நீங்க ஒரு ஸ்டார்ட்அப் கம்பெனி ஆரம்பிக்க போறீங்களா?… அப்படின்னா பல ஸ்டார்ட் அப் சம்பந்தப்பட்ட வார்த்தைகள் உங்களுக்கு புதுமையாக தோன்றும். அதை தெரிந்து கொள்வது, புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். அவற்றை உங்களுக்கு தொகுத்து வழங்குகிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த பிரபாகரன். இவர் ஒரு மிகச்சிறந்த மொழி வல்லுநர், கைதேர்ந்த ஓவியர். இந்தத் தொடர் ஸ்டார்ட் அப் ஆரம்பிக்கப் போகும் ஒவ்வொருவருக்கும் பொக்கிஷமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. வாருங்கள் இந்த தொடர் கட்டுரைக்குள் செல்வோம்.
ஒரு வணிக செயல்பாட்டில் சில முக்கிய அடிப்படை சொற்களைப் புரிந்து கொள்வதும் பயன்படுத்துவதும் ஒவ்வொரு தொழில் முனைவோருக்கும் அவசியமாகிறது. இச்சொற்கள் சம்பந்தப்பட்டவற்றை நீங்கள் ஏதாவது ஒரு தருணத்தில் கேள்விப்பட்டிருக்கலாம் அல்லது படித்திருக்கலாம்.
முதலில் பிசினஸ் சம்பந்தப்பட்டவைகளை பார்ப்போம்.
டெக்னிக்கல் ஸ்டார்ட் அப், நான்-டெக்னிக்கல் ஸ்டார்ட் அப் (Technical Startup, Non-Technical Startup)
ஸ்டார்ட் அப்-களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம் ஒன்று டெக்னிக்கல் ஸ்டார்ட் அப், இன்னொன்று நான்-டெக்னிக்கல் ஸ்டார்ட் அப். இந்தியா சாப்ட்வேர் துறையில் மிகப் பிரமாதமாக உலகளவில் முன்னேறி வருவதால், இந்தியாவில் டெக்னிக்கல் ஸ்டார்ட் அப்கள் வருவது ஒரு ஆச்சரியமான விஷயம் அல்ல. நான்-டெக்னிக்கல் என்றால் விவசாயம் சார்ந்த ஸ்டார்ட் அப்-கள், சமூகம் சார்ந்த ஸ்டார்ட் அப்-கள் போன்றவைகளை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
வணிக விரும்பி (வாண்டர்ப்ருணர் – Wanterpreneur)
எண்டர்புருனர் (Entrepreneur) கேள்விப்பட்டு இருக்கோம், இது என்ன வாண்டர்ப்ரணர் (Wanterpreneur) அப்படின்னு உங்களுக்கு ஒரு சந்தேகம் வரும். இவரை தமிழில் வணிக விரும்பி என்றும் அழைக்கலாம். இவர் தொழில்நுட்பம் சார்ந்த அல்லது சாராத பின்புலத்தில் இருந்து வந்திருப்பவர். இவர் ஸ்டார்ட் அப் தொடங்குவதற்காக நல்ல பல திட்டங்களை வைத்திருப்பவர். ஆனால் ஒன்றும் தொடங்க மாட்டார். நிறைய வணிக விரும்பிகள் கடைசிவரை வணிக விரும்பியாக மட்டுமே இருந்துவிடுவார்கள். ஆகவே நீங்கள் வெறும் வணிக விரும்பியாக மட்டும் இருந்து விடாதீர்கள். நீங்கள் உங்கள் புதுமையான எண்ணங்களை வணிக வடிவமாக மாற்றுவதற்காகத்தானே இந்த பத்திரிக்கை பல முயற்சிகள் செய்து வருகிறது.
எண்ணங்களை உறுதிப்படுத்துதல் (Idea Validation)
ஸ்டார்ட் அப் கம்பெனியில் உங்களுடைய புதுமையான எண்ணங்களை உறுதிப்படுத்துவது மிகவும் முக்கியம். இதைத்தான் ஆங்கிலத்தில் வேலிடேஷன் (validation) என்று கூறுகிறார்கள். உறுதிப்படுத்துவதற்கு பல வழிகள், முறைகள் இருக்கிறது. இதன் மூலம் நீங்கள் தெரிந்துகொள்ள போவது என்னவென்றால் உங்களுடைய ப்ராடக்ட் களுக்கு டிமாண்ட் இருக்கிறதா என்பதைத்தான். உங்களுடைய ப்ராடக்ட்களை பொதுமக்கள் விலைகொடுத்து வாங்கும் போதும், அவற்றை உபயோகப்படுத்திய பின், அதை வாங்கும்படி மற்றவர்களுக்கு பரிந்துரை செய்யும்போதும் உங்களுடைய ப்ராட்க்ட்கள் சரியாக வேலிடேட் செய்யப்படுகின்றன என்பதை கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.
ஸ்கேலபிலிட்டி (Scalability)
ஒவ்வொரு ஸ்டார்ட் அப்-க்கும் இருக்கும் கனவு என்னவென்றால் தங்களுடைய பிசினஸை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வதுதான். இதைத்தான் ஸ்கேலபிலிட்டி என்று கூறுகிறார்கள். அதாவது நல்ல முறையில் வேலிடேட் செய்யப்பட்ட உங்களுடைய பிசினஸை ஆயிரம் நபர்களிடமிருந்து பத்தாயிரம் நபர்களுக்கும், பத்தாயிரம் நபர்களிடமிருந்து ஒரு லட்சம் நபர்களுக்கும், ஒரு லட்சம் நபர்களிலிருந்து 10 லட்சம் நபர்களுக்கும் அதிக சிரமம் இல்லாமல் எடுத்துச் செல்வதுதான் ஸ்கேலபிலிட்டி எனப்படும்.
வரும் இதழ்களிலும் ஸ்டார்ட் அப் பிசினஸில் பயன்படுத்தப்படும் மேலும் பல சொற்களுடன் உங்களை சந்திப்போம். (தொடரும்)