2007 ஆம் ஆண்டு புத்தகங்களை மட்டுமே ஆன்லைனில் விற்க தீர்மானித்து பன்சால் வசித்த வீட்டில் ரூ 4 லட்சம் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட மின்வணிக நிறுவனம் (e-commerce) ஃப்ளிப்கார்ட் நிறுவனம்.
அதில் பங்குதாரர்களாக/கூட்டாளிகளாக சேருவதற்கு பல நண்பர்களைக் கேட்டுப் பார்த்தார்கள். ஆனால் அவர்களுக்கு இவர்களது முயற்சியிலும், ஆன்லைன் வணிகத்திலும் நம்பிக்கையில்லை. ஆனால் அவர்கள் முயற்சி வீண்போகவில்லை. நிறுவனம் ஆரம்பித்த பதினெட்டு மாதங்களுக்குப் பிறகு ஒரு வழியாக Accel India மூலம் 1 மில்லியன் டாலர் முதலீடாகக் கிடைத்தது.
உலக அளவில் சில்லரை வணிகத்தில் ஜாம்பவனான வால்மார்ட் நிறுவனம் 2018 ஆம் ஆண்டு ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் பங்கில் 77 சதவிகிதத்துக்கு கொடுத்த விலை சுமார் 17 பில்லியன் டாலர். அப்போது ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் மதிப்பீடு சுமார் 21 பில்லியன் டாலர்.
பன்சால் டெல்லி ஐஐடி யில் கணினி அறிவியல் படித்து விட்டு 2004 ஆம் ஆண்டு அமேசான் நிறுவனத்தில் சேர்ந்து 2007 ஆம் ஆண்டு அந் நிறுவனத்திலிருந்து வெளிவந்து அதே போன்று ஆரம்பித்த ஃப்ளிப்கார்ட்டை இந்திய அமேசான் என்று அழைத்தால் அது மிகையில்லை! அந்த அளவுக்கு பன்சால் என்கிற சுயம்புகள் ஃப்ளிப்கார்ட்டை பதினோரு ஆண்டுகளில் விஸ்வரூபம் எடுக்க வைத்தது இந்திய தொழில்முனைவுத் துறையில் யாரும் எதிர்பார்க்காத ஒன்று!
வால்மார்ட் ஃப்ளிப்கார்ட்டின் பங்குகளை வாங்கி உள்ளே நுழைந்தவுடன் சச்சினும், பின்னியும் `எங்களது வழி தனிவழி’ என சொல்லி பிரிந்து விட்டனர். ஆனால் அவர்கள் இருவரும் இணைந்து இப்படி ஒரு நிறுவனத்தை கட்டமைத்தது எப்படி சாத்தியமானது?
2008 ஆம் ஆண்டு அவர்களுக்கு நாளொன்றுக்கு கிடைத்த ஆர்டர் 100 மட்டுமே! ஆனால் 2014 ஆம் ஆண்டு அந்நிறுவனத்தின் பிரபலமான `பிக் பில்லியன்ஸ் டே’ அறிவித்த பத்து மணி நேரத்தில் விற்பனையான பொருட்களின் மதிப்பு சுமார் 100 மில்லியன் டாலர்.
2009 ஆம் ஆண்டு ஆக்சல் இண்டியா முதலீடு செய்ய ஆரம்பித்தவுடன் ஃப்ளிப்கார்ட் அதனுடைய ஆன்லைன் சந்தைத் தளத்தில் பல பொருட்களைச் சேர்க்கத் தொடங்கின. பொருட்களை டெலிவரி செய்வது மேம்பட்டது. இந்தியாவின் தொழில்நுட்பத்துறையின் வளர்ச்சிகேற்ப ஆன்லைன் வர்த்தகமும் நுகர்வோர்களிடையே பிரபலமானது. வீட்டிலிருந்தபடியே வேண்டிய பொருட்களை வாங்குவதற்கான வசதியில் `ருசி’ கண்ட நுகர்வோர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகமானது.
இது வரையிலும் லாபம் ஈட்டவில்லையென்றாலும் நுகர்வோர்களைக் கவர்வதிலும், விற்பனையாளர்களைக் கவர்வதிலும் ஆரம்பம் முதல் இந்நிறுவனம் கவனம் செலுத்தி வந்தது. அதோடு 2010 ஆம் ஆண்டிலிருந்து பல நிறுவனங்களை – WeRead, Mime360.Com, Flyte, Myntra, Letsbuy – வாங்க ஆரம்பித்து தனது செயல்பாட்டை விரிவாக்கியும் மேம்படுத்தியும் கொண்டது.
2014 ஆம் ஆண்டு மோட்டரோலாவின் மோட்டோ-ஜி ஸ்மார்ட் போனை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு அந்நிறுவனம் ஃப்ளிப்கார்ட்டை பிரத்யேக விநியோகஸ்தராக நியமித்தது. அதற்குப் பின் பல ஸ்மார்ட் போன்களின் அறிமுகம் இந்நிறுவனம் மூலமே நடந்தது. சில வேளைகளில் நுகர்வோர்களின் அதிக வருகையால் இணையத்தளம் செயல் இழக்க நேரிட்டது, சில சமயங்களில் அறிவிப்பு வெளியான ஒரு சில மணி நேரத்தில் போன்கள் விற்றுத் தீர்ந்தன. இதே ஆண்டு ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ஐந்து வினாடிகளில் Xiaomi Mi3 10,000 போன்கள் விற்றது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இரு பன்சால்களில் சச்சின் பன்சால் தைரியமான முடிவுகளை எடுக்க்க்கூடியவர். பின்னி பன்சால் அம்முடிவுகளை மிகவும் சிந்தித்து, அற்புதமாக நிறைவேற்றக்கூடியவர். இதன் விளைவு, நிறுவனம் ஆரம்பித்து ஏழாவது ஆண்டை கொண்டாடும் விதத்தில் 2014 ஆம் ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதி `பிக் பில்லியன் டே’ அறிவிக்கப்பட்டது. (6.10 என்கிற இந்த நாளுக்கும் ஃப்ளிப்கார்ட்டுக்கும் உள்ள தொடர்பு என்னவெனில் ஃப்ளாட் எண் 610ல் தான் முதன் முதலாக ஃப்ளிப்கார்ட்டுக்கான பிள்ளையார்சுழி போடப்பட்டது). TBBD (The Big Billion Day) என அழைக்கப்படும் விழாக்கால சலுகை விற்பனை நுகர்வோர்களிடையே மிகவும் வரவேற்பைப் பெற்றது.
2019 ஆம் ஆண்டு `பிக் பில்லியன் டே’ யின் போது இந்த இணையத்தளம் மூலம் பொருள் வாங்கியவர்களில் 50 சதவிகிதமானோர் புதிய நுகர்வோர்கள் என்பதோடு இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம் இவர்கள் அனைவரும் சிறு நகரங்களைச் சேர்ந்தவர்கள். செப்டெம்பர் 29 முதல் அக்டோபர் 4 வரை நடைபெற்ற இந்த விழாக்கால சலுகை நேரத்தில் இந்த இணையத்தளத்துக்கு வருகை புரிந்து பார்த்தவர்களின் (Views) எண்ணிக்கை சுமார் 70 பில்லியன். அது போல மொபைல் போன்களில் 20 மாடல்கள் ஒவ்வொன்றும் ஒரு லட்சத்துக்கும் மேல் விற்பனையானது.
வால்மார்ட் நிர்வாகத்தின் கீழ் வந்திருக்கும் இந்நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 30,000 (2016 ஆம் ஆண்டு) இது தவிர பொருட்களை விநியோகிக்கும் `டெலிவரி பாய்ஸ்’களின் எண்ணிக்கை பல்லாயிரம் ஆகும். 2019 ஆம் ஆண்டு இதன் வருமானம் ரூ 43,615 கோடி (அதாவது இதன் மூலம் விற்ற பொருட்களின் மதிப்பு) ஆனால் இதனுடைய நஷ்டம் ரூ 17,231 கோடி ரூபாய். வருமானம் முந்தைய ஆண்டை விட 42 சதவிகிதம் அதிகரித்திருந்தாலும் நஷ்டம் ஏற்படக் காரணம் என்ன? விளம்பரச் செலவு, பணியாளர்களின் சம்பளம், முதலீட்டுக்கான வட்டி, தள்ளுபடி விற்பனை ஆகியவை சில காரணங்களாக இந்தத் துறையை அவதானித்து வரும் அனலிஸ்ட்கள் கூறுகிறார்கள்.
ரூ 4 லட்சத்தில் ஆரம்பித்த ஃப்ளிப்கார்ட் ரூ 43,615 கோடி ஈட்டும் நிறுவனமாக வளரக் காரணங்கள் என்ன? இதோ சச்சினும், பின்னியும் சொல்லக் கேட்போம்
- சிறந்த சேவை என்பது வாடிக்கையாளர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவது ஆகும்.
- நாங்கள் ஆரம்பிக்கும் போது எண்களை (வருமானம், லாபம்) முக்கியமாகக் கருதவில்லை. ஆனால் மின் வணிகத்தில் கண்டிப்பாக பெரிதாக ஒன்றை உருவாக்க முடியும் என நம்பினோம்.
- நல்ல விஷயத்துக்கும் சிறந்த விஷயத்துக்கும் உள்ள வேறுபாடு நீங்கள் எந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது.
- வெற்றி பெற வேண்டுமென்கிற உந்துதல் இருந்தால் வயது என்பது ஒரு பொருட்டல்ல.
- `இல்லை (NO)’ என்று சொல்வது மிகவும் கடினம் ஆனால் பெரும்பாலான சமயங்களில் உங்கள் வணிகத்தையும் வாடிக்கையாளர்களையும் `YES’ என சொல்ல வைப்பதற்கு அது உதவும்.
வால்மார்ட் உள்ளே நுழைந்தவுடன் ஃப்ளிப்கார்ட்டிலிருந்து வெளியேறிய சச்சின் பன்சால் 2018 ஆம் ஆண்டு BAC Acquistions Private Limited என்கிற நிறுவனத்தை ஆரம்பித்து தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட/ஆரம்பிக்கப்படுகிற நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறார். 2019 ஆம் ஆண்டு ஓலா, க்ரே ஆரஞ்ச், ஏதர் எனர்ஜி இன்ஷார்ட்ஸ், அன்அகாடமி போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறார்.
ஃப்ளிப்கார்ட் நமக்குச் சொல்லும் கதை, ”முயன்றால் முடியாதது இல்லை, நம்மாலும் உச்சம் தொட முடியும்” என்பதுதான்!