கட்டுரை ஆங்கில மூலம்: செந்தில்நாதன், நியூ ஜெர்சி
தமிழ் வடிவம்: சுப. மீனாட்சி சுந்தரம், ஹோசூர்
பெரும்பாலான தொழில்முனைவோர் தங்களின் ஸ்டார்ட் அப் கனவுகளை நனவாக்க பெரிய அளவில் பணம் முதலீடு செய்ய வேண்டும் அல்லது கடன் வாங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். என்னதான் நீங்கள் பெரும் பணக்காரராக இருந்தாலும் ஒரு தொழிலை தொடங்க சிறிய அளவில் முதலீடு செய்வதுதான் புத்திசாலித்தனம். தொடக்கத்தில் சேமிப்பதற்கும் செலவழிப்பதற்கும் பல வழிகள் உள்ளன. ஒரு வியாபாரத்தில், நிலையான (Fixed) செலவு மற்றும் மாறுபடும் (variable) செலவு என இரண்டு வகை செலவுகள் உள்ளன. மாறுபடும் செலவை குறைப்பது கடினம். எனவே, கட்டிட வாடகை, இயந்திரங்கள் வாங்குவது, போன்ற நிலையான செலவுகளை குறைப்பதற்கான வழிமுறைகளை தேட வேண்டும் .
தொழிற்சாலைக்கு அலுவலக இடத்தை வாடகைக்கோ குத்தகைக்கோ எடுப்பதற்கு பதிலாக ஒரு கேரேஜ் அல்லது உங்களது சொந்த வீடு / பெற்றோரின் வீடு போன்ற இடங்களை பயன்படுத்தலாம். முதல் ஒரு வருட காலத்திற்கு எந்த விதமான லீஸ் பதிவு செய்யவோ புதிதாக இயந்திரங்கள் வாங்கவோ பணத்தை செலவிட வேண்டாம். இயந்திரங்களை வாங்குவதை விட வாடகைக்கு எடுப்பது நல்லது. அதேபோல தொழிற்சாலையை நிர்மாணிப்பதை விட அதிக கெபாசிட்டி உள்ள தொழிற்சாலையின் பகுதியை வாடகைக்கு எடுப்பது செலவை குறைக்கும். உங்கள் கம்பெனிக்கு சாப்ட்வேர் வாங்குவதை விட, சப்ஸ்கிரிப்ஷன் மாடலில் (வருடத்துக்கு ஒரு தொகையை கட்டணமாக செலுத்தி) சாப்ட்வேர் வாங்குவது செலவை குறைக்கும். மைக்ரோசாஃப்ட், ஆப்பிள் போன்ற பல நிறுவனங்கள் அமெரிக்காவில் உள்ள சிறிய வீடுகளின் கேரேஜ்களில்தான் தொடங்கப்பட்டன என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
அமெரிக்காவில் உள்ள எச்பி நிறுவனம் ஒரு முறை ஆப்பிள் நிறுவனத்தின் ஐ பேடுக்கு போட்டியாக டச்பேட் என்னும் ஒரு புதிய தயாரிப்புக்கான திட்டத்தில் பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்தது. அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே அந்த திட்டம் தோல்வியடைந்தது. அவர்கள் மிகக்குறைவாகவே செலவழித்து சந்தையில் சோதித்திருக்கலாம்.அதற்கு பதிலாக, அவர்கள் அதிக அளவில் நம்பிக்கை வைத்து பெரிய அளவில் தோல்வி அடைந்தார்கள். இதில் இருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம், ஒருவேளை நீங்கள் தோல்வியடைந்தால், உங்களுடைய நஷ்டம் குறைவாக இருக்கும். பலர் தங்களது பொன்னான நேரத்தை இழப்பதன் மூலம் தங்களது வருவாயை இழக்கிறார்கள் என்பதை உணரவில்லை. இப்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வேலை மூலம் ஆண்டு ஒன்றுக்கு 3 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறீர்கள் என்றால் அந்த வேலையை விட்டுவிட்டு புதிய ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் நேரத்தைச் செலவிடுவதால் நீங்கள் மூன்று லட்சம் ரூபாய் வருவாயை இழக்கிறீர்கள் என்றுதானே அர்த்தம். இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை விட்டு விடுவதாக கற்பனை செய்து பாருங்கள். மேலும், உங்களது ஸ்டார்ட் அப் நிறுவனத்திலிருந்து முதல் ஆறு மாதத்துக்கு எந்தவிதமான பணப்புழக்கம் இல்லை என்றும் வைத்துக் கொள்வோம். உங்களது செலவை சமாளிப்பதற்கான சாத்தியமான வழிகளை ஆராய்ந்து பார்க்க வேண்டும். இப்போது இருக்கும் வேலையிலேயே இருந்து கொண்டு மாலை நேரத்திலும் அல்லது வார இறுதியிலும் உங்களது ஸ்டார்ட் அப் நிறுவனத்திற்காக கவனம் செலுத்தலாம்.
ஸ்டார்ட் அப் நிறுவனத்திற்கு பணம் பெறும் வழிகள்
இப்போது உங்கள் ஸ்டார்ட் அப் நிறுவனத்துக்கு பணம் பெறுவதற்கான வழிகளை பார்க்கலாம். உங்கள் சொந்த பணத்தை முதலீடு செய்வதாக இருந்தால் எந்தவொரு உத்தரவாதமும் தேவையில்லை. இது ஒரு எளிதான வழி. பொதுத்துறை அல்லது தனியார் வங்கியிடமிருந்து குறைந்த வட்டியில் கடன் வாங்குவது அடுத்து சிறந்த தேர்வாகும் . உங்கள் நிறுவனம் நன்றாக நடந்து கொண்டிருக்கும்போது கடனுக்கு வட்டி கட்டுவது பற்றி பெரிய கவலைகள் இருக்காது. கடன் வாங்கி முதலீடு செய்யும்போது அதைவிட அதிகம் வருமானத்தை வரவேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இல்லாவிடில் அது உங்களை நிதி நெருக்கடிக்கு ஆளாக்கிவிடும். நிதி தொடர்பான உங்களது ஆவணங்களை எல்லா நேரத்திலும் ஒழுங்காக வைத்திருங்கள். இது உங்களது வணிகத்தின் இன்றியமையாத ஒரு பகுதி. பங்குகளை விற்று தனியார் முதலீட்டாளர்களிடமிருந்து முதலீட்டை பெறுவது கடைசி தேர்வாக இருக்க வேண்டும். காரணம் பிற்காலத்தில் உங்கள் நிறுவனம் நன்றாக நடக்கும் சமயத்தில் ‘அடடா தெரியாமல் ஆரம்பத்திலேயே பங்குகளை விற்று விட்டோமே’ என்று வருத்தப்படுவீர்கள். உங்களது சொந்தப் பணத்தை பயன்படுத்தினாலும் சரி, கடன் வாங்கினாலும் சரி, உங்கள் முதலீட்டுக்கான வருவாயை கண்டுபிடிக்க மூலதனத்தின் சராசரி செலவை கணக்கிட வேண்டும்.
Sunk Cost எனப்படும் மீளா செலவுகளை கவனிக்க வேண்டும். உதாரணத்துக்கு பயன்பாட்டு செலவுகளும், மீண்டும் விற்பதன் மூலம் மீட்டெடுக்க முடியாத எல்லாவிதமான செலவுகளும் இதில் அடங்கும். இது மற்றுமொரு முறையான மாறாச்செலவு (நிலையான செலவு) வகையாகும். இதற்கு உதாரணமாக, உங்கள் அலுவலக பணியாளரின் டிரெயினிங் செலவுகள், உங்களுடைய கம்பெனிக்கு லைசென்ஸ் எடுக்க ஆகும் செலவுகள் ஆகியவற்றைக் கூறலாம்.
ஒரு வெற்றிகரமான தொழில்முனைவர் அல்லது மெண்டர் (mentor) உங்களது ஸ்டார்ட்- அப்
நிறுவனத்தை ஆரம்பிக்கும் வரை ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும். வாரம் அல்லது மாத அடிப்படையில் உங்களுக்கு வழிகாட்டுவதற்காக தங்கள் நேரத்தை சிறிது செலவிடுவதற்கு தயாராக இருக்கும் பல வழிகாட்டிகள் உள்ளனர். ஒரு துறையில் ஒரே எண்ணம் கொண்ட தொழில்முனைவர் அல்லது வழிகாட்டிகளை கண்டுபிடிக்க உங்களது உள்ளூர் பகுதிகளில் நடைபெறும் சிறிய சந்திப்புகள் (meetup.com), கூட்டங்கள், சங்கங்களை கண்டுபிடிக்க முயற்சிக்கவும். இம்மாதிரி கூட்டங்களில் கலந்து கொள்வதற்கு அதிகம் செலவாகாது.
நண்பர்கள், குடும்பத்தினர் உதவியை நாடுவது என்றால் பணத்தை கடன் வாங்குவது என்று மட்டுமல்ல, அவர்களது தனிப்பட்ட திறமை, நேரம் ஆலோசனை போன்றவைகூட ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் ஆரம்ப காலத்தில் ஏராளமான பணத்தை மிச்சப்படுத்தக் கூடும். ஆரம்ப காலத்தில் உதவி செய்தவர்களுக்கு, எதிர்காலத்தில் அவர்களிடம் பட்ட கடனை ( பணம் மட்டுமல்ல) திருப்பி செலுத்த மறந்து விடாதீர்கள்.
உங்களது முதலீடு பன்மடங்காகப் பெருக வாழ்த்துக்கள்.