தவறில்லாமல் ஏற்றுமதி செய்வது, ஸ்டார்ட்அப் தொடங்குவது, அதற்கு நிதி பெறுவதற்கு வழிகாட்டும் கருத்தரங்கை
அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற மின் – வணிக நிறுவனங்கள் மூலம் பொருள்களையும், சேவைகளையும் விற்க முடியாத வணிக நிறுவனங்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் உதவும் வகையில் Open Network for Digital Commerce (ONDC – மின்னணு வணிகத்துக்கான திறந்த முனையம்) என்பது கம்பெனிகள் சட்டம், 2013 கீழ் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இது பிரிவு 8ன் கீழ் ஆரம்பிக்கப்பட்ட லாப நோக்கமற்ற சந்தைப்படுத்தல் தளம் (marketing platform) ஆகும்.
இது 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய அரசின் கீழ் இயங்கி வரும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையால் (DPIIT) பதிவு செய்யபட்டது. ONDC என்பது ஒரு செயலியோ, இடைத்தரகரோ அல்லது மென்பொருளோ இல்லை. மாறாக, பொருள் அல்லது சேவையை வாங்குபவர்கள், தொழில்நுட்ப தளங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களிடையே ஓர் இணைப்பை வளர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்ட இணையதளமாகும்.
2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை பல்வேறு பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் ONDC இல் முதலீடு செய்தன. இதில் குறிப்பிடத்தக்க முதலீட்டு அமைப்புகள் பஞ்சாப் நேஷனல் வங்கி (₹25 கோடி – 9.5%), பாரத ஸ்டேட் வங்கி (₹10 கோடி – 7.84%), ஆக்சிஸ் வங்கி (7.84%), கோடக் மஹிந்திரா வங்கி (7.84%), BSE முதலீடுகள் (5.88%), மத்திய வைப்பு சேவைகள் (Central Depository Services) (6.78%), ஐசிஐசிஐ வங்கி (₹10 கோடி – 5.97%), இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (₹10 கோடி – 7.84%) போன்றவை ஆகும்.
இதோடு 2022 ஆம் ஆண்டு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) கீழ் செயல்பட்டு வரும் பொது சேவை மையமானது அதனுடைய செயலியை இதில் இணைப்பதன் மூலம் கிராமப்புறங்களில் ONDC குறித்த பயன்பாடு பரவலாவதோடு கிராம மக்கள் அவர்களது பொருள்களை விற்கவும், பிறருடைய பொருளை வாங்கவும் வகை செய்யும் என தெரிவித்தது. நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) மற்றும் நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஆஃப் இந்தியா (என்எஸ்இ) ஆகியவை ONDC யின் புரமோட்டர்கள் என்கிற வகையில் நிதியுதவி அளித்தன. இப்படியாக, தொடர்ந்து பல வங்கிகளும், அமைப்புகளும் இதில் முதலீடு செய்து வருகின்றன.
இதனுடைய நோக்கங்கள் என்ன?
- தனியார் / பன்னாட்டு மின் வணிகத் தளங்களின் ஏகபோகத்தைக் கட்டுப்படுத்துதல்
- ஜனநாயகப்படுத்தல், அதிகாரப் பரவலாக்குதல்
- மதிப்புச் சங்கிலியை டிஜிட்டல் மயமாக்கல்
- செயல்பாடுகளைத் தரப்படுத்தல்
- விற்பனையாளர்களை குறிப்பாக, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், உள்ளூர் வணிகங்களை எளிதாக அணுகுதல்
- லாஜிஸ்டிக்கின் செயல்திறனை அதிகரித்தல்
- அதிகமான பொருள்கள் தளத்தில் இருக்கும்பட்சத்தில் அதை தெரிவு செய்வதில் நுகர்வோர்களுக்கான சுதந்திரம்
- தரவு தனியுரிமை மற்றும் இரகசியத்தன்மையை உறுதிசெய்தல்
- செயல்பாட்டுச் செலவைக் குறைத்தல்
2022 ஆம் ஆண்டு இந்த இணையதளத்தின் பரிசோதனை டில்லி, பெங்களூரு, போபால், ஷில்லாங், கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அனைத்துத் தரப்பினரிடமும் இதற்கு வரவேற்பு நன்கு இருந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் சுமார் 100 நகரங்களுக்கு விரிவாக்கப்பட்டது.
ONDCக்கான வரவேற்பு
இவ்வருடம் பிப்ரவரி மாதம் ONDC ஆனது மொத்தம் 7.1 மில்லியன் ஆர்டர்களை நிறைவேற்றியது. இது ஜனவரி மாதத்தில் 6.75 மில்லியனாக இருந்தது. இதில் 3.56 மில்லியன் (அல்லது 52.8%) மொபிலிட்டி தொடர்பான (ஆட்டோ, கார், பஸ் சேவைகள்) ஆர்டர்களும், 3.19 மில்லியன் (அல்லது 47.2%) மொபைலிட்டி அல்லாத ஆர்டர்களும் அடங்கும். தற்சமயம் 370,000 விற்பனையாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்கள் ONDC யைப் பயன்படுத்துகின்றனர். 800 க்கும் மேற்பட்ட நகரங்களில் ONDC மூலமாகப் பரிவர்த்தனைகள் நடந்திருக்கின்றன. கூடுதலாக, லக்னோ மற்றும் டெல்லியில் சாலையோர உணவு விற்பனையாளர்களையும் இணைப்பதற்கான முன்னோடித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்த முன்னோடித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நகரத்திலும் 500 சாலையோர உணவு விற்பனையாளர்கள் இந்தத் தளத்தில் சேர்க்கப்படுவார்கள். அதோடு கூடுதலாக விற்பனை செய்பவருக்கும் வாங்குபவர்களுக்கும் பயன்படும் வகையில் மேலும் பல செயலிகளும் இணைக்கப்படும் என இதன் ஆலோசனைக் குழு தெரிவித்திருக்கிறது.
அமேசான், ஃபிளிப்கார்ட் போன்றவை அவற்றின் மூலம் விற்கப்படும் பொருளின் விலையில் 30-40 சதவீதம் வரை கட்டணமாகப் பெறுகிறது. ஆனால், ONDC ஆனது 8-10 சதவீதம் மட்டுமே அதன் கட்டணமாகப் பெறுகிறது. எனவே இது சிறு, குறு மற்றும் நடுத்தர அளவில் தொழில் செய்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையக்கூடும்.
நீங்கள் தயாரிக்கும் பொருள்களையும், சேவைகளையும் ONDC தளம் மூலம் விற்பனை செய்ய முயலலாம்தானே? இதோ, அதன் இணையதள முகவரி https://ondc.org/ இதில் முறைப்படி, அதன் விதிமுறைகளுக்கு உட்பட்டு, பதிவு செய்தபின் உங்கள் பயணத்தை உத்வேகத்துடன் தொடருங்கள்!
மை, எழுதுபொருள் உலகில் அதிலும் குறிப்பாக இந்தியாவில் கேம்லின் ஒரு வீட்டுப் பெயர். 1931 ஆம் ஆண்டு பரசுராம் தண்டேகர் என்ற பட்டதாரி எழுத்து மை தயாரிக்கும் வணிகத்தைத் தொடங்கினார். மூத்த சகோதரர் கோவிந்த் தண்டேகரும் வணிகத்தில் சேர்ந்து தண்டேகர் & கோ நிறுவனம் உருவானது.
மை நன்றாக இருந்ததால் உள்ளூர் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் தேவைகள் உயரத் தொடங்கியது. அந்த நேரத்தில் ஏற்கனவே சந்தையில் பல பிரபலமான பிராண்டுகள் இருந்தன. சகோதரர்கள் ஃபவுண்டன் பேனா உற்பத்தி தொடங்க நினைத்தனர்.
“கேம்லின்” என்ற பெயர் ” Camel-ஒட்டகம்” மற்றும் “Ink -மை” என்ற இரண்டு வார்த்தைகளையும் இணைத்ததில் இருந்து உருவானது, பின்னாளில் பேனா, பென்சில், ரப்பர், ஜியாமெட்ரி பாக்ஸ், நோட்டுப் புத்தகங்கள், வண்ணங்கள் போன்ற பல்வேறு எழுது பொருள் துறை சம்பந்தமான பொருள்களை தயாரித்து வந்தாலும் ஆரம்பத்தில் அவர்கள் மை தயாரிப்பில் தான் ஈடுபட்டார்கள் என்பதனால் அந்த பெயரே பிராண்டின் பெயராக விளங்கி வருகிறது.
“கேம்லின் என்ற பெயர் வந்ததற்கான பின்னணி சுவாரசியமானது. சகோதரர் இருவரும் தங்களது பிராண்டிற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று விவாதித்துக் கொண்டிருந்த போது ஒரு சிகரெட் விளம்பரம் அவர்களது கவனத்தை ஈர்த்தது.”I’d walk a mile for a Camel.” ஒட்டகத்திற்காக ஒரு மைல் நடப்பேன் என்ற வாசகத்துடன் ஒட்டகத்தின் படம் அந்த விளம்பரத்தில் இடம் பெற்றிருந்தது. தண்டேகர் சகோதரர்கள் ஒட்டகம் என்ற வார்த்தை அவர்களது ஃபவுண்டன் பேனாவின் மை, உறுதியான தன்மை, தோழமை, நீடித்த தன்மை ஆகியவற்றின் சிறந்த உருவகமாக அவர்கள் கண்டனர். ஒட்டகம் தனது திமிலில் உள்ள தண்ணீருடன் பாலைவனத்தின் கடுமையான சூழ்நிலை தாங்கிக் கொண்டு யாருடன் இருந்தாலும் அவர்களுக்கு தோழனாக இருக்கிறது. ஒருமுறை பேனாவில் மை நிரப்பப்பட்டால் அந்தப் பேனா பல மைல்களுக்கு எழுதும் என்பதோடு நல்ல நேரங்களிலும் கெட்ட நேரங்களிலும் மாணவர்களுக்கு ஒரு நிலையான துணையாக இருக்கும் என்ற கருத்தை வெளிப்படுத்தும் சிறந்த உருவகமாகக் கண்டனர்.
1958 ஆம் ஆண்டில், கேம்லின் போஸ்டர் கலர் வண்ணங்கள் வெளியிடப்பட்டன, இது ஓவியக் கலைஞர்களிடமும் மாணவர்கள் மத்தியிலும் விரைவாக பிரபலமடைந்தது. அந்த நாளில் மாணவர்களுக்கான பள்ளி பாடத்திட்டத்தில் ஓவியம் அவ்வளவு பிரபலமாக இல்லை. மிகப்பெரிய ஓவியக் கல்லூரிகளில் மட்டுமே வெளிநாட்டு கலைப் பொருள்கள் பயன்படுத்தப்பட்டன. 1960 களின் பிற்பகுதியில், தனது விற்பனையை பெருக்க வேண்டும், பிராண்டையும் பிரபலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மாவட்ட அளவில் ஓவியப் போட்டிகளை நடத்த தொடங்கியது கேம்லின். சில வருடங்களில் இந்த முயற்சி மிகப் பெரும் வரவேற்பை பெற்றது. 70களின் பிற்பகுதியில், கேம்லின் இது போன்ற ஓவிய போட்டிகளை தேசிய அளவில் நடத்த, பல்லாயிரக்கணக்கான பள்ளிகள் பங்கேற்று வருகின்றன. 1972 ஆம் ஆண்டு மெக்கானிக்கல் பென்சில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. பொறியாளர்களும் மாணவர்களும் மெக்கானிக்கல் பென்சில்களுக்கு வெளிநாட்டு பிராண்டுகளை எதிர்பார்த்திருந்த காலகட்டத்தில் இந்த புதுமையான முயற்சி பெரிதளவு வரவேற்பைப் பெற்றது. 1984 ஆம் ஆண்டில், நிறுவனம் தனது பிரபலமான தயாரிப்பு பிராண்டுடன் கார்ப்பரேட் அடையாளத்தை சீரமைக்கும் வகையில் தண்டேகர் & கோ. என்ற பெயரை கேம்லின் லிமிடெட் என மாற்றி அமைத்தது. தொடர்ந்து நவீனமயமாக்கல், மேம்பட்ட உற்பத்தி நுட்பங்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருந்தது.
முன்னணி ஜப்பானிய ஸ்டேஷனரி வணிக நிறுவனமான கோகுயோ கோ லிட், Kokuyo Co. Ltd, 2011 இல் கேம்லின் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை வாங்கிய பிறகு கோகுயோ கேம்லின் லிட் உருவானது. இந்த மூலோபாய கூட்டணியின் மூலம் அதிநவீன ஜப்பானிய தொழில் நுட்பத்துடன் கேம்லின் உலகளாவிய சந்தைக்கு அணுக முடிந்ததோடு மட்டுமல்லாமல், தனது தயாரிப்புகளின் வரம்பை விரிவுபடுத்தி அதன் தரத்தை உயர்த்தியது. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்டேஷனரி பொருள்களை தயாரித்து வரும் கேம்லின் நிறுவனத்தின் சென்ற ஆண்டு வர்த்தகம் ரூ.218 கோடி.
கேம்லின் இப்போது ஜப்பானிய நிறுவனத்திற்கு சொந்தமானதாக இருந்தாலும் இந்தியாவில் நன்கு அறியப்பட்ட, மரியாதைக்குரிய பிராண்டாக தொடர்ந்து இருந்து வருகிறது. சந்தையில் வலுவான இருப்பைக் கொண்டு தரம், புதுமை, வாடிக்கையாளர் திருப்தி ஆகியவற்றில் அதன் அர்ப்பணிப்புக்காக அறியப்பட்டு வரும் பிராண்ட் கேம்லின் என்றால் அது மிகையில்லை. சாதாரண மையில் இருந்து ஆரம்பித்த வணிகம், முன்னணி ஸ்டேஷனரி பிராண்டிற்கான கேம்லினின் பயணம், அதன் தாங்குதன்மை, புதுமை மற்றும் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்று. இந்த பிராண்ட் இந்தியாவில் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறியது மட்டுமல்லாமல் கல்வித் துறையிலும் கலைத்துறையிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்திருக்கிறது!
ஆன்மிகமும் அரசியலும், தெய்வீகமும் தேசியமும் என்பதெல்லாம் அரசியல் களத்தில் புழங்கி வரும் வேளையில் வணிக உலகில் ஆன்மிகமும் தொழில்நுட்பமும் பேசு பொருள் ஆகி வருகிறது. ஃபின்டெக், எடுடெக் என்பது போலவே இன்றைக்கு `ஸ்பிரிட்சுவல் டெக் (Spiritual Tech)’ என்று நாமகரணம் சூட்டப்பட்டு நிதி உலகிலும், தொழில்நுட்ப உலகிலும் ஆன்மிகத்துறையும் அது சார்ந்த சுற்றுலா, ஜோசியம், `ஜெம் தெரபி’, எண் கணிதம் (numerology), டாரட் கார்டு வாசிப்பு (tarot card reading), கைரேகைப் பார்த்தல் போன்றவையும் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
இத்துறைகளில் தொழில்நுட்பமும் புத்தாக்கத் தொழில் நிறுவனங்களும் சிறிது சிறிதாக ஊடுருவ ஆரம்பித்திருக்கின்றன. 2023 ஆம் ஆண்டு இத்துறை சார்ந்த சேவைகளின் வருவாய் சுமார் 58.6 பில்லியன் டாலராகும். இதுவே 2032 ஆம் ஆண்டில் 127 பில்லியன் டாலரைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்து மதம் சார்ந்த எந்தவொருக் குடும்பத்திலும் ஒருவர் பிறப்பதிலிருந்து அவர் மரணிப்பது வரை பல சந்தர்ப்பங்களில் பண்டிட் அல்லது ஜோசியரைக் கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இத்துறையில் அடங்கியிருக்கும் பலவிதமான சேவைகளில் மிகவும் பொதுவான ஒன்று பத்திரிகைகளில் வெளியாகும் வாராந்திர பலனாகும். எந்தவொரு துறையைப் போலவே இதுவும் 1997 ஆம் ஆண்டில் டிஜிட்டல் உலகத்தில் கால்பதிக்க ஆரம்பித்தது. சைபர் மீடியா எனும் நிறுவனம் `சைபர் ஆஸ்ட்ரோ’ எனும் ஒரு பிரிவை ஆரம்பித்தது. அதைத் தொடர்ந்து சில ஆண்டுகளுக்குப் பின் ஏர்செல் நிறுவனம் 2014 ஆம் ஆண்டு `ஆஸ்ட்ரோ படி (Astro buddy)” என்கிற சேவையை ஆரம்பித்தது.
பிரபல ஜோதிடர் பெஜன் தாருவாலாவின் உதவியோடு 2003 ஆம் ஆண்டு `கணேஷா ஸ்பீக்ஸ்” என்கிற நிறுவனத்தை ஹேமங் அருண்பாய் பண்டிட் ஆரம்பித்தார். இது ஆரம்பித்த போது இத்துறையின் சந்தை வருமானம் சுமார் 10 பில்லியன் டாலராக இருக்கும் எனக் கணிக்கப்பட்டது. ஏனெனில், இத்துறை பெரும்பாலும் சீரமைக்கப்படாத துறையாகவே (unorganized) செயல்பட்டு வந்தது. இத்துறையின் பொருத்தப்பாடு குறித்து அதன் நிறுவனர், `Astrology, Bollywood, Cricket, Devotion (ABCD)’ ஆகிய நான்கு துறைகளும் அதீத பணம்புரளும் துறைகளாகும் என்றார்.
காதல், உறவு முறை, பணி வாழ்க்கையில் வளர்ச்சி, தொழில்சார்ந்த முடிவுகள் எடுப்பது போன்றவற்றில் ஜோசியம் பெரும்பங்கு வகித்து வருகிறது. சமீபத்தில் `ஆஸ்ட்ரோடாக் (Astrotalk)’ என்கிற ஜோசிய ஸ்டார்ட்-அப் ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இதன் வரவால் பாரம்பரியமான ஜோசிய, கைரேகை பார்க்கும் தொழில், தொழில்நுட்ப உதவியோடு ஓர் உத்வேகம் பெற்றிருக்கிறது.
ஆன்மிக தொழில்நுட்பத் துறை சார்ந்த ஜோசியம், டாரட் கார்ட் பலன்கள், மெய்நிகர் கோவில் சுற்றுலா (virtual temple visits)’ போன்றவை நம்பிக்கை சார்ந்த நன்கொடைகளால் செழிக்கின்றன. இதற்கு பணம் செலுத்தும் முறையில் ஏற்பட்ட UPI புரட்சி, குறைந்த கட்டணத்தில் கிடைக்கும் இணைய வசதி, செயலி பண்பாடு (App culture) ஆகியவை ஆகும்.
இந்தியாவின் புத்தாக்க நிறுவன சூழலில் ஆன்மிகத் துறைக்கு நல்லதொரு வாய்ப்பு இருக்கிறது என `சுப்பூஜா (Shubhpuja)’ என்கிற நிறுவனத்தின் இணை நிறுவனர் தெரிவிக்கிறார். `ஃபெயித்டெக் (faithtech)’ அதாவது, ஜோசியம் போன்ற நம்பிக்கை சார்ந்த சேவைகள் அளிக்கும் துறையில் ஜோசியத்தின் பங்கு சுமார் 40 சதவீதம் என இத்துறை சார்ந்த ஒருவர் குறிப்பிடுகிறார்.
IMARC குழுமத்தின் சமீபத்திய கணிப்புப்படி, இந்தியாவின் ஆன்மிகச் சந்தை 2023 ஆ ஆண்டில் 58.36 பில்லியன் டாலரை எட்டிவிட்டதாகவும் 2028 ஆம் ஆண்டு இது 97.2 பில்லியன் டாலரைத் தொடும் எனவும் `ஆருடம்’ கூறியிருக்கிறது.
குடும்ப ஜோசியர்களைத் தேடும் காலம் போய் இப்போது நம்பகமான டிஜிட்டல் ஜோசியரைத் தேடும் காலம் வந்து கொண்டிருந்தாலும் இன்னும் இது ஆரம்பக் கட்டத்திலேயேதான் இருந்து வருகிறது. ஆஸ்ட்ரோ டாக் என்கிற நிறுவனத்தின் கடந்த ஆண்டு வருமானம் ரூ 640 கோடியாகும். இதனுடைய லாபம் சுமார் ரூ 130 கோடி! இன்றைக்கான தொழில்நுட்பம் சார்ந்த ஜோதிடச் சந்தையில் இதன் பங்குச் சந்தை சுமார் 85 சதவீதம். வெகுவிரைவில் இவர்கள் ஐபிஓ வெளியிட இருக்கிறார்கள்.
ஆன்மிகம் சார்ந்த துறையின் வளர்ச்சிக்குக் காரணங்கள் என்ன?
- மதம் சார்ந்து வீசும் அலை: மத்தியில் ஆளும் கட்சி ஆட்சிக்கு வந்தபின் இது உத்வேகம் அடைந்திருக்கிறது. இளைஞர்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் ஏதோவொரு வகையில் மதம் சார்ந்த நடவடிக்கைகளான சுற்றுலா, பூஜை, மெய்நிகர் கோவில் சுற்றுலா, பூஜை சேவைகள் ஆகியவை நோக்கி ஈர்க்கப்பட்டு வருகின்றனர்.
- டிஜிட்டல் பரிவர்த்தனையில் ஏற்பட்டிருக்கும் எளிமை
- உள்ளடக்கத்திலிருந்து வணிகம் வரை: காளான்கள் போல பெருகி வரும் யூடியூப் காணொளிகள், இலவச ஆலோசனை, சமூக ஊடகம் மூலம் பெறக்கூடிய பொதுவான ஜாதக, நட்சத்திரப் பலன்கள் போன்ற சேவைகள் பல தரப்பினரையும் கவர்ந்திழுப்பதோடு வணிகத்துக்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கிறது.
- Z தலைமுறையினரின் ஈர்ப்பு: 2023 ஆம் ஆண்டு தொடர்ந்து ஆறு மாதங்களாக 5 லட்சம் இளைஞர்களிடையே நடத்தப்பட்ட ஓர் ஆய்வின் மூலம் தெரியவந்த சுவராசியமான ஒரு தகவல் என்னவெனில் ஆய்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தவர்களில் சுமார் 58.3 சதவீதத்தினர் ஜோசிய ஆலோசனைகள் கேட்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். இதில் தலையாய ஆலோசனை `உறவுமுறை’ குறித்ததாகும்.
- அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்டபின், ஆன்மிகச் சுற்றுலாத் துறை உத்வேகம் பெறும் எனக் கருதப்படுகிறது.
வேவ்மேக்கர் என்கிற துணிகர முதலீட்டு நிறுவனம் மெய்நிகர் ஆன்மிகச் செயலியான `வாமா’ வில் 1.5 மில்லியன் டாலர் முதலீடு செய்திருக்கிறது. இது மெய்நிகர் வழிபாட்டுக்காகவும் பூஜைகளுக்காகவும் 2020 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு `தேவ்தாம் (DevDham) என்கிற நிறுவனம் சுமார் 6 மில்லியன் டாலரை முதலீடாகப் பெற்றது. இன்னொரு புத்தாக்க நிறுவனமான ஆஸ்ட்ரோடாக் நியூயார்க்கை மையமாகக் கொண்டு இயங்கிவரும் லெஃப்ட் லேன் கேப்பிடலிலிருந்து 20 மில்லியன் டாலரை முதலீடாகப் பெற்றிருக்கிறது.
இத்துறையில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் உத்வேகம் காட்டி வந்தாலும் சவால்கள் இல்லாமல் இல்லை. இதில் முக்கியமானது இத்துறையில் அறிமுகமின்மையும் இதன் நிலையற்ற தன்மையும் ஆகும். 1.1 பில்லியன் இந்து மக்களையும் 1 மில்லியன் கோவில்களையும் கொண்ட நமது நாட்டில் இது ஒரு பசுமையான துறையாகும். இத்துறையில் நுழையும் புத்தாக்க நிறுவனங்கள் நம்பிக்கையான சேவைகளை வழங்கும்பட்சத்தில் இதன் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என இத்துறையில் நீண்டகாலமாக இயங்கி வருபவர்கள் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.
இன்றைக்கு இந்தியாவில் முன்னணியில் இருந்து வரும் ஆஸ்ட்ரோடெக் நிறுவனங்கள்: AstroSage, Astrotalk, AstroVision, Astroyogi, Cosmic Insights, CyberAstro, GaneshaSpeaks, Guruji, InstaAstro, Melooha.
கோவில் சம்பந்தப்பட்ட சேவைகளை வழங்குவதில் முன்னணியில் இருந்து வரும் நிறுவனங்கள்:
3ioNetra, DevDham, DevSeva, EPuja, MyMandir, Online Prasad, Shubhpuja, SriMandir/AppsForBharat, Utsav, Vama.
ஆக, இந்தியாவின் `ஸ்பிரிட்சுவல்டெக்’ துறையானது மாற்றத்தக்க வளர்ச்சிக்குத் தயாராக இருக்கிறது என்பதை அந்த `ஆண்டவனே’ தீர்மானித்திருப்பதாகத் தோன்றுகிறது!
இன்று நாம் மண்ணையும் நீரையும், காற்றையும் வரம்பு மீறி மாசு படுத்தியுள்ளோம், இதனால் அதன் நிலைத்தன்மை கேள்விக்குறியாகவே உள்ளது.
அடிப்படையில், இயற்கையாக அனைத்து நீர் நிலைகளும் வளிமண்டலத்தில் இருந்து கார்பனை உறிஞ்சுகிறது மற்றும் தண்ணீரில் அதிகமாக கரைந்த ஆக்ஸிஜன் (DO) அளவை பராமரிக்க ஆக்ஸிஜனை (O2) வெளியிடுகிறது, மேலும் காற்றில் உபரி ஆக்ஸிஜனை (O2) வெளியேற்றுகிறது.
ஆனால் மனிதர்களான நாம் கழிவுநீர் உற்பத்தி மற்றும் கழிவுகளை உருவாக்குதல் போன்ற மானுடவியல் செயல்பாடுகளால், இந்த சுற்றுச்சூழல் அமைப்பைக் கெடுத்துவிட்டோம், இதன் விளைவாக புவி வெப்பமடைதல், காலநிலை மாற்றம், காற்று மாசுபாடு, குடிநீர் பற்றாக்குறை போன்றவை ஏற்படுகின்றன.
உலகம் இதை எப்படி சரிசெய்வது என்று அதற்கான முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், இந்தியாவில் ஒரு நிறுவனம் இதற்கு நிலையான வழியை உருவாக்கி இருக்கிறார்கள். அது வைதிக அறிவியலின் அடிப்படையில் ஈரநிலங்களின் பூர்வீக சூழலியல் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதாகும்.
தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், குஜராத், டெல்லி மற்றும் பஞ்சாப், ஹரியானா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே இது நிரூபிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 100% உள்நாட்டுத் தொழில்நுட்பத்தின் மூலம் கீழே உள்ளவற்றை சாதிக்க இந்த நிறுவனம் உதவுகிறது.
• சிட்டு நீர் சுத்திகரிப்பு (In situ treatment of Waterbodies)
சிட்டு நீர் சுத்தகரிப்பு என்பது acid mine drainage (AMD) treatment, கொந்தளிப்பு கட்டுப்பாடு, பாசி கட்டுப்பாடு, ஊட்டச்சத்து மாசு கட்டுப்பாடு, உலோக கட்டுப்பாடு, கிருமி நீக்கம், குளோரினேஷன், சயனைடு அழித்தல், pH கட்டுப்பாடு, உப்புத்தன்மை கட்டுப்பாடு மற்றும் நீரில் கரைந்துள்ள உலோகங்களைக் குறைத்தல் ஆகியவை அடங்கும். சிட்டு நீர் சுத்திகரிப்புக்கு பல தொழில்நுட்பங்கள் உள்ளன.
• மழை நீர் சேகரிப்பு & நீர்நிலை ரீசார்ஜ்
• காற்று மாசு குறைப்பு
• குடிப்பதற்கும் பாசனத்துக்கும் ஏற்ற நீர் வளம்
• கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு
சதுப்பு நிலங்கள் மற்றும் நீர்நிலைகளில் உள்ள பூர்வீக சூழலியலின் சுற்றுச்சூழல் மறுமலர்ச்சிக்கான இந்த தொழில்நுட்பத்தை “கௌனமிக்ஸ் தொழில்நுட்பம்” (Cownomics Technology) என்று அழைக்கிறார்கள்.
Cownomics தொழில்நுட்பம் என்றால் என்ன?
எந்த வகையான நீர் உள்ளே வந்தாலும், எந்த நீர்நிலையையும் நீல நிற கார்பன் சிங்காக (blue carbon sink) மாற்றும் தொழில்நுட்பத்தை இந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது. இது Cownomics Technology என்று அழைக்கப்படுகிறது. முதன்மையாக, இயந்திரவியல், இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது நுண்ணுயிரியல் ஆகியவற்றைப் பயன்படுத்தாமல் மண், நீர் மற்றும் காற்று சூழலியல் ஆகியவற்றின் சூழலியல் மறுமலர்ச்சிக்காக இந்த தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டது.
சுற்றுச்சூழலின் வாழ்க்கைச் சுழற்சிகளை புத்துயிர் பெற இயற்கையிலிருந்து இலவச ஆற்றலைப் பயன்படுத்துகிறது.
இது போல நீர்வாழ் உணவுச் சங்கிலியை மீட்டெடுப்பதன் காரணமாக நீர்வாழ் உயிரினங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் உள்ளது, அதாவது நீர்நிலையைச் சுற்றி பறவைகள், தேனீக்கள் மற்றும் பட்டாம்பூச்சிகள் திரும்புகின்றன. சதுப்பு நிலம் / நீர்நிலையைச் சுற்றி ஒரு நுண்ணிய காலநிலையை உருவாக்குவதன் காரணமாக நீர்நிலையைச் சுற்றியுள்ள அனைத்து வடிவங்களிலும் உயிர்கள் பெருகுகின்றன, நுண்ணுயிரிகளுக்கான மூன்று சாத்தியமான வாழ்விடங்களிலும் உள்ள பூர்வீக சூழலியல் (மண், நீர் மற்றும் காற்று) உயிர்த்தெழுகிறது.
கழிவு நீர் 100 சதவீதம் அசுத்தமானதா?
95% கழிவு நீர் தூய்மையானது மற்றும் 5% அசுத்தமானது. இந்த 5% கழிவுகளை அதிலிருந்து பிரித்தெடுத்தால், மீதமுள்ளவை மீண்டும் தூய்மையாகி விடும். ஆனால் இந்த சித்தாந்தத்தில் ஒரு அடிப்படை குறைபாடு உள்ளது. தண்ணீரின் அடிப்படைத் தன்மையைப் பற்றிய புரிதல் இல்லாததுதான் பிரச்சனை. தண்ணீரில் எதையும் சேர்க்கும் போது, சிதைவு செயல்முறை அங்கு தொடங்குகிறது. உதாரணமாக, நாம் தண்ணீரில் அமோனியாவை கலக்கும் போது அது நைட்ரைட்டாக சிதைந்துவிடும். எனவே, நீரிலிருந்து நைட்ரேட்டை வெளியே எடுத்தால், ஏதோ ஒன்று மிச்சம். இதனால், நீர் இயற்கையான சுயத்திற்குத் திரும்பவில்லை. இதை கௌனமிக்ஸ் முறையில் சுத்தப்படுத்தி மறு உபயோகம் செய்ய வழி வகுக்கலாம்.
பெற்ற விருதுகள்
இந்த நிறுவனம் இவர்களின் முயற்சிக்காக பல விருதுகளை பெற்றுள்ளது. இவர்களால் பல நீர்நிலைகள் பசுமை கொழிக்கும் வகையில் மாறியுள்ளன என்பதை இவர்களின் இணையதளத்தில் (www.vaidicsrijan.com) சென்று பார்த்தால் தெரிந்து நாம் ஆச்சரியப்படுவோம்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களான சூரிய, காற்று மற்றும் நீர் மின்சாரம் போன்ற சக்திகளை பயன்படுத்துவதன் மூலம் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வுகள் கணிசமாகக் குறைக்கப்படும் அல்லது அகற்றப்படும் ஒரு டிகார்பனைஸ் செய்யப்பட்ட ஆற்றல் அமைப்பை அடைய முடியும்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் நமக்கு பல நன்மைகளைக் தருகிறது. அதாவது இந்த ஆற்றல் சுத்தமானது மற்றும் காலநிலை மாற்றத்திற்கு பங்களிக்கும் அபாயகரமான உமிழ்வை உருவாக்காது. பாரம்பரிய எரிசக்தி ஆதாரங்களை விட இது மிகவும் செலவு குறைந்ததாகும், காரணம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் புதைபடிவ எரிபொருட்களை விட மிகவும் மலிவாக மின்சாரத்தை உருவாக்க முடியும்.
உலகம் தொடர்ந்து வளர்ந்து வருவதால் மற்றும் ஆற்றல் தேவைகள் அதிகரித்து வருவதால், உலகளாவிய எரிசக்தி தேவையை பூர்த்தி செய்வதில் புதுப்பிக்கத்தக்கவை வருங்காலத்தில் இன்னும் பெரிய பங்கை வகிக்கும்.
சீனா, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகியவை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சியின் அடிப்படையில் முன்னணி நாடுகளில் சிலவாகும், சீனா மட்டுமே உலகின் மொத்த புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனில் கிட்டத்தட்ட பாதியைக் கொண்டுள்ளது.
சூரிய எரிசக்தி
சூரிய எரிசக்தி புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் அபரிமிதமான ஆற்றலுடன் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஒரு தொழிலாகும்.
இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமாக உள்ள நாடுகளில் மின்சார பற்றாக்குறை எப்போதும் இருக்கும். இந்தியாவின் பெரிய பலங்களில் ஒன்று சூரிய சக்தி. அதிலிருந்து மின்சாரம் எடுப்பது தற்போது அதிகமாகி வருகிறது. சூரிய எரிசக்தி இந்தியாவில் அதிக அளவு கிடைத்தாலும், அதில் 50 சதவீதத்திற்கு அதிகமான சக்தியை சரிவர பயன்படுத்துவதில்லை.
சூரிய எரிசக்தியை சரிவர பயன்படுத்த அதலிருந்து எடுக்கப்படும் மின்சார அளவை அதிகரிக்க ரோபாடிக் டெக்னாலஜி நாம் செய்ய முடியாத பல காரியங்களை எளிதாக செய்து விடுகிறது. இதனால் மனித குலத்திற்கு பல பயன்கள் கிடைத்துள்ளன.
என்ன ப்ராபளம்?
சோலார் பேனல்களை பராமரிப்பது கடினமான பணியாகும், குறிப்பாக அவற்றை சுத்தமாக வைத்திருப்பது. சோலார் பேனல்களில் அழுக்கு, தூசி மற்றும் பிற குப்பைகள் குவிவது அவற்றின் செயல்திறனை கணிசமாகக் குறைக்கும், இது குறைந்த ஆற்றல் உற்பத்தி மற்றும் சோலார் ஆலை நடத்துபவர்களுக்கு வருவாய் குறைவிற்கு வழிவகுக்கும். தற்போது சராசரியாக, சோலார் பேனல்கள் பரப்புகளில் பதிக்கப்பட்டிருக்கும் அழுக்கு இழப்புகளால் செயல்திறன் 35% குறைந்துள்ளது.
சோலார் பேனல் சுத்திகரிப்பு தேவை என்பது ஆலை நடத்துபவர்களுக்கு மட்டும் பிரச்சினை இல்லை. சுத்தம் இல்லாததால் சோலார் பேனல்களின் செயல்திறன் குறைவது பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும். சூரிய ஆற்றல் பெருகிய முறையில் பிரபலமான மின்சார ஆதாரமாக மாறுவதால், சோலார் பேனல்களின் செயல்திறனில் ஏதேனும் குறைப்பு ஒட்டுமொத்த ஆற்றல் விநியோகத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.
எப்படி செயல்படுகிறது?
ஃபோட்டோம் டெக்னாலஜிஸ் என்ற ஸ்டார்ட் அப் கம்பெனி புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறைக்கு பயனுள்ள ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் தீர்வுகளை வழங்கும் நோக்குடன் 2018 இல் நிறுவப்பட்டது. மேலே குறிபிட்டுள்ள இந்த சிக்கல்களை தவிர்க்க, ஃபோட்டோம் டெக்னாலஜிஸ் என்ற ஸ்டார்ட் அப் சோலார் பேனல்களை நீரற்ற சுத்தம் மற்றும் ஆய்வு செய்ய ரோபோக்களை உருவாக்கியுள்ளது.
இவர்களின் ரோபோ அமைப்பு சோலார் பேனல்களில் செல்லவும், சுத்தம் மற்றும் மேற்பரப்பு ஆய்வு பணிகளை செய்யவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரோபோ பயன்படுத்தும் துப்புரவு பொறிமுறையானது உலர் துப்புரவு பொறிமுறையாகும், இது அனைத்து வகையான தட்பவெப்ப நிலைகளிலும் பயனுள்ளதாக இருக்கும், நீர் அல்லது இரசாயனங்களின் தேவையை நீக்குகிறது. ரோபோட்டிக் அமைப்பில் ரிமோட் கண்ட்ரோல் மற்றும் கண்காணிப்புக்கான வெப் டேஷ்போர்டும், சோலார் பேனல்களில் மைக்ரோகிராக்குகள் மற்றும் ஹாட்ஸ்பாட்களைக் கண்டறிவதற்கான வெப்ப ஸ்கேனர்கள், பேனல் ஆரோக்கியம் குறித்த தகவல்களையும் வழங்கும்.மேலும் தகவல்களுக்கு இவர்களின் இணையதளத்தை சென்று பாருங்கள் www.photomtechnologies.com.
காமிக்ஸ் என்றால் பலருக்கு சிவகாசி முத்து காமிக்ஸின் முத்தான புத்தகங்கள் தாம் நியாபகத்திற்கு வரும். அந்த அளவிற்கு அவர்களின் இரும்புக் கை மாயாவிலிருந்து பல கேரக்டர்கள் நமக்கு பரிச்சயமானவை. அதன் ஸ்தாபகர் செளந்திரபாண்டியன் தொழில் நிமித்தமாக வெளிநாடுகளுக்கு செல்லும் போது அங்கிருக்கும் காமிக்ஸ் புத்தகங்களை பார்த்து அதனால் ஈர்க்கப்பட்டு அவற்றை தமிழில் வெளியிடும் உரிமைகளை வாங்கி முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் என்று வெளியிட ஆரம்பித்தார். அது குழந்தைகளிடையே மிகவும் வேகமாக புகழ் பெற ஆரம்பித்தது. ஆனால் இவர்களின் காமிக்ஸ் புத்தகங்கள் வெளிநாட்டில் இருந்து காப்பிரைட்ஸ் மூலமாக வாங்கப்பட்டு மொழிபெயர்ப்பு மட்டும் செய்யப்பட்டு வெளியிடப்பட்டதால் கதைகளுக்கு படங்கள் வரையும் வேலையில்லை. முன்பு போல தமிழில் காமிக்ஸ் புத்தகங்கள் படிக்கும் ஆர்வம் மக்களுக்கு இல்லையென்றாலும், ஆங்கில காமிக்ஸ்கள் அதிகம் இடத்தை ஆக்கிரமித்து கொண்டாலும், இந்த நிறுவனம் ஆர்வம் காரணமாக இன்னும் 50 வருடங்களாக காமிக்ஸ் புத்தக வெளியீட்டில் இருக்கிறார்கள்.
இவர்கள் தவிர ஓவியக் கலைஞர்களை வைத்து காமிக்ஸ் கதைகளுக்கு படங்கள் வரைந்து வெளியிடும் கம்பெனிகளும் பல இருக்கின்றன. அமர் சித்ர கதா போன்றவை.
அந்த காலத்தில் காமிக்ஸ் கதைகளுக்கு படம் வரைவது என்றால் அதிக நாட்கள் எடுக்கும். ஒவ்வொரு படத்திலும் அந்த காமிக்ஸ் கேரக்டர்களின் முகத்தை சரியாக கொண்டுவருவது என்பது ஒரு பெரிய கலை. அதை சிறந்த ஓவியக் கலைஞர்களால் தான் கொண்டு வர முடியும். பின்னர் இந்த துறையில் டெக்னாலஜிகள் வளர ஆரம்பித்தன. தற்போது வந்திருக்கும் டெக்னாலாஜி மிகவும் ஆச்சரியமான ஒன்றாகும். இதை ஒரு ஸ்டார்ட் அப் சாதித்திருக்கிறது.
2022 வருடத்தில் சானித்யா நரேன், லலித் குடிபதி மற்றும் சௌம்யதீப் முகர்ஜி ஆகியோரால் நிறுவப்பட்ட டாஷ்டூன் (Dashtoon) என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் காமிக்ஸ் உருவாக்கத்தில் ஒரு புதிய அணுகுமுறையைக் கொண்டுவருகிறது, இது வரையும் திறன் இல்லாதவர்கள் கூட காமிக்ஸ் கதைகளுக்கு படங்கள் வரைய முடியும். இது ஆர்ட்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ் டெக்னாலஜியை உபயோகித்து கதைளை வசீகரிக்கும் காமிக்ஸாக மாற்றுவதற்கான ஒரு தளத்தை வழங்குகிறது.
இவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால் புதுமையான டாஷ்டூன் ஸ்டுடியோவைப் பயன்படுத்தி, படைப்பாளிகளின் ஸ்டோரி போர்டுகளைப் பதிவேற்றுகிறார்கள், பிளாட்ஃபார்ம் லைப்ரரியில் இருந்து கேரக்டர்களை தேர்ந்தெடுக்கிறார்கள் அல்லது காட்சிகளை உருவாக்க படங்களைப் பதிவேற்றுகிறார்கள், தயாரிப்பு நேரத்தை ஒரு எபிசோடிற்கு 40-50 மணி நேரத்திலிருந்து வெறும் 5-6 மணிநேரமாக வெகுவாகக் குறைக்கிறார்கள். இவர்களின் இந்த செயல்திறன் தினசரி எபிசோட் வெளியீடுகள் வெளிவர உதவுகிறது. கதை சொல்லுபவர்களை, எழுத்தாளர்களை ஓவியர்களாக மாற்றும் அதிசயத்தை இந்த ஸ்டார்ட் அப் செய்து வருகிறது.
கிரியேட்டர்கள் கதைகளை கோடிட்டுக் காட்டுகிறார்கள், முக்கிய நபர்களின் குணாதிசயங்கள் மற்றும் வரைபட ஸ்டோரிபோர்டுகளை உருவாக்குகிறார்கள், டாஷ்டூனின் தொழில்நுட்பம் இந்த கூறுகளை மெருகூட்டப்பட்ட காமிக் வெளியீட்டாக மாற்றுகிறது. இது ஒரு ஆச்சரியம் தான்.
காமிக்ஸ் சந்தை
காமிக்ஸ் சந்தை பெரியதாகும். Allied Market Research படி 2022 ஆம் ஆண்டில் உலகளாவிய காமிக் சந்தை 120,000 கோடி ரூபாய்களாக இருக்கிறது. மேலும் 2032 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 200,000 கோடி ரூபாய்களாக உயரும் வாய்ப்புகள் அதிகம்.இவர்களின் இணயதளம் www.dashtoon.com சென்று பாருங்கள். நீங்களும் ஒரு காமிக்ஸ் புத்தகம் கொண்டு வரலாம்.
“வாஷிங் பவுடர் நிர்மா
வாஷிங் பவுடர் நிர்மா
பாலைப்போல வெண்மை நிர்மாவாலே வருமே.
வண்ணத்துணிகள் எல்லாம் பளபளப்பு பெறுமே.
எல்லோரும் போற்றும் நிர்மா.
வாஷிங் பவுடர் நிர்மா நிர்மா…”
90களில் இந்த விளம்பரத்தை அறியாதவர்கள் மிகக் குறைவு. அப்போது மிகவும் வெற்றிகரமான பிராண்டாக இருந்ததோடு, அப்போதும் இப்போதும் FMCG வர்த்தகத்தில் கொடி கட்டி பறக்கும் இந்துஸ்தான் யூனிலீவர் (HUL) நிறுவனத்தின் வலுவான போட்டியாளராக இருந்த நிர்மா இந்திய FMCG வரலாற்றில் ஒரு பேசு பொருளாக இருந்தது.
B.Sc பட்டதாரியான கர்சன்பாய் கோதிதாசு படேல் குஜராதிலுள்ள கிராமத்தில் ஒரு ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். தனது 21 வயதில் அகமதாபாத்தில் உள்ள நியூ காட்டன் மில்ஸ் என்ற தொழிற்சாலையில் லேப் டெக்னீஷனாக வேலைக்கு சேர்ந்தார். பின்னர் குஜராத் மாநில அரசின் சுரங்கத் துறையில் வேலை புரிந்து கொண்டிருக்கும் போது தனது வீட்டுக்கு கொல்லைப்புறத்தில் 1969 ஆம் ஆண்டில் சோப்புத்தூளை தயாரித்து பேக்கிங் செய்து விற்பனை செய்ய தொடங்கினார்.
அப்போது வாஷிங்மெஷின்கள் புழக்கத்தில் கிடையாது. பணக்காரர்கள் மட்டுமே வாங்கி உபயோகிக்கக்கூடிய பொருளாக இருந்தது. வேலைக்கு செல்பவர்களுக்கு கட்டி சோப்பைத் தேய்த்து துணியை துவைக்க நேரமில்லை. மலிவான விலையில் சோப்புத்தூளை தனது கெமிஸ்ட்ரி அறிவைக் கொண்டு பட்டேல் தயாரித்தது தான் நிர்மா டிடர்ஜென்ட் பவுடர்.
மூலப் பொருள்களை குறைந்த விலையில் வாங்கி சோப்புத்தூளை தயாரித்து கால் கிலோ, அரை கிலோ என்று பேக்கிங் செய்து அலுவலகத்திற்கு சைக்கிளில் செல்லும் போது பாக்கெட்டுகளை வைத்துக் கொண்டு போகும் போதும் வரும் போதும் விற்பனை செய்வார். அந்த நேரத்தில் சோப்புத்தூள் சந்தையில் முன்னோடியாக இருந்த சர்ஃப் (HUL இன் தயாரிப்பு) விலை கிலோ ரூ 15 என்றால் நிர்மாவின் விலை வெறும் ரூ 3.50 தான். சர்ஃப்பை விட நிர்மா விலை குறைவாக இருந்ததால் கிராமப்புற சந்தையில் விரைவாக பிரபலமடைந்ததோடு, நுகர்வோர் மனதில் குறைந்த விலை, பணத்திற்கும் மதிப்பு என எளிய வர்க்கத்தினரின் வீட்டு சோப்பாக மாறியது.
80களில் நிர்மா என்ற பிராண்டை தெரியாதவர்களே இல்லை. போட்டியாளர்கள் நிர்மா சோப்பு தூள் உபயோகித்தால் துணிகள் விரைவில் கிழிந்து விடும், சாயம் வெளுத்துப் போகும், கைகளில் அரிப்பு ஏற்படும். நிறைய கெமிக்கல்கள் இருக்கின்றன என்றெல்லாம் எதிர்மறை பிரச்சாரங்களை மேற்கொண்டனர். போதாக்குறைக்கு நிர்மாவின் விற்பனையாளர்கள் தாங்கள் விற்ற பொருட்களுக்கு பணம் கேட்கும்போது “இன்று போய் நாளை வா” என்று என்று சொல்ல, ஒரு காலகட்டத்தில் நிர்மாவுக்கு வர வேண்டிய தொகை ஏராளம். அதாவது பொருள் இருக்கிறது, பணம் வசூல் ஆகவில்லை. இதே நிலை நீடித்தால் கம்பெனியை இழுத்து மூட வேண்டி வரும் என்று நினைத்த பட்டேல் தனது விற்பனையாளர் குழுவை கடைக்காரர்களிடம் அனுப்பி “ஒண்ணு காசக் குடு, இல்லாட்டி சரக்க திருப்பிக் கொடு” என்றார்கள். விநியோகஸ்தர்களும் சில்லறை விற்பனையாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர். மார்க்கெட்டில் நிர்மா சோப்புத்தூள் கிடைக்கவில்லை. அதை தொடர்ந்து அத்தனை ஊடகத்திலும் நிர்மா விளம்பரங்கள் தான். வாடிக்கையாளர்கள் கடைகளில் கேட்டால் நிர்மா கிடைக்கவில்லை. இதற்குத்தானே காத்திருந்தார் பட்டேல்! உடனடியாக தனது விற்பனையாளர் கூட்டத்தை கூட்டி டெலிவரி வேன்கள் மூலம் நிர்மா பவுடரை சந்தைக்கு அனுப்பினார். இந்த முறை கையில காசு வாயில தோசை. கடன், தவணை என்ற பேச்சுக்கே இடம் இல்லை!
நிர்மாவின் வெற்றிக்கு காரணம் தரமான பொருளை போட்டியாளர்களை விட குறைந்த விலையில், குறைந்த லாபத்திற்கு விற்றது தான். வாடிக்கையாளர்களுக்கு என்ன தேவையோ, எப்போது தேவையோ, எங்கே தேவையோ, என்ன விலையில் தேவையோ, அதை பூர்த்தி செய்தால் விற்பனை தன்னாலே நடக்கும் என்பதுதான் நிர்மாவின் வெற்றிக்கான வணிக சூத்திரம். வெற்றிகரமான ஒரு பிசினஸை நிறுவுவதற்கு பெரிய டிகிரியோ அல்லது எம்பிஏ படிப்போ தேவையில்லை என்பதை நிரூபித்தவர் பட்டேல்.
நிர்மாவை சந்தையில் இருந்து அகற்றுவதற்கு HUL, Operation STING (Strategy to Inhibit Nirma’s Growth) என்ற உத்தியை உருவாக்கி, 1988 ல் வீல் வாஷிங் பவுடரை அறிமுகப்படுத்தியது. அப்போது 60% மார்க்கெட் சந்தை பங்கை கொண்டிருந்த நிர்மாவின் வருடாந்திர விற்பனை 1.72 லட்சம் டன்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். பொதுவாக HUL போன்ற பெரிய நிறுவனங்கள் விலை உயர்ந்த பொருள்களை விற்கும் என்றாலும் சந்தைக்கு இது ஒரு பெரிய மாற்றம். வீல் வாஷிங் பவுடரின் விலை குறைவாக இருந்ததோடு அதிரடியான விளம்பர பிரச்சாரங்கள், வர்த்தக சலுகைகள் மூலம் முழு சந்தையையும் கைப்பற்றியது. மலிவான தயாரிப்புகளை ஒரு பெரிய நிறுவனம் சரியாக செய்தால் நிர்மா போன்ற உள்ளூர் தயாரிப்பாளர்களை வெல்ல முடியும் என்பதற்கு இது ஒரு கேஸ் ஸ்டடியாகவே இன்றும் இருந்து வருகிறது.
டூத் பேஸ்ட், ஷாம்பூ போன்ற தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி தனது பிராண்ட் எக்ஸ்டென்ஷன் -உற்பத்தி பொருட்களை விரிவுபடுத்தினாலும், குறைந்த விலை, பணத்திற்கு மதிப்பு என்ற அதே பழைய உத்தியையே கடைப்பிடித்தது நிர்மா. செலவழிக்கும் வருமானம் அதிகமானதால் குறைந்த விலைப் பொருள்களை மக்கள் மலிவானதாக உணரத் தொடங்கிய காலகட்டத்தில் நுகர்வோர்கள், எக்கனாமி பிராண்டுகளில் இருந்து உயர்மட்ட பிராண்டுகளுக்கு மாறினர். நிர்மா இந்த மாற்றத்தை பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டது. நிர்மா ப்ளூ, நிர்மா கேக், நிர்மா குளியல் சோப் என பல்வேறு தயாரிப்புகளை அறிமுகப்படுத்தினாலும் அவற்றிற்கு சந்தையில் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.
காலப்போக்கில் நிர்மாவின் சந்தை பங்கு குறைந்து கொண்டிருந்தாலும் இன்றும் நிர்மாவிற்கென்று மார்க்கெட்டில் கணிசமான ஷேர் இருக்கிறது. 1969 இல் தனி நபரால் துவக்கப்பட்ட நிர்மா நிறுவனம் இன்று 18,000த்துக்கும் மேற்பட்ட ஊழியர்களோடு ஆண்டு ஒன்றுக்கு 7000 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் செய்து வருகிறது. எந்த வேர்வைக்கும் வெற்றி ஒரு நாள் “வேர்” வைக்கும், என்ற கவிஞர் வாலியின் வரிகளுக்கு உதாரணம் கர்சன் பாய் பட்டேலின் ரிஸ்க் எடுக்க துணிந்த அவரது தன்னம்பிக்கையும் புதுமையான சிந்தனையும் தான் காரணம் என்றால் மிகை இல்லை.
டி.வி.யில் விளம்பரங்கள் பார்த்து கொண்டிருக்கும் போது அமிதாப் பச்சன் வந்து தமிழில் பேசுவார், இந்த பொருளை வாங்குங்கள் என்பார். அவருக்கு தமிழ் தெரியாது. ஆனால், அப்போது அவரது வாயசைப்பு, அவர் பேசும் தமிழுக்கு பொருத்தமாக இருக்க வேண்டும். இது இன்றைய தினம் ஜெனரேட்டிவ் AI இன் டெக்னாலஜியின் தலையீட்டால் சாத்தியம்.
அமிதாப்பின் டப்பிங் கண்டெண்ட் பார்வையில் உண்மையானது மற்றும் ரியலிஸ்டிக்காக இருப்பது போன்று தோற்றமளிக்க ஒரு ஸ்டார்ட் அப் முயற்சி செய்து வெற்றியும் கண்டிருக்கிறது.
இன்றைய தினம் டி.வி., யூடியூப், சினிமா போன்ற துறைகளில் டப்பிங் அதிக அளவில் உபயோகப் படுத்தப்படுகிறது. ஒரு தடவை எடுக்கும் ஷூட்டிங் பல மொழிகளில் டப் செய்யப்படுகிறது. இது விளம்பர படங்களுக்கும், சினிமாவிற்கு அதிக அளவில் பொருந்தும்.
நியூரல் கேரேஜ் என்ற கம்பெனியின் “விஷுவல்டப்” என்ற இந்த ஸ்டார்ட் அப் கம்பெனியின் டெக்னாலஜியை பயன்படுத்தும் போது காட்சியை மறுபடி எடுக்காமலேயே நீங்கள் சிரமமின்றி, துல்லியமாக உரையாடல்களை மாற்றலாம்.
இது எப்படி சாத்தியமாகிறது என்றால், ஜெனரேட்டிவ் ஏஐ என்ற தொழில்நுட்பத்தினால் தான். இது நடிகர்களின் உதடுகள், வாய், தாடை மற்றும் புன்னகை வரிகளை டப்பிங் செய்யப்பட்ட ஆடியோவுடன் சரியாக ஒத்திசைப்பதன் மூலம் டப்பிங் செய்யப்பட்ட உள்ளடக்கத்தில் தடையற்ற பார்வை அனுபவத்தை உருவாக்க உதவுகிறது.
இன்று, கண்டெண்ட் உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் பார்வையாளர்களைச் சென்றடைய பல மொழிகளில் உள்ளடக்கத்தை டப் செய்கிறார்கள். இருப்பினும், நடிகர்களின் உதடு மற்றும் தாடை அசைவுகள் அவர்களின் வாயிலிருந்து வரும் வார்த்தைகளுடன் பொருந்தாததால், டப்பிங் செய்யப்பட்ட உள்ளடக்கம் ஒரு ஒத்திசைவான பார்வை அனுபவத்தை வழங்கவில்லை.
இந்த ஸ்டார்ட் அப் கம்பெனியை தோற்றுவித்தவர் கொரியன் மொழியில் இருந்து டப் செய்யப்பட்ட படங்களை அதிகம் பார்ப்பவர். அப்போது அந்த கொரியன் நாட்டு நடிகர்கள் பேசும் ஆங்கிலம் அவர்களின் வாயசைப்புக்கு சிறிதும் பொருந்தாமல் இருந்தது. மேலும், அப்படி வாயசைப்பு பொருத்தாமல் இருந்ததால் அவரால் அந்த படத்தை லயித்து பார்க்க இயலவில்லை. இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதலில் பிறந்தது தான் இந்த ஸ்டார்ட் அப்.
செயற்கை நுண்ணறிவின் முன்னேற்றங்கள் இந்த சிக்கலைத் தீர்க்க உதவுமா என்று யோசித்து, இந்த தொழில்நுட்பத்தின் சாத்திய கூறுகளை ஆராய ஆராய்ச்சியைத் தொடங்க முடிவு செய்தார். அவரது ஆர்வம் மற்றும் ஆடியோ மற்றும் வீடியோ இடையே உள்ள இடைவெளியைக் குறைப்பது ஆகும். பின்னர் நண்பர்களுடன் இணைந்து இதை சாத்தியமாக்கினார்.
எப்படி செயல்படுகிறது?
‘நியூரல் கேரேஜ்’ என்ற பெயர் நரம்பியல் நெட்வொர்க்குகளைக் குறிக்கிறது – விஷுவல் டப் என்ற இவர்களின் முதன்மை நிறுவனம், நடிகர்களின் உதடு மற்றும் தாடை அசைவுகளை ஆடியோவுடன் ஒத்திசைப்பதன் மூலம் டப்பிங் உள்ளடக்கத்தில் ஆடியோ-விஷுவல் வேறுபாட்டைக் குறைக்கிறது. “விஷுவல்டப்”- பின் தனியுரிம உருவாக்கும் AI தொழில்நுட்பமானது, பேசப்படும் வார்த்தைகளுடன் நடிகர்களின் தாடை மற்றும் உதடு அசைவுகளை ஒத்திசைப்பதன் மூலம் டப்பிங் உள்ளடக்கத்தில் வெளிப்படையாக இருக்கும் முரண்பாடுகளை நீக்குகிறது. ஜெனரேட்டிவ் AI ஆனது ஆடியோ ஆக்டிவேஷனைப் பயன்படுத்தி முகப் பகுதிகளை மாற்றுகிறது, அவற்றை மற்ற காட்சிகளுடன் கலக்கிறது. உதடு அசைவுகள் அசைவுகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளன, மேலும் தாடை மற்றும் கன்னம் அசைவுகள் மற்றும் புன்னகைக் கோடுகள் இதனுடன் ஒத்திசைக்கப்பட்டு, டப்பிங் செய்யப்பட்ட உள்ளடக்கத்தை காட்சிக்கு யதார்த்தமாகவும் இயற்கையாகவும் மாற்றுகிறது.மேலும் விபரங்களுக்கு இவர்களின் இணையதளத்தை சென்று பாருங்கள் www.visualdub.com.
இந்தியாவில் வளர்ப்புப் பிராணிகள் அல்லது செல்லப் பிராணிகள் சார்ந்த சந்தையானது வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் நுகர்வோர்களின் மாறிவரும் மனநிலையும், செல்லப் பிராணிகள் வளர்ப்போரிடையே படிப்படியாக மாறிவரும் நடத்தைகளும் ஆகும்.
செல்லப் பிராணிகள் சார்ந்த சந்தையின் மொத்த விற்பனையில் அதற்கான உணவுப் பொருள்களின் பங்களிப்பு 70 சதவீதமாகவும், ஷாம்பூ, கண்டிஷனர், கூடுதல் சத்துணவு, மற்றும் செல்லப் பிராணிகளுக்குத் தேவையான பொருள்கள் ஆகியவை மீதமுள்ள 30 சதவீதமாகவும் இருக்கிறது. இச்சந்தையின் கூட்டு வளர்ச்சி சுமார் 20 சதவீதமாகும். இச்சந்தையானது 2025 ஆம் ஆண்டில் ரூ 20,000 கோடிக்கும் மேலான விற்பனையைத் தொடும் என இத்துறை சார்ந்தவர்கள் கணித்திருக்கின்றனர்.
`செல்லப் பிராணிகளை வளர்ப்பதில் இள வயது பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இவர்களுடைய குழந்தைகள் பெரும்பாலும் ஆறு வயதுக்கு குறைவான வயதை உடையவர்களாக இருக்கிறார்கள்’ என்று இத்துறை சார்ந்த நிறுவனமொன்றின் பொது மேலாளர் குறிப்பிடுகிறார்.
பெருநகரங்கள் மற்றும் நகரங்களில் வாழ்பவர்கள் பூனை வளர்ப்பதில் நாட்டம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். நாய் வளர்ப்பதில் கிராமத்தினர், நகரங்களில் வாழ்பவர் இரு தரப்பினரும் ஏறக்குறைய சம அளவில் இருக்கிறார்கள்.
இந்தியாவில் செல்லப் பிராணிகள் வளர்க்கும் குடும்பங்களின் எண்ணிக்கை நகர்ப்புறத்தில் 25 சதவீதமாக இருந்து வருகிறது. இது 2025 ஆம் ஆண்டில் 35 சதவீதத்தைத் தொடக்கூடும்.
பிராணிகளிடையே பரிவு காட்டுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தாங்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு சிறப்பான பொருள்களையும் சேவைகளையும் வாங்குவதற்கு அதன் உரிமையாளர்கள் அல்லது `பெற்றோர்கள்’ தயங்குவதில்லை.
செல்லப் பிராணிகளுக்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்கு சந்தாவின் அடிப்படையிலான சேவைகள் அதிகரித்து வருகின்றன. அது போல செல்லப் பிராணிகளின் நலன் மீது அக்கறை கொண்டவர்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் வகையில் அதன் நலனைத் தொடர்ந்து கண்காணிப்பதற்குத் தேவையான நவீன தொழில்நுட்ப அடிப்படையிலானக் கருவிகளும், புதுமையான தீர்வுகளும் அதிகரித்து வருகின்றன.
இத்துறையில் இயங்கிவரும் முக்கியமான ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள்: Heads Up For Tails (HUFT), Just Dogs & Zigly, Supertails, Vetic (இது பிராணிகளுக்கென வைத்தியசாலைகளை நிர்வகித்து வருகிறது) மற்றும் Wiggles ஆகும். இது வரை இத்துறை சார்ந்த நிறுவனங்கள் சுமார் 170 மில்லியன் டாலர் மூதலீட்டை ஈர்த்திருக்கின்றன. இதில் Drools என்கிற ஸ்டார்ட்-அப் மட்டும் L Catterton என்கிற முதலீட்டாளரிடமிருந்து 60 மில்லியன் டாலரை முதலீடாகப் பெற்றிருக்கிறது. இது போல HUFT என்கிற ஸ்டார்ட்-அப் 37 மில்லியன் டாலரையும், Just Dogs என்கிற நிறுவனம் 7 மில்லியன் டாலரையும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இவை தவிர Sploot Products, Zoivane, Snouters போன்ற பல நிறுவனங்கள் இத்துறையில் காலடி பதிக்க ஆரம்பித்திருக்கின்றன.
செல்லப் பிராணிகளுக்குக் காப்பீடு எடுப்பது என்பது ஆரம்பகட்டத்தில் இருந்தாலும் இது குறித்த விழிப்புணர்வும், விருப்பமும் அதிகரித்து வருகிறது. இதில் செல்லப் பிராணிகளுக்கு ஏற்படும் உடல்நலமின்மை, காயம், விபத்தில் மரணித்தல், அறுவை சிகிச்சை, மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவது, செல்லப் பிராணிகளால் பாதிப்புக்கு உள்ளாகும் மூன்றாம் தரப்பினருக்கான நஷ்ட ஈடு என அனைத்தும் அடங்கும். செல்லப் பிராணிகளுக்கானக் காப்பீட்டு பிரிமீயம் அதனுடைய வயது, அளவு, எந்த இனத்தைச் சேர்ந்தது, அதனுடைய உடல் ஆரோக்கியம், எவ்வளவு தொகைக்குக் காப்பீடு தேவை ஆகியவற்றைப் பொறுத்ததாகும். தற்சமயம் ஓரியண்டல் இன்சூரன்ஸ், பஜாஜ் அலியான்ஸ், நியூ இண்டியா அஷ்யூரன்ஸ், ஃப்யூச்சர் ஜெனராலே ஆகியவை செல்லப் பிராணிகளில் பிரதானமாக நாய்களுக்கான காப்பீட்டுச் சேவையை வழங்கி வருகின்றன.
இத்துறைக்கான முதலீடு அதிகரித்து வருவதால் இதற்கென தெளிவான நெறிமுறைகளையும், தரநிலைகளையும் வடிவமைப்பது அவசியமென இத்துறையில் இயங்கி வரும் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். இதோடு செல்லப் பிராணிகளுக்கான உணவு தயாரிக்கும் நிறுவனங்களையும் `உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத் தொகை (Production Linked Incentive – PLI)’ திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்கிற கோரிக்கையையும் முன் வைத்திருக்கின்றனர். இத்துறை சார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்ய முதலீட்டாளர்களும் ஆர்வம் காட்டி வருவது நல்லதொரு சமிக்ஞை ஆகும்.
செல்லப் பிராணிகள் குறித்த சில சுவராசியமான புள்ளிவிவரக் கணிப்புகள் (2024 ஆம் ஆண்டு மார்ச் வரை):
- 2024 ஆம் ஆண்டில் செல்லப் பிராணிகளின் எண்ணிக்கை 42 மில்லியனைத் தொடும்
- இதில் நாய்களின் எண்ணிக்கை சுமார் 36.5 மில்லியனாகவும் பூனைகளின் எண்ணிக்கை 5.5 மில்லியனாகவும் இருக்கும்
- செல்லப் பிராணிகள் தொடர்பான பொருள்களின் சந்தைப் பங்கு மொத்த விற்பனையில் 20 சதவீதம். அதாவது 0.75 பில்லியன் டாலர், இதன் கூட்டு வளர்ச்சி அடுத்த 10 ஆண்டுகளில் 23.7 சதவீதமாக இருக்கும் என கணக்கிடப்பட்டிருக்கிறது.
செல்லப் பிராணிகள் ஆரோக்கியம் சார்ந்த சேவையின் மதிப்பு சுமார் 1.25 பில்லியன் டாலர். இதன் கூட்டு வளர்ச்சி சுமார் 8.6 சதவீதமாக இருக்கும் எனத் தெரிகிறது.