உலக முதலீட்டாளர்களின் `பிதாமக’னான வாரன் பஃபெட் அவரது நிறுவனமான `பெர்க்ஷைர் ஹாத்வே’ 1999லிருந்து 2019வரை ஏற்பாடு செய்திருந்த பதினோரு பங்குதாரர்கள் கூட்டங்களில் முதலீடு சம்பந்தமாக பேசிய பல கருத்தியல்களை டாக்டர் கிறிஸ்டியன் கோஷ் (Dr. Christian Koch) அலசி ஆராய்ந்து பார்த்து எட்டு முக்கியமான கருத்தியல்களை வாரன் அடிக்கடி சொல்லியதாக `பிசினஸ் இன்சைடர்’ இணையதளத்தில் கட்டுரையொன்றை எழுதியிருக்கிறார். அவை என்னென்ன? எந்த ஆண்டு அவை குறித்துப் பேசியிருக்கிறார் என்பதைப் பார்ப்போம்.
- வாய்ப்பு வரும்போது முதலீடு செய்ய ’பணத்தை (cash)’ கைவசம் வைத்திருங்கள். சாமர்த்தியமாக முதலீடு செய்ய வேறு எதுவுமில்லையெனில் ’பணம்’ ஒரு இயல்பான தெரிவாக இருக்கும் (2003)
- கூட்டுவட்டி என்கிற `எட்டாவது அதிசயத்தை’ சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். (1999)
- `பணவீக்கம்’ என்பது `முதலீட்டாளர்களின் எதிரி’ (1999). ஈக்விட்டியில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களை விலைவாசி அதிகரிப்பு மோசடி செய்துவிடும் (2003). பணவீக்கத்துக்கு எதிரான மிகச் சிறந்த பாதுகாப்பு என்னவெனில் தனிநபரின் சம்பாதிக்கும் ஆற்றலாகும். இரண்டாவது மிகச் சிறந்த பாதுகாப்பு `சிறப்பான தொழிலொன்றை சொந்தமாக நடத்துவதாகும்’ (2007)
- `பஃபெட் இண்டிகேட்டர்’ என அறியப்படும் விகிதாச்சாரத்தில் கவனம் செலுத்த வேண்டும். இது பங்குச் சந்தை மூலதனத்துக்கும் (stock market capitalization) உள்நாட்டு மொத்த உற்பத்திக்குமான (GDP) விகிதாச்சாரம் ஆகும். எந்தவொரு தருணத்திலும் இது மிகச் சிறப்பான அளவீடாக இருக்கும். பங்குகள் அதிகமாக விலை மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறதா இல்லையா என்பதைத் தீர்மானிக்க இது முதலீட்டாளர்களும் உதவக்கூடும்.
- ஒரு நிறுவனத்தில் சிறிதளவு பங்குகள் வைத்திருந்தாலும் அந்த நிறுவனத்தின் மீது தனக்கும் உரிமையிருக்கிறது என்பதை மனதில் கொண்டு அந்நிறுவனத்தின் நீண்டகால போக்கின் மீது அக்கறை கொள்ள வேண்டும்.
- சுய ஒழுக்கம் மிகவும் முக்கியம். சரியான வாய்ப்பு வரும்வரை முதலீட்டாளர்கள் பொறுமை காக்க வேண்டும் (2003)
- உணர்ச்சிகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியமானதாகும். சந்தை ஏற்ற இறக்கம் பற்றி அரைகுறையான தகவல்களின் அடிப்படையில் தடாலடியாக முடிவு எடுப்பது நல்லதல்ல (2009).
- சந்தையில் ஏற்படக்கூடிய நெருக்கடியை (stampede) அவதானிக்க வேண்டும். ஓர் இடத்தில் நெருக்கடி ஏற்படும்போது அனைவரும் பயத்தால் மிரண்டு வெளியேறுவதற்காக `வாசலை’ நோக்கி ஓடுவது எந்த அளவுக்கு ரிஸ்க்கோ அது போல பங்குச் சந்தையில் ஏற்படும்போதும் கவனமாக இருக்க வேண்டுமென்று 2007 ஆம் ஆண்டு எச்சரித்திருக்கிறார்.
(ஆதாரம்: பிசினஸ் இன்சைடர், நவம்பர் 9, 2020)