உலகத்தில் எத்தைனையோ பிரச்சனைகள் இருந்தாலும், இப்போது இருக்கும் தலையாய பிரச்சனை கொரோனாவிற்கு தீர்வு காண்பதுதான். அதுவே இப்போது அரசின் முக்கிய கடமையாக இருக்கிறது.
மத்திய அரசின் இன்வெஸ்ட் இந்தியா திட்டத்தின் கீழ் ‘ஆக்ஷன் கோவிட்19 டீம்’ (Action Covid19 Team) அமைக்கப்பட்டு அதன் மூலம், கொரோனா பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் ஸ்டார்ட் அப் கம்பெனிகளுக்கு 100 கோடி ரூபாய் உதவியாக வழங்க முடிவு செய்திருக்கிறது.
அந்த நிதியுதவி பெற்ற சில ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் என்ன முயற்சிகள் செய்துள்ளது என்று பார்க்கலாம்.
மை லேப் (My Lab)
இந்த கம்பெனி இந்தியாவின் முதல் ‘கோவிட் டெஸ்டிங் கிட்’ (Covid Testing Kit) தயாரிப்பாளர் என்ற பெருமையை பெற்றுள்ளது. 2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த ஸ்டார்ட் அப் கம்பெனி ஆக்சன் கோவிட்19 டீமில் இருந்து ஒரு கோடி ரூபாய் நிதியுதவி பெற்றுள்ளது. இந்த கம்பெனி சவுத் கொரியன் மாடலை எடுத்துக் கொண்டு இந்தியாவில் டெஸ்டிங் கிட் தயாரித்து அதில் வெற்றியும் கண்டுள்ளது. இந்த கம்பெனியின் டெஸ்டிங் கிட் இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐசிஎம்ஆர்) அனுமதியும் பெற்றுள்ளது.
வெளிநாட்டில் இருந்து வாங்கப்படும் கரோனா சோதனை கருவிகளை விட இது மிகவும் விலை குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
எத்திரியல் மெஷின்ஸ் (Ethereal Machines)
கொரோனா வந்தாலும் வந்தது வென்டிலேட்டர்களுக்கு பயங்கர டிமாண்ட் வந்து விட்டது. ஒரே வெண்டிலேட்டரை இரண்டு நோயாளிகளுக்கு எப்படி உபயோகிக்கலாம், அதுவும் பாதுகாப்பாக எப்படி உபயோகிக்கலாம் என்பதை பற்றி ஆராய்ச்சி செய்து அந்த ஆராய்ச்சியில் வெற்றி பெற்றிருக்கிறது இந்த கம்பெனி. அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளில் இது போன்ற வெண்டிலேட்டர்கள் புழக்கத்தில் இருந்தாலும் அதில் உள்ள ரிஸ்க்குகளை அவர்களால் கட்டுப்படுத்த இயலவில்லை. ஒரு வென்டிலேட்டரை இரண்டு பேருக்கு வைப்பதில் பிரச்சனைகள் தொடர்ந்து இருந்து கொண்டுதான் வந்திருக்கின்றன.
ஆனால் இந்த கம்பெனி தயாரித்திருக்கும் இந்த 3D ஸ்பிளிட்டர்களை வெண்டிலேட்டரில் பொருத்துவதன் மூலம் ஒரே சமயத்தில் இரண்டு நோயாளிகளுக்கு பயன்படுத்தலாம், அதே நேரத்தி, ஒரு நோயாளியிடம் இருந்து இன்னொருவருக்கு நோய் தொற்றாதவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கம்பெனி ஆக்ஷன் கோவிட்19 டீமிலிருந்து 50 லட்சம் ரூபாய் நிதியுதவி பெற்றுள்ளது
கர்கானா (Kharkhana.io)
கர்கானா ஒரு டிசைன் மற்றும் மெனுபேக்சரிங் கம்பெனி.
பி.பி.ஈ., அதாங்க பர்சனல் புரோடெக்டிவ் ஈக்விப்மென்ட் உடைகளை 3டி பிரிண்டிங், இன்செக்ஷன் மோல்டிங், மெஷினிங், பேப்ரிகேஷன் ஆகிய டெக்னாலஜிகளை உபயோகித்து உற்பத்தி செய்து வருகிறது. மற்ற பி.பி.ஈ., தயாரிப்பாளர்களுக்கு அவர்களது தயாரிப்பில் தகுந்த ஆலோசனைகளையும் வழங்குகிறது. இந்த கம்பெனிக்கு ஆக்ஷன் கோவிட்19 டீம் 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியிருக்கிறது.
கொரோனா சேஃப் (Corona Safe)
கொரோனா வந்தவர்களுக்கு உதவிகள் என்று பெரிய அளவில் யாரும் செய்துவிட முடியாது. அதுபோன்ற சமயத்தில் நோயாளிகளை எங்கு அட்மிட் செய்வது எந்த மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குத் தேவையான படுக்கைகள் காலியாக இருக்கிறது, எந்த மருத்துவமனையில் வென்டிலேட்டர் வசதியுடன் படுக்கைகள் காலியாக இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பது மிகவும் சிரமமான காரியம். பலர் நோயாளியுடன் இதற்காக பல மணி நேரம் அலைய வேண்டிய ஒரு சூழ்நிலை இருக்கிறது. அதற்குள் நோயாளி அபாய கட்டத்திற்கு செல்லும் வாய்ப்புகளும் அதிகம்.
இதை தவிர்ப்பதற்காக ஒரு சாப்ட்வேர் கம்பெனி எல்லா மருத்துவமனைகளையும் அதாவது பஞ்சாயத்து அளவில் இருந்து, மாவட்ட அளவில், மாநில அளவு வரை எல்லா மருத்துவமனைகளையும் இணைத்து எந்தெந்த மருத்துவமனைகளில் எத்தனை படுக்கை வசதிகள் காலியாக இருக்கின்றன போன்ற புள்ளி விபரங்களை தெளிவாக தருகிறது.
இந்த சாப்ட்வேரை கேரளா அரசாங்கம் தங்களது டேஷ் போர்டுக்காக (dashboard) உபயோகப்படுத்தி வருகிறது.