வெகு வேகமாக சென்று கொண்டிருக்கும் உலகத்தில், மாற்றங்கள் தவிர்க்க இயலாதவை. எதிர் கொள்ள இருக்கும் அத்தகைய மாற்றங்களை கம்பெனிகள் சரிவர முன் கூட்டியே கணித்து வைக்க வேண்டும். இல்லையேல் அது நஷ்டங்களுக்கு வழி வகுக்கும்.
அடுத்த வருடம் நுகர்வோர்களின் தேவைகளில் என்னென்ன மாற்றங்கள் வரும் என்பது பலருக்கு தெரியாமல் இருக்கும் சூழ்நிலையில், சிறிய மற்றும் நடுத்தர கம்பெனிகளின் உரிமையாளர்களிடம் சென்று அடுத்த பத்து வருடங்களை பற்றி தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள், அப்படி தெரிந்து வைத்துக் கொண்டால்தான் உபயோகிப்பாளர்களின் மனங்களை புரிந்து கொண்டு நீங்கள் அதற்கு தகுந்தாற்போல் உங்களுடைய தயாரிப்புகளை நுகர்வோர்களிடம் கொண்டு செல்ல முடியும் எனக் கூறினால் நிச்சயம் அதற்காக பணத்தை செலவழிக்க அந்த உரிமையாளர்கள் தயாராக இருக்க மாட்டார்கள்.
ஒரு சிறிய உதாரணம் கூறுகிறேன். இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒருவர் பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கும் ஒரு பெரிய நிறுவனத்தை தொடங்க விரும்புகிறேன் என்று கூறினார். நான் இந்தியா முழுவதும் பிளாஸ்டிக் பைகளின் உபயோகம் குறைந்து வருகிறது, மேலும் ஒவ்வொரு மாநிலமாக தடைகளை விதித்து கொண்டு வருகிறார்கள். இது போன்ற சூழ்நிலைகளில் பிளாஸ்டிக் பை தயாரிக்கும் கம்பெனியில் முதலீடு செய்தால் அது எந்த அளவுக்கு சரியான வழியாக இருக்கும் என்று தெரியவில்லை என்று கூறினேன்.
இது போன்ற சிறிய மற்றும் நடுத்தர கம்பெனிகளுக்கு அடுத்த பத்து வருடங்களில் இந்திய அளவில் உபயோகிப்பாளர்களிடம் என்னென்ன மாற்றங்கள் வரும் என்பதை கூறினால் அது அவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என்ற எண்ணத்தில்தான் இந்த கட்டுரை.
இந்திய மக்கள் தொகையில் தற்போது நடுத்தர வகுப்பு என்பது 50 சதவீதமாக இருக்கிறது. இது 2030 ஆம் வருடம் 80 சதவீதமாக கூடும் என கணிக்கப்பட்டிருக்கிறது. இதனால், இந்தியாவில் உபயோகிப்பாளர்களின்ன் ‘வாங்கும் சக்தி’ அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம். இதனால் பொருட்களின் விற்பனையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
14 கோடி குடும்பங்கள் (ஒரு குடும்பத்திற்கு 3 பேர் என்று எடுத்துக் கொள்ளலாம்) நடுத்தர வர்க்கத்திற்குள்ளும், 2 கோடி மக்கள் உயர் வருவாய் வர்க்கத்திற்குள்ளும் செல்வார்கள். இதனால், உணவு, பானங்கள், ஆடை, பர்சனல் கேர் ப்ராடக்ட்கள், காஜெட்டுகள், போக்குவரத்து மற்றும் வீட்டு வசதி ஆகியவற்றுக்காக, இப்போது செலவிடுவதைவிட, மேலும் 2 முதல் 2.5 மடங்கு வரை அதிகம் செலவழிப்பார்கள்.
உடல்நலம், கல்வி, பொழுதுபோக்கு மற்றும் வீட்டு பராமரிப்பு ஆகியவற்றுக்காக 4 மடங்கு அதிகம் செலவிடுவார்கள். சலவை இயந்திரங்கள், குளிர்சாதன பெட்டிகள், தொலைக்காட்சி பெட்டிகள் மற்றும் தனிப்பட்ட வாகனங்கள் ஆகியவற்றுக்காக 1 முதல் 2 மடங்கு வரை அதிகம் செலவழிப்பார்கள்.
டிஜிட்டல் டிஸ்டிரப்ஷன் அதிகமாக இருக்கும். மக்களின் வாங்கும் முறையை டிஜிட்டல் சக்தி பெரிய அளவில் மாற்றும். இப்போது 20 சதவீதமாக இருக்கும் ஆன்லைன் மூலம் வியாபாரம் 40 சதவீதமாக உயரும் அல்லது இன்னும் அதிகமாகவும் கூடும்.
இதை வைத்து உங்கள் கம்பெனியின் உற்பத்தி போக்குகளை, ஏற்றுமதியை மாற்றி அமைக்க முயற்சி செய்யுங்கள்.
தமிழ் வாசகர்களுக்கு மிகவும் பரிச்சியமானவர். இவர் எழுதும் கட்டுரைகள் தினமலர் நாளிதழில் கடந்த பல ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கிறது. இது தவிர பல பத்திரிக்கைகளிலும் எழுதியுள்ளார்.
சேமிப்பு, வர்த்தகம், பங்குச் சந்தை, ஏற்றுமதி / இறக்குமதி ஆகிய துறைகளில் ஆழ்ந்த அறிவு உடையவர்.
தமிழில் இவர் எளிமையாக எழுதும் கட்டுரைகளுக்கு வாசகர்கள் அதிகம். கடந்த 20 ஆண்டுகளாக பத்திரிக்கைகளில் எழுதி வரும் இவர் இதுவரை சுமார் 2000 கட்டுரைகளுக்கு மேல் பத்திரிக்கைகளில் எழுதியுள்ளார்.
Sethuraman Sathappan சேதுராமன் சாத்தப்பன்