அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற மின் – வணிக நிறுவனங்கள் மூலம் பொருள்களையும், சேவைகளையும் விற்க முடியாத வணிக நிறுவனங்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் உதவும் வகையில் Open Network for Digital Commerce (ONDC – மின்னணு வணிகத்துக்கான திறந்த முனையம்) என்பது கம்பெனிகள் சட்டம், 2013 கீழ் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இது பிரிவு 8ன் கீழ் ஆரம்பிக்கப்பட்ட லாப நோக்கமற்ற சந்தைப்படுத்தல் தளம் (marketing platform) ஆகும்.
இது 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய அரசின் கீழ் இயங்கி வரும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையால் (DPIIT) பதிவு செய்யபட்டது. ONDC என்பது ஒரு செயலியோ, இடைத்தரகரோ அல்லது மென்பொருளோ இல்லை. மாறாக, பொருள் அல்லது சேவையை வாங்குபவர்கள், தொழில்நுட்ப தளங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களிடையே ஓர் இணைப்பை வளர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்ட இணையதளமாகும்.
2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை பல்வேறு பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் ONDC இல் முதலீடு செய்தன. இதில் குறிப்பிடத்தக்க முதலீட்டு அமைப்புகள் பஞ்சாப் நேஷனல் வங்கி (₹25 கோடி – 9.5%), பாரத ஸ்டேட் வங்கி (₹10 கோடி – 7.84%), ஆக்சிஸ் வங்கி (7.84%), கோடக் மஹிந்திரா வங்கி (7.84%), BSE முதலீடுகள் (5.88%), மத்திய வைப்பு சேவைகள் (Central Depository Services) (6.78%), ஐசிஐசிஐ வங்கி (₹10 கோடி – 5.97%), இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (₹10 கோடி – 7.84%) போன்றவை ஆகும்.
இதோடு 2022 ஆம் ஆண்டு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) கீழ் செயல்பட்டு வரும் பொது சேவை மையமானது அதனுடைய செயலியை இதில் இணைப்பதன் மூலம் கிராமப்புறங்களில் ONDC குறித்த பயன்பாடு பரவலாவதோடு கிராம மக்கள் அவர்களது பொருள்களை விற்கவும், பிறருடைய பொருளை வாங்கவும் வகை செய்யும் என தெரிவித்தது. நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) மற்றும் நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஆஃப் இந்தியா (என்எஸ்இ) ஆகியவை ONDC யின் புரமோட்டர்கள் என்கிற வகையில் நிதியுதவி அளித்தன. இப்படியாக, தொடர்ந்து பல வங்கிகளும், அமைப்புகளும் இதில் முதலீடு செய்து வருகின்றன.
இதனுடைய நோக்கங்கள் என்ன?
- தனியார் / பன்னாட்டு மின் வணிகத் தளங்களின் ஏகபோகத்தைக் கட்டுப்படுத்துதல்
- ஜனநாயகப்படுத்தல், அதிகாரப் பரவலாக்குதல்
- மதிப்புச் சங்கிலியை டிஜிட்டல் மயமாக்கல்
- செயல்பாடுகளைத் தரப்படுத்தல்
- விற்பனையாளர்களை குறிப்பாக, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், உள்ளூர் வணிகங்களை எளிதாக அணுகுதல்
- லாஜிஸ்டிக்கின் செயல்திறனை அதிகரித்தல்
- அதிகமான பொருள்கள் தளத்தில் இருக்கும்பட்சத்தில் அதை தெரிவு செய்வதில் நுகர்வோர்களுக்கான சுதந்திரம்
- தரவு தனியுரிமை மற்றும் இரகசியத்தன்மையை உறுதிசெய்தல்
- செயல்பாட்டுச் செலவைக் குறைத்தல்
2022 ஆம் ஆண்டு இந்த இணையதளத்தின் பரிசோதனை டில்லி, பெங்களூரு, போபால், ஷில்லாங், கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அனைத்துத் தரப்பினரிடமும் இதற்கு வரவேற்பு நன்கு இருந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் சுமார் 100 நகரங்களுக்கு விரிவாக்கப்பட்டது.
ONDCக்கான வரவேற்பு
இவ்வருடம் பிப்ரவரி மாதம் ONDC ஆனது மொத்தம் 7.1 மில்லியன் ஆர்டர்களை நிறைவேற்றியது. இது ஜனவரி மாதத்தில் 6.75 மில்லியனாக இருந்தது. இதில் 3.56 மில்லியன் (அல்லது 52.8%) மொபிலிட்டி தொடர்பான (ஆட்டோ, கார், பஸ் சேவைகள்) ஆர்டர்களும், 3.19 மில்லியன் (அல்லது 47.2%) மொபைலிட்டி அல்லாத ஆர்டர்களும் அடங்கும். தற்சமயம் 370,000 விற்பனையாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்கள் ONDC யைப் பயன்படுத்துகின்றனர். 800 க்கும் மேற்பட்ட நகரங்களில் ONDC மூலமாகப் பரிவர்த்தனைகள் நடந்திருக்கின்றன. கூடுதலாக, லக்னோ மற்றும் டெல்லியில் சாலையோர உணவு விற்பனையாளர்களையும் இணைப்பதற்கான முன்னோடித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்த முன்னோடித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நகரத்திலும் 500 சாலையோர உணவு விற்பனையாளர்கள் இந்தத் தளத்தில் சேர்க்கப்படுவார்கள். அதோடு கூடுதலாக விற்பனை செய்பவருக்கும் வாங்குபவர்களுக்கும் பயன்படும் வகையில் மேலும் பல செயலிகளும் இணைக்கப்படும் என இதன் ஆலோசனைக் குழு தெரிவித்திருக்கிறது.
அமேசான், ஃபிளிப்கார்ட் போன்றவை அவற்றின் மூலம் விற்கப்படும் பொருளின் விலையில் 30-40 சதவீதம் வரை கட்டணமாகப் பெறுகிறது. ஆனால், ONDC ஆனது 8-10 சதவீதம் மட்டுமே அதன் கட்டணமாகப் பெறுகிறது. எனவே இது சிறு, குறு மற்றும் நடுத்தர அளவில் தொழில் செய்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையக்கூடும்.
நீங்கள் தயாரிக்கும் பொருள்களையும், சேவைகளையும் ONDC தளம் மூலம் விற்பனை செய்ய முயலலாம்தானே? இதோ, அதன் இணையதள முகவரி https://ondc.org/ இதில் முறைப்படி, அதன் விதிமுறைகளுக்கு உட்பட்டு, பதிவு செய்தபின் உங்கள் பயணத்தை உத்வேகத்துடன் தொடருங்கள்!