அதிகம் பயணிக்காத சாலையில் பயணிக்க யாருக்கேனும் ஆசைவருமா? பெரும்பாலும் வருவதில்லை. ரிஸ்க் எடுக்க விரும்பாததால் `நமக்கேன் வம்பு’ என நினைத்து அனைவரும் செல்லும் பாதையிலேயே நாமும் பயணிக்கவிரும்புவோம். ஆனால் அதில் விதிவிலக்காக இருந்தவர் `ஓயோ ரூம்ஸ்” நிறுவனத்தின் நிறுவனரும், தலைமைச்செயல் அதிகாரியுமான ரித்தேஷ் அகர்வால்.
இவர் ஒடிஷா மாநிலத்தில் இருக்கும் ராயகடா மாவட்டத்தில் பிசாம் என்கிற இடத்தில் 1993 ஆம் ஆண்டு பிறந்தார். செயிண்ட் ஜான்ஸ் சீனியர் செகண்ட்ரி ஸ்கூலில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் சேர 2011ஆம் ஆண்டு டில்லிக்கு பயணம் செய்தார். கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, அதிகமானோர் பயணம் செய்யத் தயங்கிய பாதையில் தனது பயணத்தைத்தொடங்கினார்.
பதிமூன்று வயது சிறுவனாக இருக்கும்போதே சிம்கார்டு விற்பனை மூலம் வருமானம் ஈட்டிவந்த ரித்தேஷ், 2011-12ஆம் ஆண்டுகளில் `ஓராவெல் ஸ்டேஸ் (Oravel Stays)’ என்கிற பெயரில் குறைந்த கட்டணத்தில் இயங்கிவரும் விடுதிகளுக்கு முன்பதிவு செய்யக்கூடிய வசதிகொண்ட ஓர் இணையத்தளத்தை ஆரம்பித்தார். அவர் பயணம் செய்தபோது அவருடைய பட்ஜெட்டுக்கு ஏற்ற விடுதி, ஹோட்டல் தேடி அலைந்தபோது `ஓராவெல்’ லுக்கான பொறி தட்டியது.
2012ஆம் ஆண்டு Venture Nursery என்கிற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த Accelerator Programme-ல் இந்த யோசனை தேர்வு செய்யப்பட்டுஅதன்பின் 2013ஆம் ஆண்டு பீட்டர் தியேல் உதவித்தொகைக்குத் (Peter Theil Fellowship) தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு லட்சம் டாலர் வழங்கப்பட்டது. அதே ஆண்டில் மே மாதம் ஓராவெல் ஸ்டேஸ், `ஓயோரூம்ஸ்’ என்கிற பெயரில் தனது பயணத்தின் அடுத்த அடியை எடுத்துவைத்தது.
இந்த நிறுவனத்துக்கென்று சொந்தமான ஹோட்டல்கள் எதுவுமில்லை. ஏற்கனவே இயங்கி வரும் ஹோட்டல்களோடு ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டு தனது இணையத்தளத்தில் அதுகுறித்த விவரங்களை பட்டியலிட்டிருக்கும். நம்மில் யாராவது ஒரு ஊருக்குச் செல்ல வேண்டுமெனில் அந்த ஊரில் என்னென்ன ஹோட்டல்கள் இருக்கின்றன, வாடகை என்ன, அங்கிருக்கும் வசதிகள் என்ன என்பதை அறிந்துகொண்டு இணையம் மூலமே முன்பதிவு செய்துகொள்ள முடியும். இதனால் புதிய ஊருக்குச் செல்லும்போது தங்குவதற்கு ஹோட்டல் தேடி அலையவேண்டிய தொல்லை இல்லை. அனைவரின் பொருளாதார நிலைக்கும் ஏற்ற வகையில் பல வகையான ஹோட்டல் பற்றிய விபரங்கள் இந்த இணையத்தளத்தில் இருக்கின்றன.
தனது இருபதாவது வயதில் துணிச்சலுடன் யாரும் பயணிக்காத பாதையில் தனியே பயணிக்க ஆரம்பித்த ரித்தேஷ் இன்றைக்கு 1.1 பில்லியன் டாலருக்கு அதிபதி. அதோடு இந்தியாவிலேயே இளம்வயது `மில்லியனர்’ தொழில்முனைவோர் என்கிற சிறப்பும், விருதுகளும், பாராட்டுக்களும் பெற்றவர். தனது இருபத்தேழாவது வயதில் இருக்கும் இவர் கடந்து வந்த பாதை சுவராசியமானது.
`ஓயோ’ இன்றைக்கு உலக அளவில் முன்னணியில் இருக்கும் ஹோட்டல் செயின்களில் இதுவும் ஒன்று. இந்தியா, சீனா, அமெரிக்கா, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, மத்தியகிழக்கு நாடுகள், ஜப்பான் என இது தடம்பதிக்காத நாடுகளே இல்லை எனும் அளவிற்கு மிகவும் குறுகிய காலத்தில் ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது. 2019ஆம் ஆண்டின் இறுதியில் இந்நிறுவனத்தின் வருமானம் அதற்கு முந்தைய ஆண்டைவிட மும்மடங்கு அதிகரித்ததோடு உலகெங்கிலும் பத்து லட்சத்துக்கும் அதிகமான அறைகளைக் கொண்டதாக இயங்கி வருகிறது.
தனித்துவமான நான்கு `மந்திர’ங்களை ஓயோ பின்பற்றி வருகிறது.
முதலாவதாக, தொழில் நுட்பத்தை உபயோகிக்கக் கூடிய திறன், இதன் மூலம் எந்த இடத்தில், எந்த விலையில் அறைகளைக் கையகப்படுத்துவது என்பதைக் கணித்து அதற்கேற்ப செயல்படுவது.
இரண்டாவதாக, ஏற்கனவே இயங்கிவரும் ஓட்டலுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட உடனேயே குறைந்த காலத்திற்குள் அதைப் புதுப்பிப்பது.
மூன்றாவதாக, கையகப்படுத்திய ஓட்டல்களை திறனுடன் நடத்தி வாடிக்கையாளர்களின் பாராட்டைப்பெறுவது.
இறுதியாக, விநியோகமும் வருவாய் மேலாண்மையும்ஆகும்.
ஓயோவைப் பொறுத்தவரையில் இந்தியாவும் சீனாவும் முக்கியமான சந்தைகளென்றும். ஐரோப்பாவும் அமெரிக்காவும் மிகவேகமாக வளர்ந்துவரும் சந்தைகளென்றும் ரித்தேஷ் கூறுகிறார். சீனா மிக முக்கியமான சந்தை என அவர் கருதக் காரணம், `மத்திய தர வர்க்கத்தைச் சேர்ந்த சீனர்களுக்கு அதிக பண ம்செலவாகாத, ஆனால், சிறந்த வாழ்வியலின் (lifestyle) மீதும், நல்ல அனுபவத்தின் மீதும் ஓர் ஆசை உண்டு. அதை நிறைவேற்றும் வகையில் ஓயோ அங்கு செயல்பட்டுவருகிறது’ என்கிறார்.
2020 ஆம் ஆண்டு ஓயோ வாடிக்கையாளர்களுக்கு வித்தியாசமாக என்ன இருக்கும் என்கிற கேள்விக்கு ரித்தேஷ், `சிறந்தசேவை, சிறந்த லொகேஷன்கள், சிறந்தவிலை’ எனக் கூறுகிறார்.
ரித்தேஷின் தலைமைத்துவப் பண்புகள்என்ன? இதோ ரித்தேஷ் கூறுகிறார்..
`ஒரு புதிய நிறுவனம் ஆரம்பிக்கும்போது அதில் சேரும் முதல் பணியாளர்கள் அவருடன் வேலை பார்த்தவர்களாகவோ அல்லது கல்லூரி/பல்கலைக்கழக நண்பர்களாகவோ இருப்பார்கள். ஆனால் என் விஷயத்தில் அதற்கான வாய்ப்பில்லை. எனவே, நான் வெளியிலிருந்து உயர்தரமான தொழில் வல்லுநர்களை தேர்வு செய்யும்படி ஆயிற்று. நான் ஒரு சிறந் தொழில்நுட்ப வல்லுனரோ, நிதி மேலாண்மையில் சிறந்தவரோ, விற்பனையாளரோ இல்லை. ஆனால், `எதைச் செய்யவேண்டாம்’ என சொல்வதோடு, வேலையைத் திறம்படச் செய்வதற்கு ஏற்ற சரியான நபர்களைத் தேர்வு செய்வது என் வேலை., எனவே என்னை நான் `தலைமை தெளிவு அதிகாரி (Chief Clarity Officer)’ என்றே அழைத்துக் கொள்ளவிரும்புகிறேன்’ என்கிறார்.
ஓயோ உலகெங்கும் 46,000 சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. இந்தியாவை முதன்மைச் சந்தையாகக்கொண்டு 2019ஆம் ஆண்டு ஆரம்பித்தது. மொத்த வருமானத்தில் சுமார் 95 சதவிகிதம் இந்தச் சந்தையிலிருந்து வருவதோடு 2 லட்சம் ரூம்கள் இதனிடம் இருந்து வந்தது. 2020ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இதன் நிர்வாகத்தின் கீழ் சுமார் பத்து லட்சம் அறைகளை இயக்குவதற்கு எண்ணற்ற `asset partners’ உடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது.
2019ஆம் ஆண்டு இந்நிறுவனத்தின் மதிப்பு 10 பில்லியன் டாலர். .இதில் முதலீடு செய்திருக்கும் நிறுவனங்கள் ரித்தேஷ் அகர்வால், ஷாஃப்ட் பாங்க் உட்படசுமார் 23 நிறுவனங்கள். ஓயோ குழுமத்தின் கீழ் பல நிறுவனங்கள் இயங்கி வருவதோடு 26 பயிற்சி இன்ஸ்டிடியூட்களையும் இது நடத்திவருகிறது. இன்றைக்கு இக்குழுமத்தில் சுமார் 17,000 பேர் வேலை பார்த்துவருகிறார்கள்.
மூர்த்தி சிறிதாக இருந்தாலும் கீர்த்தி பெரிது என்பதுபோல ஆறு ஆண்டுகளில் அபமிரித வளர்ச்சியடைந்திருக்கிறதும் `ஆன் யுவர் ஓன் (On Your Own – OYO) என்பதின் சுருக்கமான `ஓயோ’ நிறுவனம்..