மத்திய மாநில அரசுகள் பல நூற்றுக்கணக்கான மக்கள் நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளது. நம்மில் பலருக்கு அரசாங்கத்தின் திட்டங்கள் யாவை? அதில் யார் பயன் பெற முடியும்? என்பது தெரியாது. தெரிந்திருந்தாலும் அதன் பலன்களை எப்படி பெறுவது, அதற்கு எப்படி விண்ணப்பம் செய்வது? என்பது ஒரு கேள்விக்குறி. இவற்றை மனதில் வைத்து துவக்கப்பட்டதுதான் அக்தர்ஷக் (Haqdarshak) என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம்.
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு அரசாங்கத்தின் இலவச கியாஸ் கனெக்ஷன் திட்டம், கட்டுமான பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு கிடைக்கும் உதவிகள், தெருவோர கடைகள் வைத்திருப்பவர்களுக்கு கிடைக்கும் அரசாங்க உதவிகள், பென்ஷன் உதவிகள், மளிகை கடை வைத்திருப்பவர்களுக்கு கிடைக்கும் கடனுதவி திட்டங்கள், எம்.எஸ்.எம்.ஈ., கம்பெனிகளுக்கு கிடைக்கும் கடனுதவி திட்டங்கள் என, அரசாங்க திட்டங்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன.
பல ஊர்களில் இருப்பவர்களும் பயன்பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த ஸ்டார்ட் அப் – பின் கிளைகளை, படித்து வேலை இல்லாத பெண்களைக் கொண்டு அமைத்திருக்கிறார்கள். இதன் மூலம் அந்த பெண்கள் உள்ளூரிலேயே மாதம் 6000 முதல் 7000 ரூபாய் வரை சம்பாதிக்க வழி வகுக்கிறது. இந்த வகையில் சுமார் 5000 பேர் வேலை செய்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள்.
இந்த சேவைகளை செய்ய ஒரு சிறிய கட்டணத்தை வசூலிக்கிறார்கள். எந்தத் திட்டம் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று எடுத்துச் சொல்வது மட்டுமல்லாமல், அந்த திட்டத்திற்கு எப்படி விண்ணப்பம் செய்வது என்பதையும் சொல்லி தருகிறார்கள்.
இதுவரை மூன்று லட்சம் பேருக்கு அரசாங்கத்தின் திட்டங்களின் மூலம் சுமார் நூறு கோடி ரூபாய் வரை கிடைக்க வழி செய்திருக்கிறார்கள்.
இப்போது மாதம் 65,000 விண்ணப்பங்கள் வரை நிரப்பி அரசாங்கத்திற்கு அனுப்ப உதவுகிறார்கள். இவர்களிடம் மாதம் 2,00,000 விண்ணப்பங்கள் வரை புராசஸ் செய்யும் வசதிகள் இருக்கின்றன.
இப்போது இந்த ஸ்டார்ட் அப், மத்திய மற்றும் வடமாநிலங்களில்தான் அதிக அளவில் செயல்படுகிறது. எனினும் தென் மாநிலங்களில், குறிப்பாக தமிழ் நாட்டிலும் செயல்படுகிறது. இதன் கிளைகள், தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும் மேலும் விரிவடைய வேண்டும்.
இந்த நிறுவனம் பற்றி மேலும் விபரங்கள் அறிய – https://haqdarshak.com/ என்ற இணையதளத்திற்கு செல்லவும். எல்லா திட்டங்களை பற்றிய விபரங்களையும் கொடுத்துள்ளார்கள். மிகவும் பயனுள்ள தளம்.
இவர்கள் இந்தியாவின் பல பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுடன் இணைந்து செயலாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.