நீங்க ஒரு ஸ்டார்ட்அப் கம்பெனி ஆரம்பிக்க போறீங்களா?… அப்படின்னா பல ஸ்டார்ட் அப் சம்பந்தப்பட்ட வார்த்தைகள் உங்களுக்கு புதுமையாக தோன்றும். அதை தெரிந்து கொள்வது, புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். அவற்றை உங்களுக்கு தொகுத்து வழங்குகிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த பிரபாகரன். இவர் ஒரு மிகச்சிறந்த மொழி வல்லுநர், கைதேர்ந்த ஓவியர். இந்தத் தொடர் ஸ்டார்ட் அப் ஆரம்பிக்கப் போகும் ஒவ்வொருவருக்கும் பொக்கிஷமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. வாருங்கள் இந்த தொடர் கட்டுரைக்குள் செல்வோம்.
அக்ஸிலரேட்டர் (Accelerator)
அக்ஸிலரேட்டர் என்பவர் நீங்கள் ஒரு ஸ்டார்ட் அப்-பை தொடங்கும்போது உங்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருந்து, நிதி திரட்ட சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொடுத்து, உங்கள் திட்டங்கள் விரைவாக நகர உதவி புரிபவர். ஆனால் இவர் உங்களுடன் குறுகிய காலம் மட்டுமே இருப்பார்.
இன்குபேட்டர் (Incubator)
அக்ஸிலரேட்டர் போல அல்லாமல் உங்களுடன் நீண்ட காலம் இருந்து உங்களுக்கு மெண்டர்ஷிப் மற்றும் நீங்கள் உங்களுடைய சோதனை முயற்சிகளை நடத்த இடவசதி ஆகியவைகளை தந்து உதவுபவர் ஆவார். உங்களுடைய புதிய வணிக முயற்சியில் பலவிதமான சவால்கள் வரும். அவற்றை எப்படி சமாளித்து வெற்றி பெறுவது என்பதை சொல்லித் தருபவர்.
யூனிகார்ன் (Unicorn)
ஒரு ஸ்டார்ட் அப் கம்பெனி எப்போது பில்லியன் டாலர் மதிப்பை பெறுகிறதோ அவை யூனிகார்ன் என்று அழைக்கப்படுகிறது. இந்திய ரூபாய் மதிப்பில் 7500 கோடி ரூபாய் மதிப்பை பெறும் கம்பெனி யூனிகார்ன் என அழைக்கப்படும்.
பூட் ஸ்டாரப்பிங் (Boot strapping)
உங்களுடைய பூட்ஸ்களில் ஸ்டாரப்பை நீங்களேதான் போட்டுக் கொள்வீர்கள். அது போல உங்களுடைய ஸ்டார்ட் அப் கம்பெனிக்கும் ஆரம்ப முதலீட்டை நீங்களே போட்டு ஆரம்பித்தால் அது பூட் ஸ்டாரப்பிங் எனப்படும். 90 சதவீத ஸ்டார்ட் அப் கம்பெனிகள் சுயநிதி (பூட் ஸ்டாராப்பிங்) கொண்டுதான் ஆரம்பிக்கப்படுகின்றன.
டிராகன் (Dragon)
ஒரு சில ஸ்டார்ட் அப் கம்பெனிகள் முதல் சுற்றிலேயே ஒரு பில்லியன் டாலர் அளவுக்கு நிதி திரட்டும் திறன் பெற்றிருக்கும். இவைகளை டிராகன் என்று அழைக்கிறோம். இதற்கு ஒரு உதாரணம் கூற வேண்டும் என்றால் “உபர்” கார் கம்பெனியை கூறலாம்.
ஐட்டிரேஷன் (Iteration)
ஐடியா என்றால் என்ன? அது உங்களுடைய யூகம். எல்லா நேரங்களிலும் தொழில்முனைவோர் சரியாக யூகிப்பார்கள் என்று கருத முடியாது. உங்களுடைய ப்ராடக்டிலோ அல்லது உங்களது பிஸினஸ் மாடலிலோ நீங்கள் முதலில் யூகித்ததை விட பின்னர் மாற்றங்களை கொண்டு வருவீர்கள் அது ஐட்டிரேஷன் எனப்படும். இதை திருத்தி அமைத்தல் எனவும் கூறலாம்.
பிவோட் (Pivot)
சில வேளைகளில் நமது திட்டம் சரி என்று நம்புகிறோம், பின்னர் அது தவறு என்று உணர்கிறோம். இப்போது நீங்கள் செய்யும் வணிக முறையில் பயனர் விபரங்கள் மற்றும் தயாரிப்பு சம்பந்தமாக கொண்டுவரும் மாற்றங்கள், செயலைத்தான் “பிவோட்” என்கிறோம். தொழில் முனைவோர் தாங்கள் சரி என்று கருதுகின்ற விளைவை எட்டுவதற்கு அதிக நேரத்தையும், பணத்தையும் செலவிட எப்போதும் தயாராக இருக்க வேண்டும். இதற்காகத்தான் நிறுவு, சோதித்தறி, பின் சரிசெய் என்ற கொள்கையை கடைபிடித்தல் நலம்.
வரும் இதழ்களிலும் ஸ்டார்ட் அப் பிசினஸில் பயன்படுத்தப்படும் மேலும் பல சொற்களுடன் சந்திப்போம்.
(தொடரும்)