சமீப நாட்களில் மறு உபயோகம் (Reuse) என்ற சொல்லை அடிக்கடி கேட்கும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்திருக்கும். இது முகக் கவசமாகட்டும் ஆடைகளாகட்டும் நாம்அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் சாதனங்களுக்கு மிகவும் பொருத்தமானது. பொருட்களின் விநியோக முறையில் தட்டுப்பாடு வரும்போது, அல்லது அளவுக்கு அதிகமாக பயன்படுத்திவிட்டு, குப்பையில் வீசும் நேரம் வரும்போது, Reuse (மறுஉபயோகம்) என்ற சொல்லின் முக்கியத்துவத்தை அடிக்கடி உணர முடிகின்றது. எந்த தொழிலிலும் உற்பத்தித்திறனை அதிகரித்து அதிகமான பொருட்களை கொண்டு வருவதில் எந்த விதமான ஐயமுமில்லை. உபயோகப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் சூழ்நிலையில் இது எல்லா காலகட்டத்திற்கும் பொருந்தும். அதேசமயத்தில் பயன்படுத்திய பிறகு அதை கழிவாகக் (Waste) கருதும் பொழுது அந்தக் கழிவை வெளியேற்றுவது இப்போது மிகப்பெரும் சவாலாக உள்ளது.
முந்தைய காலகட்டத்தில் கலைநயத்தின் வெளிப்பாடாக வீட்டிலிருக்கும் மங்கையர்களின் கைவண்ணத்தில் உருவான அழகுமிகு கைப்பைகள் மாணவர்களின் புத்தகப் பைகளாகவும் வீட்டிற்குரிய பொருட்கள் வாங்குவதற்கும் மிகவும் உபயோகமாக இருந்தது. காலச்சுழற்சியில் தொழில் நுட்பங்களின் அசுர வளர்ச்சியில் உருவான பல்வேறு பொருட்களும் சாதனங்களும் உபயோகிப்பாளர்களை அளவிற்கு அதிகமாக சென்றடைந்தது. இதில் முக்கியமாக ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளும், கைபேசிகளும் (mobile phones) அனைவரது அன்றாட வாழ்க்கையோடு ஒன்றிணைந்தது. குறிப்பிட்ட கால உபயோகத்திற்குப் பிறகு அதனை கழிவாக எந்த வழியில் வெளியேற்றுவது என்பது உலக நாடுகள் அனைத்திற்கும் மிகப் பெரிய சவாலாக இருக்கின்றது. உபயோகப்படுத்தி எறிதல் (Use and Throw) என்பது இனிவரும் காலகட்டத்தில் அதிக கவனமுடன் செயல்படுத்த வேண்டிய நிகழ்வு. நமக்குத் தோன்றுகின்றபடி பொருட்களை கண்ட இடங்களில் குப்பைகளாக போட்டுவிட்டுப் போவது, இயற்கையை பலவிதங்களில் மாசுபடச் செய்கின்றது. குப்பைகளை அடிப்படையாக வைத்து சுழற்சித்தொழில் (Recycling Business) செய்வதா அல்லது நீண்ட காலம் பயன்படுத்தும் வகையில் பொருட்களை வடிவமைத்து உற்பத்தி செய்வதா என்பது இந்த உலகத்தின் முன் வைக்கப்படும் மிகப்பெரிய கேள்வி. உலகளவில் சேரும் கழிவுகளின் புள்ளி விவரங்கள் அடிப்படையில் பார்த்தால் வடிவமைப்புத் திறன்கள் மூலம் நீண்ட நாள் பயன்படுத்தக்கூடிய பொருட்களின் உற்பத்தி தேவைகள் அதிகரிக்கும். இதைத்தான் சுழற்சி முறைசார்ந்த பொருளாதாரத்தின் ( Circular Economy) சாராம்சம் எனலாம்.
வடிவமைப்புத் திறன்கள் பல்வேறு தொழில்களின் அடிப்படையாக இருந்து புதுவிதமான பொருட்களுக்கும் சுற்றுப்புற சூழ்நிலையை பாதுகாக்கும் தொழில்களுக்கும் அதிக தேவைகள் ஏற்படும். இயற்கை அன்னையின் ஐந்து அவதாரங்களாகக் கருதப்படும் நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் அனைத்தின் பாதுகாப்பை உள்ளடக்கிய தொழில்கள் என்றும் நிரந்தரமாக இருக்கும். பருவகாலங்களின் அடிப்படைகள் இதற்கு பிரதானமாக அமைகின்றது. பஞ்சபூதங்களை உள்ளடக்கிய இயற்கை அன்னையை வழிபடுவது எவ்வளவு முக்கியமோ அந்த அளவு இதன் சாராம்சம் பொருந்திய தொழில்கள் அதிகரிக்க வேண்டியது மிகவும் அவசியம். இதை ஒரு வடிவ வரைபடம் மூலம் இங்கு காணலாம். உற்பத்தி செய்தலில் ஆரம்பித்து உபயோகப்படுத்தல், மறுபயன்பாடு இருக்குமாறு பழுது பார்த்தல், மறுஆக்கம் மற்றும் மறு சுழற்சி செய்யும் அனைத்து துறைகளிலும் அள்ள அள்ள தொழில் வாய்ப்புகள். இதற்கு அடிப்படையே தொழில்முனைவோர்களின் கற்பனை வளமும் வடிவமைப்புத்திறனும்தான்.
ஒரு காலகட்டத்தில் தொழிற்கூடங்கள் எந்த வடிவத்தை அறிமுகப்படுத்துகிறார்களோ அந்த வடிவத்தை பயன்படுத்த வேண்டிய ஒரு கட்டாய சூழ்நிலைக்கு உபயோகிப்பாளர்கள் தள்ளப்பட்டனர். காலசுழற்சியில் தொழில்போட்டி காரணமாக, வடிவமைப்பில் மாற்றம் செய்து பல்வேறு பொருட்களை சந்தையில் அறிமுகம்செய்தார்கள். ஆனால் இந்த முறையில் அடிக்கடி மாற்றம் செய்யப்பட்டதா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். உபயோகிப்பாளர்களின் தேவைகளைப் புரிந்து கொண்டு திட்டங்களை வரையறுத்து பொருட்களை வடிவமைக்கும் திறன்தான் வருங்காலத்தில் தொழில்முறைகளின் மிக முக்கியமான அளவுகோலாக இருக்கும். நாகரிக உலகில் உபயோகப்படுத்தப்படும் ஆடைகள், மீள்சுழற்சி சார்ந்த விவசாய உற்பத்தி பொருட்கள், மரசாதனங்கள், அழகுசாதனங்கள், கைவினைப் பொருட்கள், எரிபொருட்கள், இயற்கை உணவுகள், உலர்த்தப்பட்ட காய்கறிகள், மாவுப்பொருட்கள் மற்றும் எண்ணிலடாங்கத பலவகைகள் இதில் அடக்கம்.
பொருட்கள் உற்பத்தி மட்டுமல்லாமல் பலசாதனங்களை பழுதடையும் நிலையில் சரிசெய்து மறுஉபயோகப்படுத்துதல் சாத்தியமாகின்றது. இதற்கு நமது கிராமங்களின் ரம்மியத்தில் வாகனமாக இருந்த மிதிவண்டி வாடகை நிலையங்களையும் பழுது பார்க்கும் சிறுதொழில் வல்லுனர்களையும் மிகவும் பொருத்தமான உதாரணமாகக் குறிப்பிட விரும்புகின்றேன்.
புதிய வடிவ சிந்தனை ஆற்றல்கள் செரிந்த மறுஆக்கமும் வளர்ச்சி பெற ஏதுவான சூழ்நிலைகள் அதிகரிக்கும். மறுசுழற்சி முறையில் கழிவுகளையும் தொழிலுக்கான மூலப்பொருட்களாக மாற்றம் செய்ய தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கின்றது. பல நாடுகளில் குப்பைகூளங்கள் அதிகமாகும் சூழ்நிலையில் கழிவுத்திடங்களை நோக்கி செல்லும் பட்சத்தில் சுவீடன் நாடு ஆண்டொன்றிற்கு 2.5 மில்லியன் டன் குப்பைகளை இறக்குமதி செய்து எரிவாயு (Biogas) உற்பத்தியை அதிகரிக்கின்றது. கழிவும் ஒரு மூலப்பொருள்தான் என்ற நிலை இருக்கும் சமயத்தில் மறுசுழற்சி சார்ந்த தொழில்களுக்கான வாய்ப்புகள் மிக அதிகம்.
எல்லன் மெக்ஆர்த்தர் பவுண்டேசன் 2016 ஆம் ஆண்டில் வெளியிட்ட ஆராய்ச்சி தொகுப்பின் அடிப்படையில் நமதுநாட்டில் மிக அதிக அளவில் மறுசுழற்சி முறை சார்ந்த பொருளாதாரம் வளர்ச்சி அடைய நிறைய வாய்ப்புகள் இருப்பதைக் காண முடிகின்றது. 2030ஆம் வருடத்தில் இந்திய ரூபாய் மதிப்பில் 16,39,300 கோடிகளும் 2050 ஆண்டு வாக்கில் இத்தொகை மூன்று மடங்காக அதிகரிக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
இவ்வளவு வாய்ப்புகள் நிறைந்த மறுசுழற்சி தொழில்களுக்கு தொழில்முனைவோர்களின் கற்பனை வளமும் வடிவமைப்புத் திறனும்தான் அடிப்படை மூலதனம்.