‘ஸ்நாக்ஸ் பிசினஸ்’ என்பது அவ்வளவு சுலபமல்ல; மார்க்கெட்டில் திரும்பிய பக்கமெல்லாம் செட்டிநாடு ஸ்நாக்ஸ் மலிந்து கிடக்கும் சூழ்நிலையில், சுவையான, தரமான செட்டிநாட்டு பலகார வகைகள் மற்றும் உணவு வகைகளைத் தயாரிக்கும் தொழில் என்பது ஒரு சவாலான பணிதான். அந்தப் பணியைச் செவ்வனே தொடங்கி, ஆரம்பித்த சில மாதங்களில் வெற்றி பெற்றிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த லக்ஷ்மி வெங்கடேஷ்.
‘கிளாஸிக் செட்டிநாடு’ என்ற இவருடைய ஸ்டார்ட் அப் பிசினஸ் மூலமாக இவர் தயாரிக்கும் ஸ்நாக்ஸ், பொடி, ஊறுகாய் வகைகளுக்கு சென்னையிலும் மற்ற இடங்களிலும் நல்ல வரவேற்பு. ஏற்கெனவே ‘அவள் விகடன்’ மற்றும் ‘அவள் கிச்சன்’ ஆகியவற்றில் சமையல் தொடர்பாக எழுதி பிரபலமானவர் இவர்.
இந்த சவாலான தொழிலை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்துவதன் பின்னணியைக் கேட்டோம்.
‘‘மும்பையில் பிறந்து வளர்ந்த எனக்கு சொந்த ஊர் தேவகோட்டை. செட்டிநாடு என்றாலே சுவையான சமையல் நினைவில் வரும். ஊரில் பல பேர் சமையலில் கைதேர்ந்த எனது அம்மா, ஆயாவிடம் வந்து பலகாரம், ஊறுகாய் போன்றவற்றை செய்து வாங்கி செல்வார்கள். அதனால் எனக்கும் சமையலில் ஆர்வம் வந்தது. எனது ஆர்வத்துக்கு தகுந்தவாறு என் கணவர் வெங்கடேஷின் விருப்பமும் அமைந்தது. அவருக்கும் சமையல் தெரியும். எனவே இருவரும் கலந்து ஆலோசனை செய்து நான் பல விதமான உணவுகளை செய்ய ஆரம்பித்தேன். எனது கணவர்தான் என்னுடைய ‘மென்டர்’ எனலாம்”.
‘‘பிசினஸ் ஆரம்பித்தது எப்போது?’’
2006 ல் ‘கிச்சன் க்ரானிகல்ஸ்’ என்ற ஒரு ஃபுட் ப்ளாக் (blog) தொடங்கி அதில் என் சமையல் அனுபவங்கள் மற்றும் ரெசிபிக்களை எழுதி வந்தேன். 2015ல் ‘அவள் கிச்சன்’ பத்திரிகைக்கு ரெசிபிகள் எழுத ஆரம்பிச்சேன்.
வெளிநாட்டிலிருந்து சென்னை திரும்பிய பின்னர் அம்மாவும் நானும் உணவு சம்பந்தமாக ஏதாவது பிசினஸ் செய்யலாம் என நினைத்து தொடங்கியதுதான் ‘கிளாஸிக் செட்டிநாடு’. முதலில் வெப்சைட் உருவாக்கி. தரமான செட்டிநாடு உணவுகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்தேன்.
நான் செட்டிநாடு பக்குவத்தில் முறுக்கு, சீடை, மணகோலம், அதிரசம் அறிமுகப்படுத்தி, வாட்ஸ் அப் மூலம் மார்க்கெட்டிங் செய்தேன். அந்த ‘காம்போ’வுக்கு நல்ல ஆர்டர்கள் வந்தது. அதையடுத்து தீபாவளிக்கு தேன்குழல் மாவு, முள்ளு முறுக்கு மாவு, சீடை மாவு, தட்டை மாவு, மைசூர்பாக் மாவு, அதிரச மாவு, மாவுருண்டை மாவு, சிறுதானிய லட்டு மாவு என்று அனைத்து விதமான மாவுகளையும் தரமாகத் தயார்செய்து, பேக் செய்து கொடுத்தேன். நல்ல வரவேற்பு. பெரும்பாலும் வேலைக்குப் போகும் பெண்கள் எங்களின் இந்த மாவுகளை விரும்பி வாங்குகின்றனர்.
தேன்குழல், முறுக்கு போன்ற பலகாரங்களை பேக் செய்து அனுப்பும்போது அவை வாகனங்களில் உடைந்து போவதற்க்கு சாத்தியம் அதிகம். எனவே அதைத் தவிர்க்க முயற்சிக்கிறோம். இப்போது கடைகளுக்கும் சப்ளை செய்கிறோம். எங்களின் வெப்சைட் மூலமாக சில டிஸ்ட்ரிபியூட்டர்கள் எங்களின் தயாரிப்புகளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய தயாராக இருக்கிறார்கள். விரைவில் ஏற்றுமதி செய்ய இருக்கிறோம். உணவுத் தொழிலுக்கு எப்போதுமே போட்டி அதிகம் இருக்கும். அதில் ஜெயிச்சு வர்றதுக்கு உணவின் சுவை மற்றும் தரத்தில் சமரசம் செய்துக்கவே கூடாது’’ என்கிறார் அழுத்தமாக.
அவள் விகடனில் இவர் எழுதிய ‘நீங்களும் செஃப் ஆகலாம்’ என்ற தொடர் இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் புத்தகமாக வெளிவருகிறது.
‘‘காலையில் ஓட்ஸ், கார்ன்ஃப்ளேக்ஸ் சாப்பிடுறதுக்கு பதிலாக, அதே கான்செப்டில் நம்முடைய சிறுதானியங்களை வைத்து ஆரோக்கியமான உணவு ஒன்றை தயாரிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்’’ என்று உற்சாகமாகப் பேசிய லக்ஷ்மிக்கு உளமார்ந்த வாழ்த்துக்களைக் கூறினோம்.
கிளாஸிக் லக்ஷ்மி.. கலக்குங்க!