நல்லதொரு ‘ஸ்டார்ட் அப்’பும்!
பெண்கள் வீட்டிலிருந்தபடியே புடவை மற்றும் ஆடைகள் விற்பனை செய்வது என்பது புதிதல்ல. இப்போது வாட்ஸ் அப்பிலேயே வணிகம் செய்கிறார்கள். செட்டிநாட்டின் தலைநகர் காரைக்குடியில் கடந்த ஆண்டு துவக்கப்பட்ட ‘கற்பகம் பட்டு மாளிகை’ பெண்களால் நடத்தப்படும் ஒரு ‘ஸ்டார்ட் அப்’ தொழில்.
செட்டிநாட்டு வீடுகளுக்கும், சுவையான உணவுகளுக்கும், பலகாரங்களுக்கும் பெயர் பெற்ற காரைக்குடியை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பெண்கள் சேர்ந்து, நீண்ட நாள் கனவை நனவாக்கியுள்ளனர். இவர்கள் தொடங்கியுள்ள கடை இப்போது, ‘நாலு ஆச்சி (ஆச்சி என்பது பெண்களை மரியாதை நிமித்தம் அழைக்கும் சொல்) ஆரம்பிச்சிருக்கிற கடை’ என்று ஆட்டோ ஓட்டுநர்களிடம் அடையாளம் சொல்லும் அளவுக்கு பிரபலமாகி இருக்கிறது.
ராஜலெட்சுமி, சாந்தி கிருஷ்ணன், வள்ளிமீனா, மீனாள் ஆகியோர்தான் அந்த நால்வர் அணி. இவர்கள் தங்களின் பொறுப்பை பொறுப்பாகக் கவனித்துக்கொள்கின்றனர்.
நால்வரிடமும் பேசினோம்.
நால்வரில் மூத்தவரான ராஜலெட்சுமிதான் கடையைக் கவனித்துக்கொள்கிறார். ‘‘ஐம்பது வயதைக் கடந்த நாங்க வீட்டில் சும்மா இருக்காமல், ஏதாவது ஒரு பிசினஸ் செய்து நம்மை ‘எங்கேஜ்டு’ ஆக வச்சுக்கணும்னு நினைச்சோம். எங்களிடம் இடவசதி இருந்தது. அதனால் ஜவுளி பிசினஸ் பண்ணலாம்னு முடிவுசெய்தோம். எதிர்பார்த்ததை விட மக்களிடமிருந்து நல்ல ஆதரவு கிடைச்சிருக்கு. ஆரம்பத்தில் இருந்ததை விட சேல்ஸும் இப்போது அதிகமாகி இருக்கு. விற்பனை நானும், சாந்தியும் வேறு ஒரு பொண்ணும் பார்க்கிறோம். பட்டுப் புடவைகளுக்கு 10 சதவீதம் தள்ளுபடி கொடுக்கிறோம். புடவைகள் உற்பத்தியாகும் இடத்தில் வாங்குவதால், எங்க கலெக்ஷன்ஸ் எல்லாருக்கும் பிடிச்சிருக்கு. இப்போதுதான் தவழத் தொடங்கியிருக்கோம்.. கூடிய விரைவில் எழுந்து வெற்றிநடை போடுவோம்னு நம்பிக்கை இருக்கு!’’ என்று அழுத்தமாகக் கூறுகிறார்.
‘‘நாங்க துணிக்கடை தொடங்க எண்ணியபோது ஊக்கமும் பொருளாதார உதவியும் கொடுத்து தூணாக நின்றவர்கள் எங்களின் குடும்பத் தலைவர்கள்தான். அவங்களுக்குத்தான் முதலில் நன்றி சொல்லணும். பிசினஸ் தொடங்கியதும் ஏகப்பட்ட பிரச்னைகள்.. நால்வரும் சேர்ந்து சமாளித்தோம், தீர்வும் கண்டோம். மத்த கடைகளை விட கூடுதல் தள்ளுபடி தர்றதால், எங்களிடம் வாங்கிட்டுப் போற பெண்கள் மூலமாக மத்தவங்களுக்கு நல்லாப் பரவுது. கல்யாணம், மணி விழா மாதிரி விசேஷங்களுக்கும் ஸ்கூல் டீச்சர்ஸ் யூனிஃபார்ம் சேலைக்கும் இங்கே வந்து மொத்தமாக ஆர்டர் பண்றாங்க! துபாயிலிருந்து ஆர்டர் வந்திருக்கு.. அதுவே பெரிய சந்தோஷம்!’’ என்று மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்கிறார் சாந்தி கிருஷ்ணன்.
கோவையிலிருக்கும் மற்றொரு பங்குதாரர் மீனாளும் சென்னையில் வசிக்கும் வள்ளிமீனாவும், காஞ்சிபுரம், நெகமம், ஈரோடு, சூரத் போன்ற இடங்களுக்குச் சென்று புடவைகளைக் கொள்முதல் செய்து வருகின்றனர்.
‘‘எங்களிடம் அனைத்து வகையான புடவைகள் இருந்தாலும், பட்டுப்புடவைகளில்தான்அதிக கவனம் செலுத்துறோம். அசல் பட்டுச்சேலையைக் கொடுக்கணும் என்பதற்காக காஞ்சிபுரத்தில் நாலைந்து தறிகளை கான்ட்ராக்டுக்கு எடுத்து, நாங்களே தரமான பட்டு நூலை கொடுத்து, நாங்கள் சொல்லும் டிசைன்களில் நெய்யச் சொல்கிறோம். எனவே எங்களின் பட்டுச் சேலைகள் ‘எக்ஸ்க்ளூஸிவ்’ ஆக இருக்கும். குறைந்தபட்சம் 7000 ரூபாயிலிருந்து பட்டுப் புடவைகள் இங்கே இருக்கு. வாடிக்கையாளர்களுக்கு காஞ்சிபுரம் போய் வரும் செலவு மிச்சம் என்பதுடன், மற்றவர்களிடம் கிடைக்காத டிசைனிலும் கிடைக்கும் என்பது கூடுதல் சிறப்பு’’ என்று கூறுகிறார் மீனாள்.
புடவைகளைத் தேர்வு செய்வதில் நல்ல ரசனையும் திறமையும் கொண்டவர் வள்ளிமீனா.
‘‘நாங்கள் நால்வரும் குடும்பத்தில் நல்லா செட்டில் ஆகி, பிள்ளைங்க கல்யாணம் செய்து கொடுத்துட்டு, மத்திய வயதில் இருக்கிற எங்களை பிஸியாக வச்சுக்கிறதுக்காகத்தான் இந்த பிசினஸ். அதனால் லாபம் முக்கியமில்லை, வாடிக்கையாளர்களின் திருப்திதான் முக்கியம் என்கிற நோக்கத்தில் செயல்படுவதால் பிசினஸ் நல்லாவே போகுது. கைத்தறிச்சேலைகளுக்கும் பட்டு மாதிரியான ஜவுளிகளுக்கும் பிரபலமான ஊர் காரைக்குடி. ஆனால் மத்த கடைகளை விட விலை குறைவாகவும், தரமாகவும் நாங்க சேலைகளைக் கொடுக்கிறதால், சின்ன கடையாக இருந்தாலும் நாங்களும் மார்க்கெட்டில் நிக்க முடியுது. வெளிநாட்டு உறவினர்கள் மூலமா விசேஷங்களுக்கான பல்க் ஆர்டர்ஸ் வருகிறது… ‘ஸ்டார்ட் அப்’ பிசினஸ்க்கே உரிய சில தடங்கல்கள், தடைக் கற்கள் எல்லாம் வந்தது.நாலு பேரும் சேர்ந்து அதையெல்லாம் தாண்டி வந்திருக்கோம்… இப்போ பிசினஸ் உக்திகள் புரிஞ்சிடுச்சு.. இனியெல்லாம் லாபம்தான்’’ என்கிறார் வள்ளிமீனா நம்பிக்கையுடன்.
ரொக்கம் மட்டும் அல்ல, நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஒற்றுமையையும் முதலீடாகப் போட்டு தொடங்கிய தொழிலாச்சே… அப்புறம் என்ன… இனியெல்லாம் சுகமே!