100 ஆண்டுகளைக் கடந்த பூனா பொறியியல் கல்லூரி, 160 ஆண்டுகளை கடந்த சசூன் மருத்துவமனைக்காக ‘நார்ட் டிரைவ் சிஸ்டம்’ நிறுவனத்தின் இந்திய தொழிற்சாலையின் தொழில்நுட்ப உதவியுடன் மோட்டார் பொருத்தப்பட்ட ஸ்ட்ரெச்சர் படுக்கையை சமீபத்தில் வடிவமைத்து தயாரித்துள்ளது.
ஸ்ட்ரெச்சரை தள்ளுவதற்கான ஆட்களின் எண்ணிக்கையை குறைத்து, நேரத்தை மிச்சப்படுத்துவதற்கான முயற்சியே இந்த மோட்டார் பொருத்தப்பட்ட தள்ளுவண்டி. இந்த ஸ்ட்ரெச்சரை பற்றிய விவரங்களை தெரிந்துகொள்வதற்காக ஜெர்மனியை தலைமை அலுவலகமாக கொண்ட, நார்ட் டிரைவ் சிஸ்டம் நிறுவனத்தின் இந்திய தொழிற்சாலைக்கான நிர்வாக இயக்குனர் திரு. பழனியப்பன் முத்துசேகர் அவர்களை நாம் அலைபேசியில் தொடர்புகொண்ட கலந்துரையாடலின் விவரங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் 160 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது சசூன் மருத்துவமனை. கொரோனாகாலத்தில் நோயாளிகளை ஒரு கட்டிடத்திலிருந்து மற்றொரு கட்டிடத்துக்கு, வார்டுக்கு மாற்றும் பணியில் ஈடுபட்டும் செவிலியர்கள், மருத்துவர்கள், உதவியாளர்கள் ஆகியோரின் பாதுகாப்புக்கு பயன்படுத்தப்படும் PPE எனப்படும் பாதுகாப்பு கவச உடைக்கு, ஒரு நாளைக்கு 4 முதல் 5 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. இதனால் மருத்துவமனைக் கட்டணம் அதிகரிக்கிறது. நோயாளிகள், மருத்துவமனை ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, செலவையும் குறைப்பதற்கான வழிகளைப் பற்றி சிந்தித்தபோது உருவான படைப்புதான், இந்த மோட்டார் பொருத்தப்பட்ட ஸ்ட்ரெச்சர் படுக்கை. இந்த ஸ்ட்ரெச்சரில் நோயாளியைப் படுக்க வைத்து ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குக் கொண்டு செல்ல ஒரு உதவியாளர் மட்டும் போதும். பாதுகாப்பு கருவிகளுடன் நோயாளிகளை எளிதாக இடம் மாற்றலாம். சாதாரணமாக ஒரு ஸ்ட்ரெச்சரை தள்ளுவதற்கு 2 அல்லது 3 உதவியாளர்கள் தேவை. அவர்கள் அனைவரும் PPE உடை அணிவது கட்டாயம். இந்த மோட்டாரைஸ்ட் ஸ்ட்ரெச்சரில் நோயாளியைக் கொண்டு செல்ல ஒரு உதவியாளர் மட்டும் போதும் என்பதால், கவச உடைக்கான செலவு மிச்சமாகிறது.
நோயாளிகளை, அவர்களுக்கான ஆக்சிஜன் சிலிண்டர், மருத்துவக் கருவிகளுடன் மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே எளிதாக இடம் மாற்றவும், லிப்ட்டில் எளிதாக கொண்டு செல்லும் வகையிலும் இந்த ஸ்ட்ரெச்சர் வடிவமைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் இப்போது பயன்பாட்டில் இருக்கும் ஸ்ட்ரெச்சர் போன்றுதான் இந்த ஸ்ட்ரெச்சரும் வடிவமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, கியர்பாக்சுடன் இணைந்த மோட்டாரும் அதை இயக்குவதற்கு 4 பேட்டரிகளும் இணைக்கப்பட்டுள்ளன. ஸ்ட்ரெச்சரை முன்னோக்கி செலுத்தவும், பின்னுக்குத் தள்ளவும் கியர் பாக்ஸ் பயன்படுகிறது. வேகக் கட்டுப்பாடு கருவியும் ஸ்ட்ரெச்சரை இயக்குவதற்கான சுவிட்சும் பொருத்தப்பட்டுள்ளன.
PPE கவச உடைக்கான செலவு, நிச்சயமாக நோயாளிகளிடம் வசூலிக்கப்படுகிறது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்த செலவைக் குறைப்பதற்காக, லாப நோக்கம் இல்லாமல், நார்ட் டிரைவ் சிஸ்டம் நிறுவனம் இந்த ஸ்ட்ரெச்சரை வடிவமைத்துள்ளது.
இந்த ஸ்ட்ரெச்சரைப் பயன்படுத்துவதால் செலவு குறைவது மட்டுமின்றி, தொற்று பரவாமலும் தடுக்கிறது. இந்த ஸ்ட்ரெச்சரை வணிக நோக்கத்தில் தயாரிக்க முன்வரும் தொழில்முனைவோர்களுக்கு, எந்த மாதிரியான மூலப்பொருட்கள், தொழில்நுட்பம், பேட்டரி, மோட்டார் தேவைப்படும் என்பதையும் அதற்கான வரைபடங்களையும், எவ்வித வணிக நோக்கமும் இல்லாமல் இலவசமாக வழங்க நார்ட் நிறுவனம் தயாராக இருக்கிறது. கரோனா தொற்று காலத்தில் கிடைத்தவரை லாபம் என்று எண்ணாமல் சமுதாயத்துக்கு சேவை செய்யும் மனத்துடன் இந்ததொழில்நுட்பத்தை தொழில் முனைவோருக்கு வழங்கத் தயாராக இருக்கும் திரு. முத்துசேகர் அவர்களுக்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்து உரையாடலை முடித்துக் கொண்டோம்.
தொடர்புக்கு
திரு. பழனியப்பன்முத்துசேகர்
9765408530