செயலிகள் பல விதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்.. அதன் செயல்கள் தான் எத்தனை விதம், நம் உள்ளங்கையில் வந்து விட்ட உலகத்தில், நாம் முன்னேற பல்வேறு தளங்கள் நமக்கு உறுதுணையாக இருக்கின்றன, வியாபாரத்திற்கும் இது விதி விலக்கல்ல.
உலக மக்கள் இன்று அதிகம் உபயோகிக்கும் செயலிகளில் முதன்மை இடத்தை தக்க வைத்துள்ளது வாட்ஸப் செயலி தான். இதற்கு முழுமுதற்காரணம் அதன் இலவச தரவிறக்கம் என்பது மட்டுமல்ல, அதன் பயன்பாடு மிக எளிமையாகவும், நேர்த்தியாகவும், நம்மை கவரும் விதமாகவும் அமையப் பெற்றது தான்.
நாம் பொழுது போக்காக உபயோகப்படுத்திய பல இணைய தளங்களை, இன்று வியாபாரத்தளமாக மாற்றிக்கொண்டு வருகின்றனர், இதற்கு வாட்ஸப் விதிவிலக்கல்ல…
முன்பு வாட்ஸப் மூலம் வியாபாரம் செய்வோர் தனித்தனி குழுக்கள் அமைத்து, ஒவ்வொரு குழுவிற்கும் அவர்களின் வியாபார பொருள்களின் படங்கள், அதன் விலைப்பட்டியல்கள் அல்லது போஸ்டர்ஸ் போன்ற விளம்பரப் படங்களை ஃபார்வேர்டு செய்ய வேண்டும், இது மட்டுமல்லாது தாம் அனுப்பும் விபரங்களை மறுபதிவு செய்ய வேண்டிய கட்டாயம் தொடர்ந்து ஏற்படலாம்,
வாடிக்கையாளர் கேட்கும் ஒவ்வொறு சமயத்திலும், அதைத் தேடி அனுப்பும் செயல் கடினமாகவும் சற்றே அயர்ச்சியாகவும் இருக்கக்கூடும். ஆனால் இப்போது அறிமுகமாகியுள்ள வாட்ஸப் பிசினஸ் செயலி அனைத்தையும் எளிதே செய்யும் விதத்தில் அமையப் பெற்றுள்ளது.
வீட்டில் இருந்தே வியாபாரம் செய்வோர் முதல் சிறு வணிக பல்பொருள் அங்காடி வைத்துள்ளவர் வரை பயன்படுத்தக் கூடிய வகையில் வடிவமைத்துள்ளனர். இந்த செயலி மூலம் வாடிக்கையாளர்களுக்கு தங்களிடம் உள்ள வியாபார பொருட்களை, புது வரவுகளை, அன்றைய விலைப்பட்டியலை காணும் பொருட்டு அட்டவணை (catalogue) ஒன்று தயாரித்து வைத்துக்கொள்ள முடியும். இதன் பயன் நாம் ஏற்கனவே குழுக்களாக அமைத்து வைத்துள்ள வாடிக்கையாளர்கள் அன்றாடம் அவர்களுக்கு தேவையான பொருள்களை அந்த அட்டவணை பார்த்தே தெரிந்து கொண்டு ஆர்டர் செய்ய இயலும்.
இதில் முக்கிய விசேஷம் என்னவென்றால் இச்செயலி முழுக்க முழுக்க தமிழிலும் பயன்முடித்த முடியும் என்பது தான். நிகழ்நேரத்தில் தனிநபருடனோ அல்லது ஒரு குழுவுடனோ (அதிகப்படியாக 236 நபர்கள்) எழுத்து வடிவ செய்திகள் மட்டுமல்லாது பேச்சுப்பதிவு (voice record), படங்கள், வீடியோ மற்றும் பயனரின் இருப்பிடத்தையும் பகிர்ந்து கொள்ள ஏதுவாக அமைத்துள்ளனர்.மிக முக்கியமாக வெளி நாட்டில் உள்ளவர்களிடம் கூட நீங்கள் நேரடியாக உரையாடி வியாபாரத்தை பெருக்கிக்கொள்ளலாம்.
இது மட்டுமல்லாமல், தானியங்கி பதில் அனுப்பும் வசதி, வாழ்த்துச்செய்தி மற்றும் விரைவு பதில்கள் பதிவு செய்து கொண்டு தேவைக்கு தகுந்தாற்ப்போல் உபயோகப்படுத்த முடியும்.
உங்கள் பிசினஸ் முன்னேற்றதிற்கு உதவும் செயலி. உபயோகித்துப் பாருங்கள்.