2011 ஆம் ஆண்டில், இந்தியாவில் டியோட்ரண்ட் சந்தை இந்துஸ்தான் யுனிலீவரின் ஆக்ஸ் , பார்க் அவென்யூ மற்றும் நிவியா போன்ற நிறுவனங்களின் தயாரிப்புகள் சந்தையை பெருமளவில் கைப்பற்றியிருந்தன.
ஆனால் திடீரென சந்தைக்குள் நுழைந்து வெறும் இரண்டே வருடங்களில்
FOGG – ஃபோக் என்ற ஒரு புதிய பிராண்டு சந்தையில் முதலிடத்தை இடத்தை பெற்றது எப்படி ? இதற்கு காரணம் வாடிக்கையாளர்களைப் பற்றிய ஒரு சிறிய நுண்ணறிவு தான்.
ஃபோக் -FOGG
1986ல் முறையான ஒரு பெரிய கல்வி படிப்பு இல்லாமல் தர்ஷன் பட்டேல் தனது குடும்ப வணிகமான பராஸ் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தை பொறுப்பேற்று நடத்தத் தொடங்கினார்.
மூவ், ரிங் கார்ட், செட் வெட், டெர்மி கூல் ,டிகோல்ட் போன்ற சில சிறந்த நுகர்வோர் பிராண்டுகளை உருவாக்கி, அவை அனைத்தும் நம் நாட்டில், அனைவரும் வீட்டில், அன்றாடம் உபயோகப்படுத்தும் ஒரு பிராண்டாக மாறியது. 2010 ல் பட்டேலிடமிருந்து பராஸ் பார்மாவை 43 மில்லியன் டாலருக்கு ரெக்கிட் பென்கிசர் குழுமம் வாங்கியது.
சரி,கைக்கு பெரிய முதலீடு வந்துவிட்டது என்று வினி காஸ்மெட்டிக்ஸ் என ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தார். அப்போது டியோட்ரண்டுகள் இளைஞர்கள் மற்றும் இளைஞர்களிடையே மிகவும் பிரபலமாக இருந்தன. இந்தியாவில் நிறைய பகுதிகள் வெப்பமாகவும் ஈரப்பதமாகவும் இருப்பதால், டியோட்ரண்ட்கள், ஆண்கள் பயன்படுத்தும் இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது என்றே சொல்லலாம். தயாரிப்பின் மேம்பாட்டிலும் புதிய நிறுவனத்திற்கான விநியோகஸ்தர் வலையமைப்பை உருவாக்குவதிலும் பட்டேல் நான்காண்டுகள் செலவிட்டார்.
சந்தையில் அதிகமான மார்க்கெட் ஷேரை வைத்திருந்தது இந்துஸ்தான் யுனிலீவர்
நிறுவனத்தின் ஆக்ஸ் பிராண்டு தான். அதைத் தொடர்ந்து பார்க் அவென்யூ மற்றும் உதிரியாக இன்னும் ஏழெட்டு பிராண்டுகள் சந்தையில் இருந்தன. 2010ல் – பட்டேல் நுகர்வோர்களைப் பற்றிய ஆராய்ச்சியில் நேரடியாக ஈடுபட்டார். எல்லோரும் குறிப்பிட்ட ஒரே விஷயம் என்னவென்றால் நுகர்வோர்களுக்கு தெரிந்த எல்லா டியோடரண்ட் பிராண்டுகளும் வெகு சீக்கிரம் தீர்ந்து போய் விடுகின்றன. இந்த குறிப்பிட்ட புகார் திரு பட்டேல் தனது தயாரிப்புக்கான மிகப்பெரிய யுஎஸ்பியை –USP, UNIQUE SELLING PROPOSITION தனிப்பட்ட விற்பனை முன்மொழிவு )உருவாக்க உதவியது: அதாவது GAS – வாயு இல்லாத ஒரு டியோடரண்ட் ! வினி காஸ்மெட்டிக்ஸ் 2010 ஆம் ஆண்டில் 18+, ஜின்ஜோலா கூலிங் டால்கம் பவுடர் ஆகியவற்றை வெளியிட்டது . ஆனால் அதன் இரண்டாவது டியோடரன்ட் தயாரிப்பான ஃபோக் தான் சந்தையில் சக்கைபோடு போட்டது.
பட்டேல் ஏரோசோல் தேவையில்லாத டியோட்ரண்டிற்கான ஒரு பம்பை உருவாக்கி, திரவத்தை மட்டுமே வெளியேறும்படி செய்தார். இது திரவத்தை எளிதில் ஆவியாக்குவதைத் தடுக்கிறது, அதன் விரயத்தை குறைத்து, ஒரு டியோடரண்ட் பாட்டிலை நீண்ட காலம் நீடிக்கச் செய்கிறது. தங்கள் தயாரிப்பில் எந்தவிதமான வாயும் இல்லை ,மேலும் போட்டியாளர்களின் டியோடரண்ட் களைப் போலன்றி டியோடரண்ட் மட்டுமே இருப்பதை குறிப்பிட்டதோடு மற்ற போட்டியாளர்களை காட்டிலும் சிறிய பாட்டில் அளவுகளில் தயாரிப்பு தொடங்கப்பட்டது. 2011ல் தனது நிறுவனம் வெளியிட்ட விளம்பரங்களில் போட்டியாளர்களின் தயாரிப்புகள் குறைந்த அளவில் திரவத்தையும் அதிக அளவில் வாயுவை யும் கொண்டிருப்பதனால் தான் நீண்ட காலத்திற்கு உபயோகிக்க முடியவில்லை என்ற செய்தி சந்தைக்கு தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் தனது தயாரிப்பான ஃபோக், 800 தடவை ஸ்பிரே அடித்துக் கொள்ளலாம் என்ற வாக்குறுதி அளித்தார் பட்டேல்.
விளம்பரத்தின் டேக் லைன் , Bina gas wala spray, GAS இல்லாத டியோடரன்ட் ஆகும். இந்த கருத்தினால் நுகர்வோர்கள், தாங்கள் செலவழிக்கும் பணத்திற்கு அதிக மதிப்பு கிடைப்பதாக கருதினர் . முதல் ஆண்டிலேயே 100 கோடிக்கும் அதிகமான விற்பனையை பெற்று சந்தையில் 10% வரை கைப்பற்றியது. வெறும் இரண்டே ஆண்டுகளில் ஆக்ஸ் பிராண்டை குப்புறத் தள்ளி விட்டு இந்திய சந்தையில் தலைமை இடத்தைப் பிடித்து, மார்க்கெட் லீடராக ஆனது. 2015 – இந்திய தியோ சந்தையில் ஃபோக்கின் ஆதிக்கத்தை குறிக்கும் வகையில் பிராண்டின் மறக்கமுடியாத விளம்பரமாக “ஃபோக் சல் ரஹா ஹை (Fogg Chal Raha Hai) ” -“ஃபோக் போய்க்கிட்டே இருக்கு” தொடங்கப்பட்டது . CAGR சந்தையின் CAGR வளர்ச்சி12 % என்ற அளவில் இருக்கும்போது , “ஃபோக் பிராண்டின் வளர்ச்சி 20% ஆக இருந்தது . புகழ்பெற்ற நீல்சன் நிறுவனம் தனது அறிக்கையில் ஃபோக் ரூ .2,000 கோடி டியோடரண்ட் சந்தையில் 12 சதவீத பங்கைக் கொண்டு முன்னணியில் உள்ளது என்று 2014ல் கூறியுள்ளது. படிப்படியாக ஆக்ஸ் பிராண்ட் மூன்றாவது, நான்காவது இடங்களுக்கு தள்ளப்பட்டது. வாடிக்கையாளர்களின் தேவைகளையும் உணர்வுகளையும் நன்கு புரிந்து கொண்டதால் பட்டேல் இன்னும் கொஞ்ச காலத்திற்கு இந்தியாவின் டியோடரண்ட் மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்வார் என்பதில் சந்தேகமில்லை.
ஒரு 100 கிராம் பாட்டில் ஃபோக் விலை 180 ரூபாய், சந்தையில் உள்ள மற்ற தயாரிப்புகளை விட 7 முதல் 10 சதவீதம் வரை அதிகம், ஆனால் ஒரு பேக்கிற்கு ஸ்ப்ரேக்களின் எண்ணிக்கை போட்டியாளர்களின் தயாரிப்பு விட கணிசமாக அதிகமாக இருக்கும். வியாபாரம் சிறியதாக இருந்தாலும் சரி,பெரியதாக இருந்தாலும் சரி வாடிக்கையாளர் தான் முக்கியமானவர்,அவரது தேவைகள் தான் நமது தயாரிப்புகளாக உருவாக வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு தொழில்முனைவோருக்கும், நிறுவனங்களுக்கும் தேவை என்பதை தர்ஷன் பட்டேல் நமக்கு உணர்த்துகிறார் .
அது சரி FOGG என்ற சொல்லின் விரிவாக்கம் என்ன தெரியுமா
Friend of Good Guys / Girls!