நிறுவனங்களுக்கும், பொருள்களுக்கும் பெயர் வைப்பது ஒரு கலை. ஜாக் மா (இவரது இயற்பெயர் `மா யுன்’) தன்னுடைய 17 நண்பர்களுடன் சேர்ந்து 1999 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நான்காம் தேதி ஆரம்பித்த நிறுவனத்துக்கு `அலிபாபா’ என நாமகரணம் செய்தார். இந்தப் பெயருக்கான பின்னணி என்ன? ”ஆயிரத்தொரு அரேபிய இரவு”களில் இடம்பெறும் ஒரு கதை ”அலிபாபாவும் நாற்பது திருடர்களும்” ஆகும். இவர் ஒரு நாள் சான்ஃப்ரான்சிஸ்கோ காஃபி ஷாப்பில் அமர்ந்திருக்கும்போது, தான் ஆரம்பிக்க இருக்கும் நிறுவனத்துக்கு `அலிபாபா’ என பெயர் வைத்தால் எப்படியிருக்கும் என யோசித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு அங்கு காஃபி கொண்டுவந்த பணியாளப் பெண்ணிடம் `அலிபாபா’ என்றால் என்னவென்று தெரியுமா எனக் கேட்க அவர், `ஓப்பன் சீசேம் (திறந்திடு சீசேம்)” என பதிலளித்தார். இதைக் கேட்ட ஜாக் மா-வுக்கு உற்சாகம் பிடிபடவில்லை.
அங்கிருந்து கிளம்பி சாலையில் நடந்து செல்லும் சிலரிடம் (அமெரிக்கர்கள் எனினும் வெவ்வேறு இன, கலாசாரத்தைச் சேர்ந்தவர்கள்) இந்தப் பெயரைச் சொல்லி, தெரியுமா எனக் கேட்க அவர்களும் தெரியும் என சொல்லியிருக்கிறார்கள். ஆக, அலிபாபா என்கிற பெயர் உலகளவில் நன்கு அறிமுகமான பெயர் என்பதையறிந்து அதையே தனது நிறுவனத்துக்குச் சூட்டினார்.
1964 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 10ஆம் தேதி சீனாவின் தென் கிழக்குப் பகுதியிலிருக்கும் ஹாங்சூ (Hangzhou)வில் பிறந்தவர் மா யுன். இவர் ஓர் இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். 1972 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சன் ஹாங்சூ-வுக்கு வந்து சென்றபின் அதிக சுற்றுலாப் பயணிகள் அங்கு வர ஆரம்பித்தனர். அவர்களுக்கு ஊர் சுற்றிக் காண்பிப்பததில் அலாதிப் பிரியம் கொண்டிருந்த மா, அவர்களிடம் உரையாடும் பொருட்டு ஓரளவுக்கு ஆங்கிலம் தெரிந்து வைத்திருந்தார். இவருடைய சீனப் பெயரை உச்சரிக்கத் தடுமாறிய (!) சுற்றுலாப் பயணி ஒருவர் இவரை `ஜாக்’ என அழைக்க அதுவே பின்னாளில் `ஜாக் மா’ ஆனது.
மிகவும் துடிப்புடன் இருந்த ஜாக் மா எப்படியாவது உயர் கல்வி படிக்க வேண்டுமென்கிற உறுதியுடன் இருந்தார். ஆனால் கல்லூரி நுழைவுத் தேர்வில் இரண்டு முறை தோல்வியடைந்தார். மூன்றாவது முறை ஹாங்சூ டீச்சர்ஸ் இன்ஸ்டிடியூட்டில் சேரும் அளவுக்கான மதிப்பெண்ணைப் பெற்று அதில் சேர்ந்து படித்து 1988 ஆம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்தார். ஆனால் வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்தது. இறுதியாக, பல்கலைக்கழகமொன்றில் ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியராகப் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. மாதம் 12 டாலர் சம்பளம். இவர் மாணவர்களிடம் பிரபலமானார். 1980களின் ஆரம்பத்தில் சீனா தனது கதவுகளை உலகநாடுகளுக்குத் திறக்க, ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு கிராக்கி அதிகமானது. எனவே, மா மொழியாக்கச் சேவையை ஆரம்பித்தார். இதனால் அவருக்கு பல நாடுகளைச் சேர்ந்தவர்களுடன் நட்பு ஏற்பட ஆரம்பித்தது.
இதன் காரணமாக ஜாக் 1995 ஆம் ஆண்டு சீனாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றின் க்ளையண்ட்களாக இருந்த அமெரிக்கர்களிடம் பணம் வசூலிக்கும் பொருட்டு முதல் அயல்நாட்டுப் பயணத்தை மேற்கொண்டார். அப்போதுதான் அவருக்கு தொழில்நுட்ப வளர்ச்சி குறித்தும் இணையம் என்கிற பரபரப்பான உலகம் குறித்தும் தெரிய ஆரம்பித்ததோடு அதற்கான எல்லை முடிவற்றது என்பதையும் அறிந்து கொண்டார்.
ஒரு முறை ஜாக் `beer’ என தட்டச்சு செய்து ஆன்லைன் தேடல் பொறியில் தேட ஆரம்பித்தார். சீன நாட்டைச் சேர்ந்த பீர் தயாரிக்கும் நிறுவனம் எதையும் அந்தத் தேடல் முடிவு காட்டவில்லை. அது அவரை மேலும் சிந்திக்க வைத்தது. அதாவது சீன நிறுவனங்கள் எதுவும் ஆன்லைன் ரீடெயிலில் ஈடுபடவில்லை என்பதைத் தெரிந்து கொண்டதோடு தானே ஏன் இணையம் அடிப்படையிலான நிறுவனத்தை ஆரம்பிக்கக்கூடாது என நினைத்தார். அவர் ஆரம்பித்த இரண்டு நிறுவனங்கள் அடுத்தடுத்து ஊத்தி மூடியது. இந்தத் தோல்விகளில் இருந்து கற்றுக் கொண்ட படிப்பினைகளின் அடிப்படையில் 1999 ஆம் ஆண்டு `அலிபாபா’வை ஆரம்பித்தார். `திறந்திடு சீசேம்’ என்பது போல ஒரு க்ளிக்கில் அனைத்துப் பொருள்களையும் விற்பதற்கும், வாங்குவதற்கான `சந்தைத் தள’ நிறுவனமாக இது செயல்பட ஆரம்பித்தது.
ஆரம்பத்தில் ஜாக்-கை நம்பி 20 மில்லியன் டாலர் முதலீடு செய்த நிறுவனம் கோல்ட்மென் சாக்ஸ் ஆகும். அதன் பின் ஜப்பானைச் சேர்ந்த சாஃப்ட் பாங்க் 5 மில்லியன் டாலர் முதலீடு செய்தது. அலிபாபாவின் வளர்ச்சியைப் பார்த்த உலகளவில் பெரிய நிறுவனமான `இபே (eBay)’ சீனச் சந்தையில் 2000 மாவது ஆண்டுகளின் ஆரம்பத்தில் நுழைய ஆரம்பித்தது. இதைக் கண்டு சுதாரித்த ஜாக், பொதுமக்களும் இணையத்தில் வாங்கும் பொருட்டு விற்பனை இணையத்தளம் ஒன்றை `Taobao” என்கிற பெயரில் ஆரம்பித்தார். அது மிகவும் வேகமாக வளர்ச்சியடைவதைக் கண்ட eBay அந்நிறுவனத்தை வாங்க ஆர்வம் காட்டியது ஆனால் ஜாக் அதற்கு பிடி கொடுக்கவில்லை.
2005 ஆம் ஆண்டில் யாகூ நிறுவனம் அலிபாபாவில் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்ய விரும்பியது. அதன் மூலம் அலிபாபாவின் 40 சதவிகிதப் பங்குகள் கைமாறியது. இதன் மூலம் அனைவருக்கும் ஆதாயம் கிட்டியது. ஜாக்கால் போட்டியை சமாளித்து முன்னேற முடிந்தது, 2014 ஆம் தேதி அலிபாபா ஐபிஓ வெளியிட்ட போது யாகூ வைத்திருந்த பங்குகளின் மதிப்பு 10 பில்லியன் டாலரைத் தொட்டது. இந்த ஐபிஓ மூலம் உலகத்திலேயே அதிகமான அளவுக்கு, அதாவது சுமார் 25 பில்லியன் டாலர் நிதியைப் பங்குச் சந்தை மூலம் திரட்டியது. அப்போது, `இன்றைக்கு நாங்கள் திரட்டியிருப்பது பணம் இல்லை, மக்களின் நம்பிக்கை’ என்றார் ஜாக் . 2019 ஆம் ஆண்டு இவர் இந்நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகி சமூக அக்கறை கொண்ட சில தொண்டு அமைப்புகளை ஆரம்பித்து நிதியுதவி செய்து வருகிறார்.
இன்றைக்கு இவரது முதலீடு அலிபாபாவையும் தாண்டி கால வளர்ச்சிக்கேற்ப பல துறைகளிலும் பரவியிருக்கிறது. 2016 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் திராட்சைத் தோட்டம், சீன பொழுதுபோக்குத் துறையைச் சேர்ந்த Huyai Brothers and Beijing Enlight Media’, AliExpress.com, 2013 ஆம் ஆண்டு Cainiao என்கிற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட மிகப் பெரிய லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் ஆகியவற்றோடு க்ளவுட் கம்ப்யூட்டிங், செயற்கை நுண்ணறிவு, அலிபே என்கிற நிதிசார்ந்த நிறுவனம் என பலதரப்பட நிறுவனங்களை ஆரம்பித்து அவை வெற்றிகரமாக செயல்பட்டு வருவதோடு இந்தியாவில் பல நிறுவனங்களிலும் இவரது நிறுவனம் முதலீடு செய்திருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்கவை Paytm Mall, Zomato, Bigbasket, Snapdeal, Xpressbees போன்றவையாகும்.
இன்றைக்கு அலிபாபாவின் வருமானம் 57 பில்லியன் டாலர். வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சத்து இரண்டாயிரம். வருடந்தோறும் நவம்பர் 11 ஆம் தேதியை (11/11) `சிங்ள்ஸ் டே (திருமணமாகாமல் தனித்து இருப்பவர்களுக்கான தினம்)’ என அறிவிக்க அலிபாபாவில் விற்பனை களைகட்ட ஆரம்பித்தது. 2019 ஆம் ஆண்டு அந்த ஒரு நாள் மட்டும் ஆன விற்பனை சுமார் 38 பில்லியன் டாலராகும். (அதாவது ஆண்டு விற்பனையில் சுமார் 67 சதவிகிதம்!!)
இவரது வெற்றிக்கான சூட்சமங்களில் சில:
• முயற்சியைக் கைவிடாதீர்கள். இன்றைக்கு கடினமாக இருக்கும்; நாளை அதை விட மோசமாக இருக்கலாம் ஆனால் நாளை மறுநாள் சிறப்பாக அமையக்கூடும்
• நம்மிடம் இருக்க வேண்டிய முக்கியமான குணாதிசியம் பொறுமை.
• போட்டியாளர்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள் ஆனால் அதை அப்படியே காப்பியடிக்காதீர்கள். காப்பியடித்தால் தொழிலில் மரணம் உறுதி.
• வாழ்வில் ஒரு முறையாவது ஏதாவதொன்றை முயற்சியுங்கள், கடினமாக உழையுங்கள், மோசமாக ஒன்றும் நிகழ்ந்து விடாது.• தலைவராக இருப்பவருக்கு பணியாளர்களைக் காட்டிலும் அதிக தொலைநோக்குப் பார்வை இருக்க வேண்டும்