உரைகளும், அதற்குப் பிறகு அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பலதரப்பினரின் மத்தியில் பேசிய பேச்சுகளும் இதில் இடம் பெற்றிருக்கின்றன. இதில் வராக்கடன் பிரச்சனைகான காரணங்களை ஆராய்ந்து அரசும், கட்டுப்பாட்டாளாராக இருக்கும் ரிசர்வ் வங்கியும் என்ன செய்ய வேண்டுமென தனது ஆலோசனைகளை முன் வைத்திருக்கிறார். இது சம்பந்தமாக இவர் பதவியிலிருக்கும்போது பரிந்துரைத்த சில கருத்துகளை அரசு ஏற்றுக்கொள்ளாததாலும், அரசுத் தரப்பு `யோசனை’களை இவர் ஏற்றுக் கொள்ளாததாலும் ஏற்பட்ட முரண்பாட்டால் இவர் அந்தப் பதவியிலிருந்து விலகினார்.
வாராக்கடன் பிரச்சனை மற்றும் வங்கிகள் எதிர் கொள்ளும் பிரச்சனைகளுக்கு அவர் பாரபட்சம் இல்லாமல் அனைத்துத் தரப்பினரையும் பொறுப்பாளிகளாக மாற்றியுள்ளார். தேவைக்கு அதிகமாக கடன் கொடுத்த நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளை அரசு தட்டிக் கேட்காதது, பிரச்சனையை மிகவும் தாமதமாக உணர்ந்து அதை கையிலெடுத்த கட்டுப்பாட்டளர்கள் என அனைவரையும் இந்த சீரழிவுக்குப் பொறுப்பாக்கியிருக்கிறார்.
மூன்று C என அறியப்படும் CBI, CVC and CAG ஆகிய அமைப்புகள் மீது வங்கியாளர்கள் அச்சம் கொண்டிருக்கிறார்கள் என்கிற விஷயம் பலூன் போல ஊதி பெரிதாக்கப்பட்டது என இவர் கூறுகிறார். ஒரு வருடத்துக்கு முன்பு இவர் ஆற்றிய உரையில் 1) வங்கி அமைப்பில் கடன் வழங்குவதில் பொதுத்துறை வங்கிகள் ஆதிக்கம் செலுத்துவது 2) சுயாதீனமான ஒழுங்குமுறை 3) நிதி விவேகத்தை அரசாங்கம் கடைபிடிப்பது ஆகியவை இயலாத காரியங்கள் எனக் குறிப்பிட்டார். எனவே, அரசானது பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கடன் ஓட்டத்தை (credit flow) வழிநடத்த விரும்பினாலும், நிதி பற்றாக்குறை இலக்கைப் பற்றியிருக்க வேண்டுமென்றாலும் (வங்கிகளுக்கு மறுமூலதனம் செய்யாமல்) கட்டுப்பாட்டாளர்கள் நியமங்களை (norms) தளர்த்திக் கொள்ள வேண்டும். கட்டுப்பாட்டாளர் தளர்வு எதுவும் செய்யாமல் பிடிவாதமாக இருந்தால் அரசு கடன் கொடுப்பது வாயிலாக, வங்கிகளுக்கு மறுமூலதனம் செய்யும் கொள்கையில் தலையிடுவது அவசியமாகும். அப்படி நேரிடும்போது அது நிதி விவேகத்துக்கு எதிராக அமையும்.
சுயாதீன ஒழுங்குமுறையும் பலத்த அடி வாங்கும் என நூலாசிரியர் நினைப்பதில் ஆச்சரியமெதுவுமில்லை. ஏனெனில், அரசாங்கத்தின் நோக்கங்கள் பெரும்பாலும் வேறுபட்டிருப்பதோடு காலப்போக்கில் விதிமுறைகளில் தளர்வு ஏற்பட்டிருக்கிறது, இதனால் நெருக்கமான முதலாளிகள் (crony capitalists) மீதான அழுத்தம் குறைகிறது. உதாரணமாக, 2018 ஆம் ஆண்டு வங்கிசாரா நிதி நிறுவனங்கள், குறு சிறு நடுத்தர வணிகர்கள் மீதான ’சொத்து தர பரிசீலனை’ அமைதியாக ஆரம்பிக்கப்பட்டாலும் ஏதோ சில காரணங்களினால் `ஒத்திப்போடப்பட்டது’.
புதிய திவால் சட்டத்தைப் (ஐபிசி) பொருத்தவரையில் கூட அரசானது இன்னும் தீவிரமாக பின்பற்றியிருக்க வேண்டும். வராக்கடன் சம்பந்தமான மத்திய வங்கியின் சட்டகத்தை இப்போது இருக்கும் ரிசர்வ் வங்கி நிர்வாகம் நீர்த்துப் போகச் செய்திருப்பது குறித்து தனது அதிருப்தியை இந்நூலில் அவர் பதிவு செய்திருக்கிறார்.
இது குறித்து அவர், `2019 ஆம் ஆண்டு, 2020 ஆண்டின் முற்பகுதியில் அரசும் மற்ற பங்காளார்களு,ம் (stakeholders) எடுத்த முடிவானது நீண்டகாலமாக தொடரப்பட்டு வந்த சில வழக்குகளில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தேக்கநிலையிலிருப்பதற்கான வாய்ப்பை அதிகரித்திருக்கின்றது. அரசாங்கம் மற்றும் அதிகாரப்பூர்வமான நிறுவனங்களை, குறைந்தபட்சம் சில வங்கிகளை அவ்வப்போது பிணையிலெடுப்பது தொடரும்’ எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.
பொருளாதாரம் மந்தமாக இருக்கும் இந்த கோவிட்-19 காலகட்டத்தில் தேவையை ஊக்குவிக்க அரசானது தொடர்ந்து வங்கிகளையே அதிகமாக சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. அதே நேரத்தில் ஒழுங்குமுறை முன்னுரிமை மீண்டும் வந்திருக்கும் நிலையில் இந்த நிதியாண்டில் வராக்கடனும் சுமார் 50 சதவிகிதம் அதிகரிக்கக்கூடும் என கணக்கிடப்பட்டிருக்கிறது.
”எப்போது நிரந்தரமாக இருக்கும் கடனாளிகள், எந்தவித முயற்சியும் எடுக்காத கடனாளிகள் மீது விழிப்புடன் இருக்க வேண்டும்; இல்லையெனில், நட்பு முதலாளித்துவத்துவத்தின் (crony capitalism) மீது அடைந்திருக்கும் சிறிய வெற்றிக்கூட குறைந்த காலமே நீடிக்கும் என்பதோடு இதுவரையில் அடைந்திருக்கும் வரையறுக்கப்பட்ட முன்னேற்றம் கூட தவறான விடியலாக மாறிவிடும்” என எழுதியிருக்கிறார்.
அரசின் காதுகளுக்கு இது கேட்குமா? கேட்குமென நம்பலாம்.
புத்தகத்தின் பெயர்: ஓவர்டிராஃப்ட் – சேவிங் தி இண்டியன் சேவர்
ஆசிரியர்: உர்ஜித் பட்டேல்
பதிப்பகம்: ஹார்ப்பர் இண்டியா
விலை ரூ 599
கடந்த வாரம் துபாயில் பலத்த மழை பெய்தது. ஒரு வருடம் முழுவதும் பெய்யும் சராசரி மழையின் அளவை விட இது பல மடங்கு அதிகமாக இருந்தது. விமான நிலையத்தையும் மூட வைத்தது. இதற்கு மேக விதைப்பு என்கிற கிளவுட் சீடிங்தான் (cloud seeding) காரணம் என விஞ்ஞானிகள் ஏற்கவில்லை. மாறாக, காலநிலை மாற்றமும் அது உருவாக்கும் ஒழுங்கற்ற வானிலை முறையும் தான் இதற்குக் காரணம் என அவர்கள் கூறினார்கள். மேக விதைப்பு தான் காரணமா, இல்லையா என்பது குறித்து நாம் இங்கு விவாதிக்கப் போவதில்லை. மாறாக, இது சார்ந்த பொருளாதாரத்தைப் பார்ப்போம்.
அதற்கு முன்பாக, மேக விதைப்பு பற்றிச் சுருக்கமாகப் பார்க்கலாம்.
1946 ஆம் ஆண்டில், நோபல் பரிசு வென்றவரும் ஆராய்ச்சி விஞ்ஞானியுமான இர்விங் லாங்முயர் (Irving Langmuir) விமான இறக்கைகளில் பனிக்கட்டி உருவாவது பற்றி நியூயார்க்கில் இருந்த ஜெனரல் எலெக்ட்ரிக் லேப்ஸில் ஆய்வு செய்து கொண்டிருந்தார்.
அவருக்கு உதவ வின்சென்ட் ஷேஃபர் (Vincent Schaefer) இருந்தார். இவர் உறைவிப்பான் (freezer) தொடர்பாக தனது ஆய்வை மேற்கொண்டிருந்தார். இவர் கண்டுபிடிப்பின் மூலம் “மேகங்கள் அடிப்படையில் அதிகக் குளிரில் இருக்கும் நீரின் பைகள் என்றும் மழை என்பது உண்மையில் வானத்தில் இருந்து விழும் பனிக்கட்டிப் படிகங்கள் என்றும் அவை பூமியை நோக்கி விழும்போது உருகுகிறது” எனவும் அறிந்து கொண்டார். .
உறைபனியைத் தூண்டுவதற்கு மேகம் எனப்படும் நீரின் பைகள் மீது உலர்ந்த பனிக்கட்டிகளைக் (dry ice) தூவ முடிவு செய்த லாங்முயரும் ஷேஃபரும் ஒரு விமானத்தை வானத்தில் பறக்கவிட்டு அக்காரியத்தைச் செய்ய அவை பூமியை நோக்கிச் செல்லும் வழியில் மழையாக உருமாறி செயற்கை மழையாகப் பொழிந்தது.
ஆக, இப்படித்தான் மனிதர்கள் வானிலையை மாற்ற அல்லது இயற்கையை வளைக்கக் கற்றுக்கொண்டார்கள், இதன் மூலம் சில்வர் அயோடைடும் இதற்கு உதவும் எனக் கண்டறிந்தனர். .
நாளடைவில் மேக விதைப்பு என்பது ஒரு வணிகமானது. உலகின் மிகப்பெரிய மேக விதைப்பு முறையில் ஈடுபட்டிருக்கும் சீனா (இதிலும் அவர்கள்தானா?!) ‘வானிலையை மாற்றியமைக்கும் அலுவலகம் (Weather Modification Office) ‘ என்கிற ஓர் அமைப்பை உருவாக்கி சில்வர் அயோடைடை மேகங்களில் தூவி மழை பெய்யச் செய்தனர். மேலும் வடக்குப் பகுதி தண்ணீர் பற்றாக்குறையிலிருந்து பொருளாதார இழப்புகளை எதிர்த்துப் போராடவும் முயற்சி எடுக்க ஆரம்பித்தது.
சீனாவின் மிக நீளமான நதியான யாங்சே நதியும் (Yangtze River), அதன் இரண்டாவது பெரிய நதியான மஞ்சள் நதியும் நாட்டின் மிகப்பெரிய நன்னீர் ஆதாரங்களாக இருந்து வருகிறது.
தண்ணீர் நெருக்கடியிலிருந்து மீள. பல தசாப்தங்களுக்கு முன்னர், ”தெற்கிலிருந்து வடக்குக்கு தண்ணீரை திசை திருப்பும் திட்ட”த்தில் (South to North Water Diversion project) சுமார் 80 பில்லியன் டாலர் முதலீடு செய்தது. தண்ணீர் நெருக்கடியால் கடுமையாகப் பாதிக்கப்படாத யாங்சேயிலிருந்து அதன் வடக்குப் பகுதிகளுக்குத் தண்ணீரை மாற்றுவதே இதன் நோக்கமாகும். நீளமான சுரங்கப்பாதைகள் வாயிலாக வடக்கே இருக்கும் மஞ்சள் ஆற்றின் ஆற்றுப்படுகைக்கு தண்ணீர் செல்லும் படி இத்திட்டம் வடிவமைக்கப்பட்டது . மேலும் இந்த நீர் வடக்குப் பகுதியிலேயே நிலை கொண்டிருப்பதால் அப்பகுதியில் செயற்கையாக மழை பெய்யச் செய்ய மேக விதைப்பு அமைப்புகளையும் ஈடுபடுத்தியது.
சீனாவின் தெற்கு நீர் ஆதாரங்களும் இனி வரும் காலங்களில் வறண்டு போகலாம். சீனாவின் மேக விதைப்பு முயற்சிகள் மழையை மட்டும் பெய்யச் செய்வதோடு நின்றுவிடவில்லை. 2008 ஆம் ஆண்டில், பெய்ஜிங் ஒலிம்பிக்கின் போது மழை பெய்யாமல் இருக்க வேண்டும் என்பதற்காக மழைப் பொழிவைத் தடுக்கும் நுட்பத்தையும் கண்டறிந்தது!
ஆம்! நீங்கள் படித்தது சரிதான். ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கு முன்னதாக மழையைத் தூண்டுவதன் மூலம் அப்பகுதியில் இருக்கும் மேகங்களை செயற்கை முறையில் முன்கூட்டியே களையச் செய்தது. இதனால் ஒலிம்பிக் போட்டிகள் மழையின் இடையூறு இல்லாமல் நடந்தேறியது.
சீனாவின் இந்த முயற்சிகள் அனைத்தும் 2025 ஆம் ஆண்டளவில் 5.5 மில்லியன் சதுர கிலோமீட்டருக்கு மேல் செயற்கையாக மழை அல்லது பனிப்பொழிவை ஏற்படுத்துவதற்காக அதன் வானிலை மாற்ற அமைப்புகளை விரிவுபடுத்துவதற்கு உண்மையில் ஊக்கமளித்துள்ளது என்பதை அறியும் போது ஆச்சரியமளிப்பதோடு ஆதங்கத்தையும் ஏற்படுத்துகிறது.
இந்த முயற்சியால், சீனாவைச் சுற்றியிருக்கும் மற்ற பகுதிகள் மழை பெற முடியாமல் போனால் அப்பகுதிகள் என்னவாகும்? இதே கேள்விதான் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மேக விதைப்பு திட்டத்தில் பணிபுரிந்த பின்லாந்து நாட்டு விஞ்ஞானி ஹன்னெல் கோர்ஹோனனுக்குள்ளும் (Hannele Korhonen) எழுந்தது. இந்த மேக விதைப்பு முறையானது உண்மையில் மேகங்கள் வேறொரு பகுதிக்குச் செல்வதற்கு முன் ஒரு குறிப்பிட்ட நாட்டில் அல்லது பகுதியில் மழையைப் பொழியச் செய்யும். சொல்லப் போனால் வேண்டாத நாட்டுக்கு எதிராக இது ஓர் ஆயுதமாகக் கூட இனிவரும் நாள்களில் பயன்படுத்தப்படக்கூடும்.
இது ஒன்றும் புதிது இல்லை. உண்மையில், 1970 களில் வியட்நாம் போரின் போது, பருவமழையை நீட்டித்து அதனால் சாலைகளை வழுக்கும்படி செய்து எதிரிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் சாலையோரங்களில் நிலச்சரிவுகளை ஏற்படுத்தும் வகையில் வானிலையை அமெரிக்கா மாற்றியமைத்தது என அதன் மீது குற்றம் சாட்டப்பட்டது.
ஆக, மழையைப் பெய்ய வைப்பது என்பது பொருளாதாரத்தைப் பொருத்தவரையில் வரமா/சாபமா என்பதோடு வானத்தின் எந்தப் பகுதியை எந்த நாடு சொந்தம் கொண்டாடுகிறது என்ற கேள்வியும் இனி உலகளாவிய அளவில் எழக்கூடும். இதற்கென சர்வதேசக் கொள்கைகள் உருவாக்கப்படும் வரை இதற்குத் தீர்வு காண்பது கடினமாகும்.
(`ஃபின்ஷாட்’ என்கிற இணையதளத்தில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்)
இந்த நாடே பெருந்தொற்று நோயுடன் போராடிக் கொண்டிருக்கும்போது ‘Necessity is the mother of invention’ (தேவைதான் கண்டுபிடிப்பின் தாய்) என்ற வாசகத்துக்கு இணங்க, சில புதிய முயற்சிகளும் கண்டுபிடிப்புகளும் நாள்தோறும் வந்து கொண்டிருக்கின்றன.
(அமேசானின் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான ஜெஃப்ரி பெசோஸ் (ஜெஃப்) பொறுப்பான்மைக்கு எதிரான (anti-trust), வணிக, நிர்வாக சட்டம் சம்பந்தமாக அமெரிக்க அரசின் பிரதிநிதிகள் சபையால் நியமிக்கப்பட்ட துணைக்குழுவுக்கு முன் ஜூலை 27 ஆம் தேதி சமர்ப்பித்த அறிக்கை.
உலகத்தில் சுற்றுப்புற சூழல் மாசுபாடு அதிகம் உள்ள நகரங்களின் பட்டியலில் முதல் இருபது இடங்களில் இந்தியாவின் 10 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. இது உங்களில் பலருக்கு கவலையும் அதிர்ச்சியுமாக இருக்கும்.
கரூர் ஸ்ரீ சங்கர வித்யாலயா பள்ளியின் மாணவர் விகாஷ் தனது ஆசிரியர் திரு. சதீஷ்குமார் அவர்களின் உதவியோடு டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் பயன்படுத்தப்படும் பில் போடும் ட்ராலிகளை உருவாக்கியுள்ளார்.
எங்களின் வாடிக்கையாளர்கள் முதன்முறையாக எங்களிடம் வரும்போது நாங்கள் அவர்களிடம் பொருட்கள் விற்க முயற்சிப்பதில்லை. மாறாக வைர நகைகளின் நன்மைகள், தன்மைகள், அதை கையாள வேண்டிய விதம் மற்றும் பாதுகாக்கப் படவேண்டிய விதம் என பலவாறு அவர்களுக்கு விளக்கியும் அவர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தும்
பெண்கள் வீட்டிலிருந்தபடியே புடவை மற்றும் ஆடைகள் விற்பனை செய்வது என்பது புதிதல்ல. இப்போது வாட்ஸ் அப்பிலேயே வணிகம் செய்கிறார்கள். செட்டிநாட்டின் தலைநகர் காரைக்குடியில் கடந்த ஆண்டு துவக்கப்பட்ட ‘கற்பகம் பட்டு மாளிகை’ பெண்களால் நடத்தப்படும் ஒரு ‘ஸ்டார்ட் அப்’ தொழில்.