இப்போது ஆன்லைன் விற்பனைகள் கூடி வரும் நேரத்தில் மக்கள் தொகை அதிகமாக உள்ள இந்தியாவில், ஜனநெருக்கடி மிகுந்த நகரங்களில், போட்டிகள் நிறைந்த ஆன்லைன் கம்பெனிகளுக்கு இருக்கும் பெரிய தலைவலி சரியான நேரத்தில் தங்களுடைய ஆர்டர்களை டெலிவரி செய்வதுதான். அதாவது ஒரு வாடிக்கையாளர் ஒரு பொருளை வாங்கும் போது இந்த நேரத்தில் இந்தப் பொருட்கள் உங்களுக்கு டெலிவரி செய்யப்படும் என நேரம் குறிப்பிடப்படுகிறது. அந்த நேரத்திற்குள் டெலிவரி செய்ய எந்த கோடவுனிலிருந்து பொருட்கள் அனுப்பப்பட வேண்டும், அதை எடுத்துச் செல்லும் கூரியர் கம்பெனி எந்த வழியை பின்பற்றி அந்த வாடிக்கையாளரின் வீடு அல்லது அலுவலகத்தை சரியான நேரத்தில் அடைய முடியும் என்பதை எல்லாம் தற்போது ஆர்ட்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ், மெஷின் லேர்னிங், கூகுள் மேப்ஸ் ஆகியவை நிர்ணயிக்கின்றன என்றால் ஆச்சரியமாக இல்லையா. ஆமாம் அது தான் உண்மை.
உணவுப் பொருட்களை டெலிவரி செய்யும் சுவிக்கி, ஜோமோட்டோ, உபர் ஈட்ஸ் ஆகிய கம்பெனிகளில் நீங்கள் ஆர்டர் செய்யும் போதே உங்கள் ஆர்டர் எத்தனை நிமிடங்களில் டெலிவரி செய்யப்படும் என்று குறிப்பிடுகிறார்கள். இதில் அருகிலுள்ள டெலிவரி செய்பவரை தொடர்பு கொள்வது, அவர் நீங்கள் குறிப்பிட்டுள்ள ஹோட்டலுக்கு செல்லும் நேரம், அங்கிருந்து அந்த ஆர்டருக்கான உணவை பெற்றுக் கொள்ள காத்திருக்கும் நேரம், பின்னர் உங்கள் வீட்டை வந்தடையும் நேரம் (உங்கள் வீட்டை எளிதாக வந்தடைய போக்குவரத்து நெரிசல் இல்லாத எந்த வழியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற அறிவுரையும் அந்த டெலிவரி செய்பவருக்கு கூறப்படுகிறது). இவ்வளவையும் கணக்கில் எடுத்துக் கொண்டு நீங்கள் ஆர்டர் செய்த அந்த நிமிடமே உங்களுக்கு இந்த ஆர்டர் எத்தனை நிமிடத்தில் டெலிவரி செய்யப்படும் என்று கூறுகிறார்கள். அதற்கு காரணம் இத்தகைய சாப்ட்வேர்கள்தான்.
சுவிக்கியில் இதற்கென 450 இஞ்சினியர்கள் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் ஆச்சரியமாக இல்லையா. இது தவிர இவர்கள் டெலிவரியை சரிவர செய்ய “விதுரா” என்ற மென்பொருளையும் டெவலப் செய்து உபயோகிக்கிறார்கள்.
பல சமயங்களில் வாடிக்கையாளர் சரியான டெலிவரி அட்ரஸ் கொடுப்பதில்லை. வாடிக்கையாளர்கள் கொடுத்துள்ள விலாசம் சரியாக இருக்கிறதா என்று சரி பார்க்க கம்பெனிகள் பல கோடி ரூபாய்களை டெக்னாலஜிக்கு செலவு செய்கிறார்கள்.
டெலிவரி விஷயத்தில் இவர்கள் எதற்கு இவ்வளவு தலையை பிய்த்துக் கொள்கிறார்கள்? போட்டிகள் நிறைந்த ஆன்லைன் உணவு விற்பனை உலகத்தில், நீங்கள் ஆர்டர் செய்த ஹைதராபாத் பிரியாணியை குறிப்பிட்ட நேரத்தில் சுடச்சுட சுவையாக டெலிவரி செய்யத்தான். இல்லாவிடில் யார் சீக்கிரம் டெலிவரி செய்கிறார்களோ அவர்களிடம் அடுத்த ஆர்டரை நீங்கள் கொடுத்து விடுவீர்களே என்ற பயம் தான்.
இது போன்ற புதிய டெக்னாலஜிகள் நேரத்தையும், வாடிக்கையாளர் மன திருப்தியையும், நாட்டின் மிக முக்கிய தேவையான பெட்ரோல் / டீசல் சேமிப்பையும் செய்கின்றன.
லாஜிஸ்டிக் கம்பெனியான “ப்ளாக் பக்” என்ற நிறுவனம், தங்கள் கம்பெனியின் டிரைவர்கள் ஒழுங்காக வாகனத்தை ஓட்டுகிறார்களா, கண் அயருகிறார்களா, வேகமாக ஓட்டும்போது, மொபைலில் பேசிக்கொண்டே வண்டி ஓட்டுகிறார்களா என்பதை கண்காணிக்க ஒவ்வொரு வாகனத்திலும் ஒரு “டேஷ்காம்” ஐ பொருத்தியுள்ளது. அப்படி அவர்கள் தவறுகள் ஏதும் செய்யும் போது டிரைவர்களை அலர்ட் செய்கிறது.
இது போட்டிகள் நிறைந்த உலகம். இந்த டெலிவிரி ஆன்லைன் பிசினஸில் இருப்பவர்களுக்கு மட்டுமில்லை, மற்ற வியாபாரத்தில் உள்ள உங்களுக்கும் பொருந்தும் என்பது மறுக்கமுடியாத உண்மை. வியாபாரத்தில் ஜெயிக்க டெலிவரி என்ற விஷயத்தில் மிகவும் கவனமாக இருங்கள்.