ஒரு இடம் அல்லது வீடு வாங்கும் போது பல பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடும். இந்தியாவில் நில ஆவணத்தை சரிபார்ப்பது கடினமான செயலாகும். ஆவணங்களைப் பெறவும், சரிபார்க்கவும் ஒருவர் பல முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ரியல் எஸ்டேட் வாங்குவது தொடர்பான ஆவணங்களை சரிபார்க்க  இந்தியாவில் பொதுவான தரவுத்தளம் இல்லை. ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறு பெயர்களில் ஆவணங்களைத் தயாரிப்பதற்கு வெவ்வேறு வழிகளைக் கொண்டுள்ளன. இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து லேண்டீட் (Landeed) என்ற ஒரு ஸ்டார்ட் அப் இந்த செயல்களை விரைவாக முடிக்க வழிவகை செய்கிறது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற முன்னேறிய நாடுகளில் ரியல் எஸ்டேட் வாங்குவது, இந்தியாவுடன் ஒப்பிடும் போது, அதிகம் தொந்தரவு இல்லாதது. இந்தியாவில் உள்ள அனைத்து நீதிமன்ற வழக்குகளில் மூன்றில் இரண்டு பங்கு நிலத் தகராறுகளைப் பற்றியது ஆகும். இந்த ஸ்டார்ட் அப் என்ன செய்கிறது என்றால், மக்கள் தங்கள் சொத்து தொடர்பான பல்வேறு ஆவணங்களைப் பார்க்கவும், வழக்குகளைக் குறைக்கவும் உதவுகிறார்கள்.

பல்வேறு மாநில அரசுகளால் நிறுவப்பட்ட தளங்களை ஒன்றிணைக்கும் தளத்தை லேண்டீட் உருவாக்கியுள்ளது. இந்த ஸ்டார்ட்-அப் ஒவ்வொரு மாநிலத்திலும் பதிவு மற்றும் வருவாய் துறைகளுக்கு இடையே ஒரு பாலத்தை உருவாக்கியுள்ளது, மேலும் நீங்கள் ஒரு சொத்தின் விவரங்களை உள்ளிட்டு,  அனைத்து துறைகளில் இருந்து வரைபடங்கள் உட்பட தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் ஒரே நேரத்தில் எடுக்க முடிகிறது. இது ஒரே நேரத்தில் பல பிரச்சனைகளை தீர்க்கிறது.

என்னென்ன ஆவணங்கள்?

இந்தியாவில் உள்ள 20+ மாநிலங்களில் இருந்து 100க்கு அதிகமான சொத்து தொடர்பான ஆவணத்தையும் உங்களுக்கு வழங்குகிறது. நிலம், என்கம்பரன்ஸ் சான்றிதழ்கள், 7/12, RoR, பட்டா/சிட்டா மற்றும் பல ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்யலாம். இந்த ஸ்டார்ட் அப் கம்பெனி இதுவரையில் 10 லட்சம் பேருக்கு மேல் 50 லட்சத்திற்கும் அதிகமான ஆவணங்களை வழங்கியுள்ளது.

மொழிகள் என்று பார்த்தால் ஆங்கிலம், இந்தி, கன்னடம், மராத்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் கிடைக்கிறது. அரசாங்க சர்வர் செயலிழந்தாலும் உங்கள் ஆவணங்களைப் பெறலாம்.  ஆவணங்கள் தயாரானதும் இந்த ஸ்டார்ட் அப் கம்பெனி உங்களுக்குத் தெரிவிக்கும். அதிகாரப்பூர்வ அரசாங்க தரவுத்தளத்திலிருந்து சில நொடிகளில் சமீபத்திய ஆவணங்களைப் பெறலாம்.

லீகல் ஓப்பினியன்

பல சமயங்களில் டாக்குமெண்ட்களை வழக்கறிஞர்களிடம் கொடுத்து லீகல் ஓப்பினியன் வாங்க வேண்டியிருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் நாம் லீகல் ஓப்பினியன் பெற நாம் தேர்ந்தெடுத்த வழக்கறிஞர் தகுதியான நபர் தானா என்ற சந்தேகம் வரும். இந்த ஸ்டார்ட் அப் லீகல் ஓப்பினியன் வழங்கவும் செய்கிறார்கள். மூத்த வழக்கறிஞர்கள் சொத்து தொடர்பான ஆவணங்களை மதிப்பாய்வு செய்து, சொத்து பற்றிய கருத்தை உங்களுக்கு வழங்குவார்கள். ஒரு சொத்தை வாங்கும்போது, விற்கும்போது அல்லது அடமானம் வைக்கும்போது இது பயனுள்ளதாக இருக்கும்.

லேண்டீட் இலவசமா?

லேண்டீட் முதல் முறை பயனர்களுக்கு, தேடல் வரம்பு வரை இலவசம். அதன் பிறகு, நீங்கள் ஒரு ஆவணத்திற்கு இவ்வளவு பணம் என்று செலுத்த வேண்டியிருக்கும். பல ஆவணங்கள் தேவைப்பட்டால் ஒரு பேக்கேஜ்  வாங்கலாம். உபயோகிப்பாளர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு வரம்பற்ற தேடல்களைச் செய்ய முடியும்.

இந்த ஸ்டார்ட்-அப் அடுத்த இரண்டு மாதங்களில் இரண்டு நாடுகளில் இது போன்ற இணையதளத்தை கொண்டுவரவிருக்கிறது.மேலும் விபரங்களுக்கு இவர்களின் இணையதளத்தை சென்று பாருங்கள் www.landeed.com

Spread the lovely business news