இந்திய அரசின் உணவு பதப்படுத்தும் தொழில்களின் அமைச்சகம் வெளியிட்ட உலக உணவு இந்தியா 2017 மாநாட்டின் அறிக்கையின் புள்ளி விபரங்களை இங்கு காண்பது மிகவும் முக்கியமானது. நவீன அறுவடை முறைகள் மற்றும் குளிர்பதன வசதிகள் உள்கட்டமைப்பு போதுமானதாக இல்லாததால், ஆண்டுதோறும் பழங்கள் மற்றும் காய்கறிகள் 4.6% முதல் 15.9% வரை வீணடிக்கப்படுவதை நாம் காணமுடிகின்றது.
இது போன்ற சூழ்நிலையில் பழங்கள் மற்றும் காய்கறிகளின் விரயத்தை தவிர்த்து பயன்பாட்டு அளவை 2% ஆக கூட்டமுடியும். இதற்கு போதுமான உள்கட்டமைப்பு (குளிர் பதன வசதிகள் மற்றும் செயலாக்கங்கள்), பதப்படுத்தப்பட்ட உணவு பேக்கேஜிங்கிற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, பண்ணைப் பாதுகாப்பு முறைகளில் புதுமையானது மற்றும் திறன் மேம்பாடு உள்ளிட்ட முயற்சிகளை சமயோசிதமாக உபயோகப்படுத்துவது மிகவும் அவசியம். இதற்குரிய முயற்சிகளில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
இந்தியாவின் இருப்பிடம் ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஜப்பான், சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா கொரியா ஆகியவற்றுடன் ஏற்றுமதி இணைப்பை அதிகரிக்க தனித்துவமான நன்மையை வழங்குகிறது.
இவ்வளவு வாய்ப்புகள் இருக்கும் பட்சத்தில் காய்கறிகளை வீணாக்காமல் அதை பதப்படுத்தினால் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் தொழிலாக அமைக்கலாமே. மேற்கூறிய புள்ளி விபரங்கள் அடிப்படையில் உருவாகும் மேலாண்மைகளை ஒரு வடிவ வரைபடம் மூலம் காணலாம். இதில் குறிப்பிட்டுள்ளபடி தேவையான வளங்கள் நான்கு பகுதிகளாகும்.
விநியோக மதிப்பு முறைகளின் மேலாண்மை (Supply and Value Chain Management) முதல்படியாக அமைகின்றது. இதில் உற்பத்தி செய்ய ஏதுவாக மூலப்பொருட்களை வாங்குவது எவ்வளவு முக்கியமோ அந்த அளவு உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை அதிவிரைவில் விற்பனை செய்வதும் அவசியம். நேரடி கொள்முதல் மற்றும் தொழில்நுட்பங்கள் செறிந்த மின்வணிகம் (வலைத்தளம்/செயலி) சார்ந்த பயன்பாடுகள் மிகவும் அவசியமாகின்றது. உற்பத்தித்தளம் தொலைவில் இருந்தாலும் மின்வணிகம் (ecommerce) மூலம் வெவ்வேறு இடங்களில் உள்ள நுகர்வோர்களை சரக்கு போக்குவரத்து மூலம் எளிதாகச் சென்றடைகின்றது. இதற்கு உதாரணமாக https://www.chettinadsnacksonline.com/collections/vathal/products/collection-of-dried-vegetables கொள்ளலாம். இந்த வலைத்தளத்தில் பல்வேறு வத்தல் வகைகளை மின்வணிகம் மூலம் பெறலாம். உற்பத்தி பொருட்களை கிராமத்திலிருந்து நகரத்திற்கும் வெளிநாடுகளுக்கும் இம்முறையில் எடுத்துச் செல்வது மிகவும் அவசியம். இதனால் கிராமப்புறம் சார்ந்த தொழில்முனைவோர்களை, முக்கியமாக மகளிர்களின் தொழில் ஈடுபாட்டை மேம்படுத்த உதவியாக இருக்கும்.
உற்பத்தி மேலாண்மையில் அரசாங்க அறிவுறுத்தல்கள் சார்ந்த உணவு பாதுகாப்பு முறைகளையும் சுகாதாரம் சார்ந்த செயல்முறைகளையும் ஒருங்கிணைக்க வேண்டும். இதனால் நுகர்வோர்களுக்கு சுகாதாரமான பொருட்கள் தரமான முறையில் கிடைக்க வழிசெய்கின்றது. உலர்த்தப்பட்ட காய்கறி,பழ வகைகளை தரமான முறையில் வணிகம் செய்ய http://apeda.gov.in/apedawebsite வலைத்தளத்தில் விவரம் பெறலாம். இந்த அமைப்பு மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் ஒரு அங்கமாகும். மேலும் உணவுப்பொருட்கள் சம்மந்தமான தர உத்தரவாதம் பெற http://fssai.gov.in வலைத்தளம் மூலம் அணுக வேண்டியது.
நிதி மற்றும் வணிக மேலாண்மை மூலம் சிறிய வணிகத்தை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி செய்ய ஏதுவான முறைகளை கண்டறியலாம். நுகர்வோர்களின் விருப்பங்கள் மாறும் சமயத்திலும் தொழில் செய்வதில் போட்டியாளர்கள் அதிகரிக்கும் சூழ்நிலையிலும் புதுயுத்திகள் மற்றும் புது தொழில்நுட்பங்களை உபயோகப்படுத்துவது இன்றியமையாததாகும். இதற்கு உதாரணமாக ஜிம்பாப்வே நாட்டில் ஒரு சிறிய கிராமத்தில் இருக்கும் மகளிர்களை ஊக்குவிக்க ஐக்கிய நாடுகள் வளர்ச்சித்திட்ட அமைப்பின் (UNDP) திட்டத்தை குறிப்பிட விரும்புகின்றேன். காய்கறி வகைகளை உலர்த்த சூரிய ஒளி உலர்ப்பான் அறிமுகப்படுத்தப்பட்டது. மேற்கொண்டு விபரங்களை https://www.zw.undp.org/content/zimbabwe/en/home/stories/dried-and-delicious–earning-an-income-from-dried-vegetables-at-.html வலைத்தளம் மூலம் அறியலாம்.
உலகளவில் இந்தியா பதப்படுத்தப்பட்ட உலர்த்தப்பட்ட காய்கறிகள் ஏற்றுமதியில் முண்ணனி வகிக்கின்றது. 2018-19 ஆண்டில் 2,48,121 டன் ஏற்றுமதி மூலம் இந்திய ரூ. 2474 கோடி வணிகம் செய்யப்பட்டது (http://apeda.gov.in/apedawebsite/SubHead_Products/Dried_and_Preserved_Vegetables.htm).
இவ்வளவு முன்னேற்றம் அடைந்த தொழில் கிராமப்புறங்களை சென்றடையச் செய்வது மிகவும் தேவையாக உள்ளது. கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையாக இருந்து சமூக வளர்ச்சி ஏற்பட இது ஒரு வற்றாத வணிகமாக அமைய வேண்டும்.
- 100% சுயதொழில்
- 100% வீட்டுத்தயாரிப்பு
- 100% மகளிர் மேம்பாடு
- 100% கிராமப்புற வளர்ச்சி
- 100% விவசாய உற்பத்தி பொருட்கள் பாதுகாப்பு