நம்மில் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறமை கட்டாயமாக இருக்கும். ஒரே இடத்தில் நிரந்தரமாக வேலை செய்வதால் பலருக்கு அவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்த இயலாமல் போய்விடுகிறது.
ஆனால், உலகளவில் வேலைக்கு ஆட்கள் எடுக்கும் விதங்களில் மாறுதல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இந்த ஸ்டார்ட் அப் காலத்தில் பல கம்பெனிகள் ஒரு குறிப்பிட்ட கால தேவைகளுக்கு ஆட்களை எடுக்கும்போது அவர்களை நிரந்தர பணியாளர்களாக எடுக்க விரும்புவதில்லை. பகுதி நேர பணியாளர்களாக (ப்ரீ-லான்சர்) எடுக்கவே விரும்புகிறார்கள். அதற்கு சிறிது சம்பளம் அதிகமாக கொடுத்தாலும் திறமையான பகுதி நேர பணியாளர் கிடைப்பதால் அவர்கள் அந்த குறிப்பிட்ட வேலையை அந்த குறிப்பிட்ட காலத்தில் முடித்துவிட்டு அடுத்த வேலைக்கு சென்று விடுவார்கள். இதனால் பகுதி நேர பணியாளர்களுக்கும் லாபம், அவர்களை வேலைக்கு வைத்துக்கொள்ளும் கம்பெனிக்கும் லாபம். கம்பெனிக்கு என்ன லாபம் என்று கேட்டால், அவர்களைத் தொடர்ந்து வேலைக்கு வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை, வேலை முடிந்தவுடன் அவர்களை அனுப்பிவிட முடியும். இதனால் அந்த கம்பெனிக்கு கணிசமான செலவு குறையும்.
எந்தெந்த துறைகளில்?
இந்தப் பகுதி நேர பணியாளர்கள் அதாவது ப்ரீ-லான்சர் இப்போது எல்லா துறைகளிலும் இருப்பது ஒரு மகிழ்ச்சிகரமான விஷயமாகும். இன்றைய அளவில் கார்ப்பரேட் துறையில் 20 சதவீத வேலை வாய்ப்புகளில் பகுதி நேர பணியாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் 50 சதவீத பணியாளர்கள் பகுதி நேர பணியாளர்களாக நியமிக்கபடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எந்தெந்த தொழில்களில் ப்ரீ-லான்ஸிங் அதிகமாக நடைபெறுகிறது என்று பார்த்தால் டெக்னாலஜி, அட்மினிஸ்ட்ரேஷன் சப்போர்ட், காப்பி ரைட்டிங் அண்ட் ட்ரான்ஸ்லேஷன், டிசைன் மற்றும் மல்டிமீடியா, மொபைல் டெக்னாலஜி, சேல்ஸ் அண்ட் மார்க்கெட்டிங், பைனான்ஸ் அண்ட் லீகல் ஆகிய துறைகளாகும்.
இதுபோன்ற பணியாளர்களை வேலைக்கு எடுக்கும்போது, வேலையில் சேர்வதற்கு மூன்று மாதங்கள் ஆகும் நாலு மாதங்கள் ஆகும் என்ற பிரச்னையும் இல்லை
இருவரும் ஒத்துக்கொண்ட பட்சத்தில் அந்த பணியாளர் ஒரு வாரத்திலோ ஒரு நாளிலோ வேலைக்கு சேரும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. இது கம்பெனிகளுக்கும் மிகவும் சவுகரியமாக இருக்கிறது.
இதுபோன்ற ப்ரீ-லான்ஸிங் பணியாளர்கள் எந்த ஊருக்கும் சென்று வேலை பார்க்க தயங்குவதில்லை, அது உள்நாடாக அல்லது வெளிநாடாக இருந்தாலும் சரி.
சில நேரங்களில் ஒரு கம்பெனியில் வேலை பார்க்கும் திறமையான ஊழியர் தன் விடுமுறை நாட்களில் வேறொரு கம்பெனிக்கு ப்ரீ-லான்ஸிங் செய்வதும் இப்போது அதிகரித்து வருகிறது. இதனால் அவருடைய வருமானம் கூடும் வாய்ப்புகள் அதிகம்.
இதுபோன்ற பகுதிநேர பணியாளர்களை பணி அமர்த்தும்போது அவர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளத்தை தவிர வேறு அதிக செலவுகள் அந்த கம்பெனிக்கு ஏற்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உலக பிரீ-லான்சிங் மார்க்கெட்
உலக அளவில் ப்ரீ-லான்ஸ் மார்க்கெட்டின் மதிப்பு என்னவென்று பார்த்தால் ஒரு டிரில்லியன் டாலர் அளவிற்கு இருக்கிறது. இது அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதத்திற்கு இணையானது ஆகும். இந்திய ரூபாய் மதிப்பில் பார்க்கும்போது 7,65,00,00,00,00,000 ரூபாய்.
உலக அளவில் ப்ரீ-லான்ஸிங் அதிகமாக இருக்கும் நாடு அமெரிக்கா. அங்கு 78% ப்ரீ-லான்ஸர்களாக இருக்கிறார்கள். இந்தியாவில் கிட்டத்தட்ட 29% ப்ரீ-லான்சர்களாக இருக்கிறார்கள்.
ப்ரீ-லான்சராக இருப்பவர்களில் 60 சதவிகிதம் தாங்கள் விரும்பி அந்த தொழிலை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். 40% கட்டாயத்தின் காரணமாக அந்த தொழிலை தேர்ந்தெடுத்துள்ளனர்.
ப்ரீ-லான்சர்களை வேலைக்கு எடுத்து தருவதற்காகவே பல ஸ்டார்ட் அப் கம்பெனிகள் இந்தியாவில் இப்போது இருக்கின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்க கம்பெனிகள் Flexing It, UpWork, Fiverr, People Per Hour, Tap Chief ஆகும். இந்த கம்பெனிகளில் உங்களை பதிவு செய்து வைத்து கொண்டால் உங்கள் திறமைக்கும் வாய்ப்புகள் கதவை தட்டும் என்பதின் சந்தேகம் இல்லை.