”நீங்கள் ஒரு சிறப்பான அனுபவத்தை உருவாக்கும்பட்சத்தில் வாடிக்கையாளர்கள் அது குறித்து ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வார்கள். வாய்மொழி (word of mouth) மிகவும் சக்தி வாய்ந்தது” என்கிறார் ஜெஃப் பேஷாஸ். இவர் 112 பில்லியன் டாலர் செல்வத்துக்கு அதிபதியான உலகின் முதல் செல்வந்தரும் (2018 ஆம் ஆண்டு) அமேசான் (Amazon) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், தலைவருமாவார்.
1964 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி ஜெஃப் என இப்போது அழைக்கப்படும் ஜெஃப்ரி ப்ரஸ்டன் நியூமெக்ஸிகோ மாநிலத்திலிருக்கும் ஆல்புகெர்கி நகரத்தில் பிறந்தார். இவருக்கு நான்கு வயதாகும் போது இவரது இளம்வயது அம்மா (திருமணத்தின் போது இவருக்கு 17 வயது) கணவர் ஜாக்லினை விவாகரத்து செய்துவிட்டு கியூபா நாட்டுக்காரரான மிகுவல் `மைக்’ பேஷாஸை மறுமணம் செய்து கொண்டார்.
ஜெஃப் அவரது இளம் வயதில் வீட்டில் உள்ள கராஜை அவரது மின்சார சாதன கண்டுபிடிப்புகளுக்கு பயன்படுத்திக் கொண்டார். இவர் பள்ளியில் படிக்கும்போதே கம்ப்யூட்டர் சயின்ஸில் `புலி’யாக இருந்தார். அதன்பின் 1986 ஆம் ஆண்டு பிரின்ஸ்டன் பல்கலையில் கம்ப்யூட்டர் மற்றும் எலக்ட்ரிக்கல் இன்ஜீயனிரிங் பட்டம் பெற்றார்.
பள்ளியில் படிக்கும்போதே அவருக்கு தொழில் முனைவோருக்கான உத்வேகம் இருந்தது. அவருடைய முதல் தொழில் `ட்ரீம் இன்ஸ்டிடியூட்’ என்கிற பெயரில் நான்கு, ஐந்து, ஆறாம் வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் பயிற்சி வகுப்பாகும். அதன்பின் பொறியியல் கல்வியில் பட்டம் பெற்று பல நிறுவனங்களில் வேலை பார்த்தார். அதில் ஒரு நிறுவனம் D.E. Shaw என்கிற முதலீட்டு நிறுவனமாகும். மிகவும் இளம் வயதிலேயே (26 வயது) அந்நிறுவனத்தின் வைஸ் பிரசிடெண்ட் ஆனார்.
1990 களின் முற்பகுதியில் உலக அளவில் தொழில்நுட்பத் துறையில் உத்வேகம் அளிக்கக்கூடிய பல காரியங்கள் நடந்து வந்தன. அந்த நேரத்தில் இணைய தொழில்நுட்பமும் தலைகாட்ட மக்கள் வாழும் முறையையே அது புரட்டிப் போட ஆரம்பித்தது. இணையம் சம்பந்தப்பட்டத் துறையின் வளர்ச்சி யாரும் நினைத்துப் பார்க்கக்கூட முடியாத அளவுக்கு 2300 சதவிகிதம் வளர்ந்திருந்தது. அப்போது, இந்தத் துறை சம்பந்தமாக ஏதாவது ஒரு தொழிலைத் தொடங்க வேண்டுமென்று ஜெஃப் சிந்திக்க ஆரம்பித்தார்.
அவரது சிந்தனைக்குத் தீனி போட நினைத்த அவர் மிகவும் வசதியான D.E. Shaw நிறுவன வேலையிலிருந்து விலகி சியாட்டல் நகரத்துக்கு இடம் பெயர்ந்தார். வணிகத்துக்கு இணையம் எப்படி உதவும் என்பது குறித்த விஷயங்களைத் தெரிந்து கொள்ள ஆரம்பித்தார். அதன் விளைவு ஆன்லைனில் புத்தகங்கள் விற்க முடிவு செய்து அதற்குத் தேவையான நிதியை நண்பர்களிடமும் உறவினர்களிடமும் திரட்ட ஆரம்பித்தார். மின்வணிகத்துக்கு (இ-காமர்ஸ்) தேவையான மென்பொருள் ஒன்றை உருவாக்கி தனது நண்பர்களிடையே அதை சோதனை செய்து பார்க்க அது வெற்றிகரமாக அமைந்தது. அதன்பின், 1995 ஆம் ஆண்டு ஜுலை மாதம் அமேசான்.காம் என்கிற நிறுவனத்துக்கு பிள்ளையார் சுழி போட்டார்.
ஆன்லைன் இணையத்தளம் ஆரம்பித்த இரண்டு மாதங்களிலேயே வாரத்துக்கு 20,000 டாலர் வருமானத்தை அது ஈட்ட ஆரம்பித்தது. ஆன்லைன் மூலமான புத்தக விற்பனை அமெரிக்காவையும் கடந்து நாற்பத்தைந்து நாடுகள் வரை நீட்டித்தது. அமேசானின் ஆரம்பமே அதிரடியாக இருந்ததை ஜெஃபே எதிர்பார்க்கவில்லை. அப்புறமென்ன? 1997 ஆம் ஆண்டிலே அமேசான் பங்குச் சந்தையில் தனது பங்குகளை விற்க பட்டியிலிட ஆரம்பித்தது. தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி மற்றும் அமேசானின் செயல்பாடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அமெரிக்காவின் பெரு முதலீட்டாளர்கள் அமேசானில் முதலீடு செய்ய ஆரம்பித்தனர்.
தொழில்நுட்பத் துறை பெரும் சரிவைச் சந்தித்தபோது எந்த பாதிப்பும் இல்லாமல் தப்பித்த நிறுவனங்களில் அமேசானும் ஒன்றாகும். 1995 ஆம் ஆண்டு (அதாவது முதல் வருடம்) 510,000 டாலராக இருந்த அமேசானின் விற்பனை 2011 ஆம் ஆண்டு 17 பில்லியன் டாலரைத் தொட்டது (!).
சமூக ஊடகம், செயற்கை நுண்ணறிவு, இண்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் ஆகியவை வளர்ச்சியடைந்து வருவதை அவதானித்த ஜெஃப் அதில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். 2006 ஆம் ஆண்டில் `அமேசான் இன்ஸ்டண்ட் வீடியோ’ சேவையை தொடங்கினார். அதுதான் இப்போது `அமேசான் ப்ரைம் வீடியோ’ என அறியப்படுகிறது. 2007 ஆம் ஆண்டில் புத்தகங்களைப் படிப்பதற்கான `கிண்டில்’ என்கிற `டிஜிட்டல் புக் ரீடர்’ கருவியை அறிமுகப்படுத்தினார். இது `படிப்பாளிகளுக்கு’ வரப்பிரசதாமாக அமைந்தது. அச்சுப் புத்தகங்களை வாங்கி வீட்டை அடைப்பதற்குப் பதிலாக மின்னூல்கள் இந்தக் கருவியிலேயே தரவிறக்கம் செய்து எப்போது வேண்டுமென்றாலும், எங்கு வேண்டுமென்றாலும் படிப்பதற்கு செளகரியமாக இருந்தது.
2006 ஆம் ஆண்டில் ஜெஃபின் நீண்ட கால ஆசையான விண்வெளிப் பயணத் திட்டத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்தார். அதன் விளைவாக ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் `ப்ளூ ஆர்ஜின்’. இது பயணிகளை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் மறு உபயோகம் செய்யக்கூடிய ராக்கெட்டைத் தயாரிக்கும் நிறுவனமாகும். 2013 ஆம் ஆண்டு `தி வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையை வாங்கி ஊடகத் துறையிலும் கால்பதித்தார்.
அமேசான் பொருட்களை `ட்ரோன்’ மூலம் விநியோகிக்கும் `அமேசான் ஏர் ப்ரைம்’ என்கிற சேவையை ஆரம்பித்தார். இதன் மூலம் நிறுவனத்தின் விநியோக மையத்திலிருந்து 10 மைல் தொலைவிலிருக்கும் இடங்களுக்கு 5 பவுண்ட் எடையுள்ள பொருட்களைத் தூக்கிச் சென்று இந்தக் கருவியால் விநியோகிக்கமுடியும். `அமேசான் வெப் சர்வீஸ்’ என்கிற பிரிவு பல நிறுவனங்களுக்கு சேமிப்பக வசதியையும் தரவுத்தளச் சேவையையும் வழங்கி வருகிறது.
1993 ஆம் ஆண்டு இவருக்கும் மெக்கின்சி என்கிற பெண்ணுக்கும் திருமணமானது. அவரும் இவர் படித்த அதே பிரின்ஸ்டன் பல்கலையில் ஆங்கில இலக்கியம் படித்தவர். ஆப்ரிக்க அமெரிக்க எழுத்தாளாரான டோனி மோரிசனின் உதவியாளராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு நான்கு குழந்தைகள். 2019 ஆம் ஆண்டு இருவருக்கும் விவாகரத்து நடந்தது. மிகவும் `விலை மதிப்பு மிக்க விவாகரத்து’ என உலகமெங்கும் பேசப்பட்டது. இதற்கு ஜெஃப் கொடுத்த விலை சுமார் 36 பில்லியன் டாலர்!! அதாவது அமேசானில் இருந்த தனது பங்கில் சுமார் 25 சதவிகிதத்தை மெக்கின்சிக்குக் கொடுத்தார் அதன் அப்போதைய மதிப்பு 36 பில்லியன் டாலர்.
2018 ஆம் ஆண்டு 2 பில்லியன் டாலர் நிதியில் `பேஷாஸ் டே ஒன் ஃபண்ட்’ என்கிற பெயரில் சமூக சேவை அமைப்பை ஆரம்பித்து நடத்தி வருகிறார்.
இவரது வெற்றிக்குக் காரணம் என்ன?
• வாய்ப்புகளைக் கண்டறியும் திறமை
• கடின உழைப்பு
• வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தோடு சேர்ந்து தன்னையும் தயார் செய்து கொள்வது.
இன்றைக்கு இவரது நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 7,50,000. இந்நிறுவனப் பங்குகளின் சந்தை முதலீடு சுமார் 800 பில்லியன் டாலர். இதன் ஆண்டு வருமானம் (2018 ஆம் ஆண்டு) 233 பில்லியன் டாலர். இந்நிறுவனப் பெயருக்குக் கீழ் a ல் ஆரம்பித்து z வரை ஒரு கோடு இருக்கும். அதன் அர்த்தம் என்னவெனில் அமேசானில் அனைத்துப் பொருட்களும் கிடைக்கும் (அதாவது a முதல் z வரை) என்பதுதான். அதோடு வாடிக்கையாளர்களின் திருப்தியை குறிக்கும் வகையில் அது ஒரு `ஸ்மைலி’ போலவும் தோற்றமளிக்கும்.