அந்தக் காலத்திலிருந்து தமிழ் மணக்கும் ஒரு பெரிய குடும்பத்திலிருந்து மணக்க மணக்க காபி தருகிறார்கள் அதன் வாரிசுகள். இலங்கையில் இருந்து வெளிவரும் மிகவும் பிரபலமான நாளிதழ் ‘வீரகேசரி’. 1930ம் ஆண்டில் இதைத் தொடங்கியவர், சிவகங்கை மாவட்டம் ஆவணிப்பட்டியைச் சேர்ந்த பெ.பெரி.சுப்பிரமணியம் செட்டியார். நூற்றாண்டை நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த நாளிதழ், இன்றுவரை அதன் பழைமை மாறாமல், மெருகு குலையாமல் வெளிவந்து கொண்டிருக்கிறது. செய்திகளை சுடச்சுடக் கொடுத்த சுப்பிரமணியம் செட்டியாரின் மகன் சுப. சுந்தரகேசரி, பேரன் சு. சுப்ரமணியம், கொள்ளுப்பேரன் சுந்தர் சுப்ரமணியம் என வாரிசுகள் அனைவரும் சுடச்சுட நாம் அருந்தும் காபிக்கான தூள் உற்பத்தியில் முன்னணி வகிக்கின்றனர்.
காபித் தோட்டத் தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் அந்தக் குடும்பத்தின் வழித்தோன்றல்களின் வரிசையில் இணைந்திருக்கிறார், 25 வயதே நிரம்பிய சுந்தர்சுப்ரமணியம். தாத்தாவும் அப்பாவும் காபி உற்பத்தியைப் பெருக்கி, காபிக்கொட்டை வணிகத்தில் கொடி கட்டிப்பறந்தனர் என்றால், அதை வறுத்து அரைத்து முதல் ரக காப்பித்தூளாக ‘மிர்ராஸ்காபி’ (mirra’s) என்னும் பிராண்ட் பெயரில் விற்பனைக்குக் கொண்டுவந்து, ‘ஸ்டார்ட்அப்’ தொழிலதிபராக வெற்றி பெற்றிருக்கிறார் சுந்தர்.
இந்த நிறுவனத்தின் முதன்மை செயல்அலுவலராகப் (சி.இ.ஓ.) பொறுப்பேற்ற மிகக்குறைந்த காலகட்டத்திலேயே, ‘மிர்ராஸ்காபி’யை வெற்றிச் சிகரத்தை நோக்கிக் கொண்டுசெல்லும் முயற்சியில் துடிப்புடன் இருக்கும் சுந்தரிடம் பேசினோம்.
‘‘கூர்க் பகுதியில் விளையும் எங்கள் தோட்டத்துக் காபிக்கொட்டையை முன்பு காபி டே, நரசுஸ் போன்ற முன்னணி காபித்தூள் தயாரிப்பாளர்களுக்குத்தான் கொடுத்துவந்தோம். நான் நியூசிலாந்தில் பிசினஸ் படிச்சுட்டு வந்ததும் எங்க தொழிலிலேயே இறங்கினேன். இந்தத் தொழிலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல விரும்பினேன். காபித்தூள் தயாரிக்கிறவங்களுக்கு காபிக்கொட்டை விநியோகம் பண்றதைவிட, நாமே ஏன் காபித்தூளில் ஒரு புது பிராண்ட் உருவாக்கக் கூடாதுன்னு தோன்றியது. அப்போது உதயமானதுதான் ‘மிர்ராஸ்காபி’.
தென்னிந்தியர்களுக்கு மிகவும் பிடித்த ஃபில்டர் காபிக்கேற்ற சுவையிலும் தரத்திலும் காபித்தூளைத் தயாரித்து, ஸ்டார் ஹோட்டல்களுக்கு மொத்த விநியோகம் செய்ய ஆரம்பிச்சேன். சென்னை மற்றும் கோவையில் இருக்கும் 90 சதவிகித ஸ்டார் ஹோட்டல்களுக்கு இப்போது நாங்கதான் விநியோகம் செய்கிறோம். சில்லறை விற்பனையில் நாங்க அதிகம் கவனம் செலுத்தவில்லை. இப்போதைக்கு சில்லறை விற்பனை கடை கோவையில் மட்டும் இருக்கிறது. ஒருமுறை எங்கள் தூளை வாங்கி, அதில் டிகாஷன் தயாரித்து காபி போட்டு அருந்தியவர்கள், அடுத்த முறையும் எங்கள் காபித்தூளையே தேடிவருவது ஒன்றே எங்கள் தரத்துக்கான சான்று. முதன்முதலில் வாங்க வைப்பது மட்டும்தான் எங்கள் வேலை. வாங்கிவிட்டார்கள் என்றால் அப்புறம் அவர்கள் வேறு தூளுக்குப் போகவே மாட்டார்கள்’’ என்று அழுத்தமாகக் கூறுகிறார் சுந்தர்.
இந்த ஸ்டார்ட் அப் தொழிலைத் துவங்கிய ஒரு வருடத்திலேயே விற்பனையில் ஒரு குறிப்பிட்ட இலக்கைத் தொட்டு சாதனை படைத்திருக்கிறார் சுந்தர். ஐடிசி கிராண்ட் சோழா, தாஜ், கிரவுன் ப்ளாஸா என இவருடைய ‘மிர்ராஸ்’ பிராண்ட் காபித்தூளை உபயோகிக்கும் நட்சத்திர ஹோட்டல்கள் ஏராளம். ‘‘எங்கள் பலமே தரம்தான். வாடிக்கையாளர்களுக்குப் பிடித்த அந்தத் தரத்தைப் பராமரிக்கவேண்டும் என்பதற்காக ஒரே தோட்டத்து காபிக் கொட்டையை வறுத்து, அரைத்து விநியோகிக்கிறோம். ஏனெனில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக எங்கள் தாத்தாவும் அப்பாவும் கட்டிக் காத்து வந்த பெயரைக் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்.
‘நஷ்டம் ஆனால் கூட பரவாயில்லை. நமக்கு இருக்கும் நல்ல பெயர் கெட்டுவிடக் கூடாது’ என்பதுதான் என் தந்தை எனக்கு அடிக்கடி சொல்லும் தாரக மந்திரம். பணம் நஷ்டமானால் கூட சம்பாதித்துக்கொள்ளலாம். பெயர் கெட்டுப்போய்விட்டால் சம்பாதிக்க முடியாது என்று அப்பா சொல்வார்கள். என் தந்தை தொழிலில் எனக்கு பக்கபலமாக இருப்பதுடன் சின்னச் சின்ன விஷயங்களில்கூட வழிகாட்டியாக இருக்கிறார். அம்மா வள்ளிமயில் எங்கள் நிறுவனத்தின் நிதித்துறை இயக்குநர். அவர்தான் நிதி சம்பந்தமான விஷயங்களில் எனக்கு வழிகாட்டி.
பெரிய ஹோட்டல்களுக்கு மற்ற காபி தயாரிப்பாளர்கள் கொடுப்பதைவிட நாங்கள் கொடுக்கும் விலைகுறைவு. ஆனால் காபியின் சுவை மிகநன்றாக இருக்கும். அதனால் போட்டியாளர்கள் பற்றிய கவலையோ பதற்றமோ எப்போதுமே எனக்கு இருந்ததில்லை’’ என்று சிரித்தபடி சொல்கிறார் இந்த சின்ன முதலாளி. மும்பை மற்றும் ஹைதராபாத்தில் கிளை அலுவலகம் தொடங்கி, இவர்களின் தொழிலை விரிவுபடுத்துவதுதான் ‘மிர்ராஸ்காபி’யின் அடுத்த கட்ட இலக்கு..
திக்கெட்டும் பரவட்டும் உங்கள் காபியின் மணமும் புகழும்!
வாழ்த்துக்கள் சுந்தர்!இவர்களின்இணையதளமுகவரி : www.mirras.in