கட்டுரையாளர். சுப. மீனாட்சி சுந்தரம், ஹோசூர்
(உங்கள் தொழில் வளர்ச்சி பெற, ஸ்டார்ட் அப் வளர்ச்சி பெற நல்ல தொழில் புத்தகங்களின் துணை வேண்டும். அந்த வகையில் உங்களுக்கு தொடர்ந்து தொழில் சம்பந்தமான நல்ல புத்தகங்களையும், அதன் சாரம்சங்களையும் இனி தரவிருக்கிறார் திரு சுப. மீனாட்சி சுந்தரம்)
மார்வாரிகள்
பொருளாதார அறிஞரும் நிர்வாக ஆலோசகருமான தாமஸ் டிம்பர்க் எழுதிய புத்தகம்தான் “மார்வாரிகள்”.
இந்திய நாகரீகத்தை முன்னேற்றுவதிலும் , இந்தியாவை வர்த்தக மற்றும் பொருளாதார ரீதியாக உயர்த்துவதற்கும் மார்வாரி நிறுவனங்களால் ஆற்றப்பட்ட தெளிவான ஆற்றல் மிக்க சிறப்பான பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது. பூகோள ரீதியாக வட மாநிலமான கிழக்கு ராஜஸ்தானில் “மார்வார்” என்ற பகுதியைச் சேர்ந்தவர்கள் மார்வாரிகள். 19ம் நூற்றாண்டில் கொஞ்சம் கொஞ்சமாக பஞ்சாப் ,உத்தரப் பிரதேசம், வங்காளம் ,மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கர்நாடகா என இவர்கள் இல்லாத மாநிலமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு எங்கும் வியாபித்து இருக்கிறார்கள். நம்மூரில் செல்லமாக இவர்களை “சேட்டு” என அழைப்பார்கள். பெரும்பாலான சினிமா படங்களுக்கு பைனான்சியர்கள் இவர்கள்தான்.
பிர்லா, கோயங்கா, சிங்கானியா, சேத், டால்மியா, பஜாஜ், பிரமல், ஜூன்ஜூன்வாலா, கன்ஷயம் தாஸ் என்று நாம் அன்றாடம் பார்க்கும் பெயர்களில் உள்ள அனைத்து நிறுவனங்களும் மார்வாரிகளுக்கு சொந்தமானது. ஏலக்காய், ஆரஞ்சு, உருளைக்கிழங்கு போன்ற ஏற்றுமதி வர்த்தகங்களில் பெரும்பாலானவை மார்வாரிகளின் ஆதிக்கத்தில் உள்ளன. அதே நேரத்தில் உள்நாட்டில் நுகர்வு பொருள்களின் இறக்குமதி, வர்த்தகம், தயாரிப்பு மற்றும் சில்லரை விற்பனைகளில் முழு கட்டுப்பாட்டை கொண்டிருக்கிறார்கள் . இந்திய கூட்டாளிகள் தேவைப்படும் வெளிநாட்டு வணிக நிறுவனங்களுடன் மார்வாரிகள் குடும்ப வணிக நிறுவனங்கள் இணைந்தன. தாராசந்த் கன்ஷயம் தாஸ் பிரபல பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனமான பர்மா ஆயில் நிறுவனத்தின் முக்கிய ஏஜெண்டாக இருந்திருக்கிறார்.
எல்லா வணிகமும் சில ரிஸ்க்-களை (ஆபத்துகளை) உள்ளடக்கியது. அந்த ஆபத்தை நிர்வகிப்பது ஒரு முக்கிய நிர்வாக பணியாகும் .தொழில் முனைவோர்கள் புதியதாக தொழில் தொடங்கும் போது குறிப்பிட்ட அளவு ரிஸ்க் எடுத்துக் கொண்டுதான் தொடங்குகிறார்கள். இல்லாவிட்டால் அந்த வணிகத்தில் இருந்து வெளியேற முயற்சிக்கிறார்கள். வணிக குடும்பங்களைச் சேர்ந்த மார்வாரிகள் குடும்ப நிறுவனங்கள் வைத்திருந்தால், அதில் அவர்கள் வேலை செய்வார்கள் அல்லது அதை விரிவுபடுத்தும் முயற்சிகளை மேற்கொள்வார்கள். மற்ற இனத்தவரை போல் உயர்ந்த படிப்பு ,தேர்வுகளில் தகுதி மற்றும் அரசாங்க நிறுவனங்களில் வேலை என்றெல்லாம் எதிர்பார்க்காமல் பாரம்பரியத்தில் வேரூன்றிய அவர்கள் உறவினர்களைப் போலவே இளம் மார்வாரிகளும் தொழிலையே விரும்பி செய்தனர்.
2010 ஆண்டு போர்பஸ் (FORBES) பில்லியனர் பட்டியலில் உள்ள 46 இந்தியர்களில் 12 பேர் பழைய மற்றும் பிரபலமான மார்வாரிகள். மார்வாரி இனத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, பயிற்சி போன்றவற்றை கொடுத்து ஒரு கட்டத்தில் அவர்கள் தனியே தொழில் தொடங்கினால் அதற்கு முதலீடு கொடுக்கும் வழக்கமும் மார்வாரிகளிடம் உள்ளது.
நம்மால் வெளி மாநிலத்திற்கு சென்று அந்த மொழியை கற்றுக் கொள்வதில் நாம் எடுக்கும் முயற்சியை காட்டிலும் வெளி மாநிலத்தில் இருந்து வந்த மார்வாரிகள் நமது தமிழ் மொழியை விரைவாக கற்றுக் கொண்டு நம் ஊர் பழக்க வழக்கங்களை அனுசரித்து வியாபாரம் செய்வது நாம் மார்வாரிகளிடம் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான பாடமாகும்.
தொலைத் தொடர்பு தொழில் நுட்பம் வளர்ச்சி அடையாத காலத்திலேயே லண்டன் ஸ்டாக் மார்க்கெட் முதல் உள்ளூர் ஸ்டாக் மார்க்கெட் விலை வரை அறிய துடித்த மார்வாரிகளின் தொழில் ஆர்வம் ஆச்சரியப்பட வைக்கிறது. அதீத தன்னம்பிக்கையுடன் கூடிய உள்ளுணர்வால் அவர்கள் செய்த முதலீடுகளை எண்ணிப் பார்க்க பிரமிப்பாக இருக்கிறது.
மார்வாரி குடும்பங்களின் வணிக வெற்றிக்கு காரணமாக கருதப்படும் ஏழு முக்கிய அம்சங்கள் :
1. WATCH THE MONEY- பணம் எப்படி வருகிறது, எங்கே போகிறது என்பதை பார்த்துக் கொண்டே இருங்கள்.
2. DELEGATE BUT MONITOR அதிகாரத்தை பகிர்ந்தளியுங்கள் .அதேநேரத்தில் கண்காணித்துக் கொண்டே இருங்கள்
3. PLAN BUT HAVE A STYLE AND A SYSTEM- திட்டமிடுங்கள். உங்களுக்கு என்று ஒரு தனி பாணியையும் அமைப்பையும் வைத்துக் கொள்ளுங்கள்
4 . LEAD TO EXPAND AND DO NOT LET THE SYSTEM INHIBIT GROWTH – விரிவாக்கத்திற்கு வழிவகுக்கவும்.அதே நேரத்தில் அமைப்பின் மூலமாக உருவாகும் வளர்ச்சி அவசியம் இல்லை
5. THE RIGHT CORPORATE CULTURE- பொருத்தமான கார்ப்பரேட் கலாச்சாரம்.
6. DON’T GET BLOWN BY FADS – கவர்ச்சிகரமான கோட்பாடுகளை நம்பி இருக்காதீர்கள். ஒவ்வொரு நாணயத்திற்கும் இரண்டு பக்கங்கள் இருப்பதைப்போல சூழ்நிலைக்கு எது சரி என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
7. DO NOT MISS NEW DEVELOPMENTS – புதிய வாய்ப்புகளை தவறவிடாதீர்கள்.
“சேட்டுகளோடு நம்மளால போட்டி போட்டு வியாபாரம் பண்ண முடியாது” என்று நினைக்கும் தொழில் முனைவோர் அனைவரும் ஒரு தடவையாவது படித்து பார்க்க வேண்டிய புத்தகம்.