மீனவர்கள் கடலுக்கு செல்லும் போது அவர்களின் பெரிய பிரச்சனையே அவர்கள் மீன் பிடிக்க செல்லும் இடத்தில் மீன் கிடைக்குமா, கிடைக்காதா என்பதுதான். தினசரி ஒரு கேள்விக்குறியுடன் தான் மீனவர்கள் கடலுக்குள் செல்கின்றனர். இவர்களின் இந்த பிரச்சனையை ஒரு கருவி மூலமாக தீர்ப்பதாக முன்பே ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம். அந்தக் கட்டுரை மீனவர்களிடமும், மற்றவர்களிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
நீண்ட கடற்பகுதிகள்
இந்தியாவில் 8100 கி.மீ.க்கு மேல் நீண்டுள்ள கடற்கரைப் பகுதியில் வசிக்கும் சுமார் 70 லட்சம் மக்கள், மீன்பிடி தொழிலையே தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். கடலில் இன்று எந்தப் பகுதியில் மீன்கள் கிடைக்கும் என்பதைக் கண்டுபிடிப்பது மிகவும் சவாலான ஒரு பணியாகும். பெரும்பாலும் மீன்கள் இருக்கும் பகுதியைத் தேடிக் கண்டுபிடிப்பதிலேயே கணிசமான நேரத்தையும், பொருளையும் மீனவர்கள் செலவிட வேண்டியுள்ளது. இதனால் நேரம் விரையமாவதுடன் லாபமும் குறைகிறது. மீன்கள் அதிகம் கிடைக்கும் மண்டலங்கள் குறித்து சரியான நேரத்தில் நம்பகமான ஆலோசனை வழங்குவது மீனவர்கள் சமூகத்திற்கு மிகவும் பயனளிக்கும் ஒரு முயற்சியாகும்.
தற்போது மற்றொரு கம்பெனி இந்த மீனவர் பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்கிறது. இது செயலி வடிவில் வந்திருக்கிறது. இந்த செயலியை மீனவர்கள் தங்களது மொபைலில் தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இது தவிர ஒரு சோப்பு பெட்டி அளவிற்கு ஒரு கருவியையும் (ஜெமினி என அழைக்கப்படுகிறது) அருகில் வைத்துக் கொள்ளவேண்டும். அந்த கருவி செயற்கைக்கோள் மூலமாக அதிர்வலைகளை செய்தியாக்கி அந்த மொபைல் செயலிக்கு ப்ளூடூத் மூலம் அனுப்புகிறது. இதன் மூலம் அந்த மீனவர் இருக்கும் இடத்தில், மீன்கள் கிடைக்குமா கிடைக்காதா போன்ற தகவல்கள் உடனடியாக அவருக்கு கிடைக்கிறது.
இந்தியப் பெருங்கடல் தகவல் சேவை மையம் (INCOIS), இந்த ஆலோசனைகளை மீனவர்களுக்கு தினசரி அடிப்படையில் இந்திய கடற்கரையில் 586 மீன் தரையிறங்கும் மையங்களுக்கு குறிப்பிட்ட குறிப்புகளுடன் வழங்குகிறது. இந்த செயல்பாட்டு சேவையானது ஆண்டு முழுவதும் ESSO-INCOIS ஆல் வழங்கப்படுகிறது,
மீனவர்களின் வசதிக்காக, அவர்களின் சொந்த மொழிகளிலும் இந்த சேவை வழங்கப்படுகிறது.
இந்த செயலி கடலில் ஏற்படும் மாற்றங்களை, அதாவது சுனாமி, கடல் சீற்றம், புயல், கடல் காற்றின் வேகம், கடலில் அந்த இடத்தில் ஆழம் ஆகியவற்றை முன்கூட்டியே அறிந்து கூறும் வசதிகளை பெற்றிருக்கிறது. ஒரு நாட்டின் கடல் எல்லையைத் தாண்டி சென்று மீன் பிடிக்காமல் இருக்கவும் வழிகாட்டுகிறது. இதன் விலை ரூபாய் 9000 ஆகும்.மேலும் தகவல்களுக்கு அரசாங்க நிறுவனத்தின் இணையதளத்தை சென்று பாருங்கள் – https://www.incois.gov.in/