இந்தியாவிற்கு அடுத்தபடியாக இந்திய மக்கள் அதிகம் உள்ளது ஐக்கிய அரபு நாடுகள் தான். அங்கிருக்கும் இந்திய மக்களை குறிவைத்து எப்படி விற்பனை செய்வது என்று பலரும் ரூம் போட்டு யோசித்துக் கொண்டிருக்கும் போது, அமேசான் இந்தியா ஐக்கிய அரபு நாடுகளில் இருக்கும் இந்திய மக்களுக்கு ஆன்லைன் மூலமாகவே இந்தியாவிலிருந்து உங்கள் பொருட்களை விற்கும் வசதியை கொண்டுவந்துள்ளது. அப்படி நீங்கள் விற்கும் பொருட்கள் ஏற்றுமதி என்ற கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
ஐக்கிய அரபு நாடுகளில் எதற்கு நல்ல வாய்ப்புகள் இருக்கிறது என்று பார்க்கும் போது தங்க ஆபரணங்கள், வைர ஆபரணங்கள், ஆடைகள், அழகு சாதனப் பொருட்கள், மளிகை சாமான்கள் ஆகியவற்றிர்க்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.
ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் அமேசான் யுஏஇ அங்கு முன்பு பிரபலமாக இருந்த சூக் (Souk) என்ற கம்பெனியை 2017 ஆம் வருடம் கையகப்படுத்தியுள்ளது. இதனால் பலலட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் அமேசான் யூஏஇ க்கு அப்படியே மாறி இருந்தார்கள்.
வெளிநாடுகளில் வியாபாரம் மூலமாக அமேசான் இந்தியா தற்போது வருடத்திற்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு செய்து வருகிறது. இதை 35 ஆயிரம் கோடி ரூபாயாக கூட்டுவதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது.
ஐக்கிய அரபு நாடுகளில் இருக்கும் மக்களில் 4 சதவீத மக்கள் ஆன்லைன் மூலமாக வாங்குவதற்கு ஆர்வமாக இருக்கின்றனர். அங்கு 20 லட்சம் இந்தியர்கள் இருக்கிறார்கள். இது ஐக்கிய அரபு நாடுகளின் மொத்த மக்கள் தொகையில் 27 சதவீதம் ஆகும். கடந்த வருடம் ஐக்கிய அரபு நாடுகளுக்கு மட்டும் 31 பில்லியன் டாலர் அளவிற்கு, அதாவது 2 லட்சத்து 17 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி நடைபெற்றிருக்கிறது.
தற்போது அமேசான் இந்தியா இந்தியாவிலிருந்து அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு தங்கள் பொருட்களை விற்கலாம் என்று அனுமதி அளித்திருக்கிறது. இனி இதில் ஐக்கிய அரபு நாடுகளும் சேரும்.
இந்திய ஆடைகள் அங்கு இந்தியர்களாலும், அரபு நாட்டு மக்களாலும் விரும்பி வாங்கப் படுவதால் திருப்பூர் போன்ற ஊர்களில் இருக்கும் கம்பெனிகளுக்கு ஒரு பெரிய வாய்ப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.