வெங்கடேஷ் ஐயர் எழுதிய மை ஜர்னி வித் வடா பாவ், உறங்க விடாமல் செய்யும் கனவு என ஆரம்பிக்கும் இப்புத்தகம் 21 மாநிலங்களில் 100 நகரங்களில் 350 வடா பாவ் சங்கிலி கடைகள் தொடங்கிய கதைதான். மிகவும் இயல்பான நகைச்சுவை பாணியில் எழுதப்பட்டுள்ள இப்புத்தகம் தமிழ்நாட்டிலிருந்து மும்பைக்கு குடியேறிய வெங்கடேஷ் ஐயர் தனது வணிகத்தில் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் சங்கடங்களை விவரிக்கிறது.
குறிப்பாக மும்பையில் வடா பாவ் மிகவும் பிரபலமானது. வீதிக்கு வீதி சைக்கிளிலும் தள்ளு வண்டிகளிலும் விற்கப்படும் இந்த சிற்றுண்டியை ஏழை, பணக்காரர் என அனைவரும் விரும்பி உண்ணுவார்கள். உட்கார்ந்து சாப்பிடுவதற்கு நேரமில்லாமல் பரபரப்பாக ஓடிக்கொடிருக்கும் மும்பைவாசிகள் ஒரு கையில் வடாபாவ் பிடித்து சாப்பிட்டுக் கொண்டே தங்களின் செயல்பாடுகளை தொடர்வார்கள். நிற்க நேரமில்லாமல் துரிதமாக ஓடிக் கொண்டிருப்பவர்களுக்கு ஏற்ற ஒரு துரித உணவு வடாபாவ் . இன்று மும்பையில் மட்டுமல்லாமல் எல்லா முக்கிய நகரங்களிலும் வெங்கடேஷின் வடா பாவ் கொடிகட்டிப் பறக்கின்றது.
வடா பாவ் எப்படி இருக்க வேண்டும், என்ன மாதிரியான சுவை கொண்டிருக்க வேண்டும் என்பதைப் பற்றி பல்வேறு கடைகளில் சுவைத்துப் பார்த்து அதில் உள்ள முக்கியமான மூன்று அம்சங்களை தீர்மானித்ததிலிருந்து ஒரு தொழில்முனைவோரின் வாழ்க்கை ஆரம்பிக்கிறது. எந்த ஒரு உணவிற்கும் முக்கியமான அம்சம் சுவைதான் என்றாலும் வடா பாவ்வில் இருக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் Hot, Spicy, Hygienic . சூடு, காரம், சுகாதாரம் இவை மூன்றும் இருந்தால் வடாபாவ் சந்தையில் கண்டிப்பாக நல்ல வரவேற்பைப் பெறும் என்பதை கண்டறிந்தார்.
வேடிக்கைகள், கனவுகள், நம்பிக்கை, நகைச்சுவை, ஆத்திரம், கோபம், வருத்தம் என பலவற்றையும் சந்தித்த வெங்கடேஷ் தனது வடா பாவ் பயணத்தில் தான் சந்தித்த வித்தியாசமான மனிதர்களையும் அவருக்கு உதவி செய்தவர்களையும் குறிப்பிட்டிருக்கிறார். தனது முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் போல் வடா பாவ்- வடா பாவ் என்று அனுதினமும் சிந்தனை செய்ததன் விளைவுதான் இந்த வெற்றிகரமான வடாபாவ் சங்கிலி கடைகள்.
நிதிநிறுவன சேவையில் அதிகாரியாக இருந்த வெங்கடேஷ், வடா பாவ் தயாரிப்பது எப்படி என்று எதுவுமே தெரியாமல், ஒத்த கருத்தும் நம்பிக்கையும் கொண்ட நண்பர்களுடன் வடபாவ் நிறுவனத்தை ஆரம்பிக்க நினைத்த போது அவரது நண்பர் சொன்னது “ஒரு இந்தியர் எப்போதும் இந்திய உணவை தான் அதிகமாக விரும்புவார்”. இந்த வார்த்தைகள் தான் அவருக்கு வடா பாவை வெற்றிகரமான வியாபாரமாக்க தூண்டியது.
வடா பாவ் தயாரிக்கும் தொழிலில் இரண்டு பன்களுக்கு இடையில் வைக்கப்படும் உருளை மசாலாவுடன் கூடிய பட்டி தயாரிப்பு தான் மிக முக்கிய பங்கு வைக்கிறது. “கோலி வடாபாவ்” என்ற தனது பிராண்டில் கவனம் செலுத்தியதோடு மட்டுமல்லாமல் உணவுகள் பதப்படுத்தும் ஒரு நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து ஷெல்ஃப் லைஃப் அதிகப்படுத்தக்கூடிய அதேநேரத்தில் வடாபாவ்வின் சுவை குன்றாமல் இருக்கும் வண்ணம் உள்ள தொழில்நுட்பத்தை சேர்த்தார் .
முதலில் கல்யாண் நகரில் ஆரம்பித்த வடாபாவ் கடை படிப்படியாக மும்பையில் பல்வேறு புறநகர் பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டது வழக்கமாக எல்லா தொழில் முனைவோர் சந்திக்கும் நிதிப் பிரச்சனை வெங்கடேஷையும் தாக்கியது . அவரது வியாபாரத்தில் அதிக நம்பிக்கை கொள்ளாத வங்கி வாங்கிய கடனை திருப்பி செலுத்த 10 நாள் அவகாசம் அளித்தது.
நண்பர்கள் மூலம் நிதியை திரட்டி அதே நேரத்தில் கடைகளையும் அதிகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். ஊடகங்கள் அளவில் பெரிய அளவில் பேசப்பட்டதால் வடாபாவ் பிரபலமானது. அதற்குப் பிறகு பிரான்சைஸ் என்ற முகவர் அடிப்படையில் தனது கடைகளை அதிகரிக்கும்போது தேவைப்பட்ட லாஜிஸ்டிக்ஸ் பார்ட்னரை சரியான முறையில் தேர்ந்தெடுத்து கொண்டதன் மூலம் இப்போது கோலி வடா பாவ் கடைகள் நாடெங்கிலும் வியாபித்திருக்கின்றன.
வெறும் உணவுப் பொருளாக மட்டும் விற்றிருந்தால் கோலி வடா பாவ் மக்களின் கவனத்தை பெற்றிருக்காது. வெங்கடேஷ் கோலி வடா பாவ் என்ற பிராண்டிற்கு உரிய முக்கிய அம்சங்களான சூடான, காரமான, சுத்தமான வடாபாவ் என்ற இலக்கிற்கு பொருத்தமாக உரிய லோகோவை தேர்ந்தெடுத்து பிரபலமடைய செய்தார். தரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து சிறப்பாக செயல்படுவது , கூட்டாளிகளை கண்டுபிடித்து அவர்கள் மூலம் வேகமாக வளர்ந்தது ,சூழ்நிலைக்கேற்றவாறு தனது முயற்சிகளை மாற்றிக்கொண்டு அதேநேரத்தில் இலக்கிலிருந்து சிதறாமல் பணிபுரிந்தது கோலி வடா பாவ்வின் வெற்றிக்கு காரணம். அடுத்த முறை நீங்கள் வடா பாவ் சாப்பிடும்போது கண்டிப்பாக வெங்கடேஷ் என்ற ஒரு தொழில்முனைவரை நினைத்துக் கொள்வீர்கள் என்கிற அளவில் மிகவும் தனது அனுபவங்களை சுவைபட தந்திருக்கிறார்.
இப்புத்தகம் அமேசானில் கிடைக்கிறது.