இந்த நாடே பெருந்தொற்று நோயுடன் போராடிக் கொண்டிருக்கும்போது ‘Necessity is the mother of invention’ (தேவைதான் கண்டுபிடிப்பின் தாய்) என்ற வாசகத்துக்கு இணங்க, சில புதிய முயற்சிகளும் கண்டுபிடிப்புகளும் நாள்தோறும் வந்து கொண்டிருக்கின்றன. இப்போது எல்லா அலுவலகங்கள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் என எங்கு சென்றாலும் உள்ளே நுழையும்போதே சானிடைசர் பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்ய வேண்டியிருக்கிறது. சானிடைசரை டிஸ்பென்ஸ் செய்வதற்காக காலால் பெடல் மூலம் இயக்கப்படும் சானிடைசர் டிஸ்பென்சர் என்ற ஒரு இயந்திரம் கிட்டத்தட்ட கட்டாயம் இருக்க வேண்டும் என்ற சூழ்நிலை உருவாகியிருக்கிறது. இப்போது சந்தையில் விற்றுக் கொண்டிருக்கும் இயந்திரங்கள் ஸ்டீல் ஆங்கிள்களை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. அதற்கு மாற்றாக கார்ட்போர்டு என்ற காகித அட்டைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் சானிடைசர் ஸ்டாண்டுகளை பொறியியல் பட்டதாரி இளைஞர் திரு. கார்த்திக் ரத்தினம் ஒரு ஸ்டார்ட்அப்தொழிலாக ஆரம்பித்து இந்த தயாரிப்பை வெற்றிகரமாக சந்தைக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். அவருடன் நாம் அலைபேசியில் தொடர்பு கொண்ட கலந்துரையாடலின் விவரங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
இது ஒரு குறுகிய கால தேவை என்பதால், நீண்ட நாட்களுக்கு உழைக்கக்கூடிய ஸ்டீல் ஆங்கிள்களை பயன்படுத்தி தயாரிக்கத் தேவையில்லை. எனவே, கார்ட்போர்டு அட்டை கொண்டு தயாரிக்க முடிவு செய்தேன். இந்த கார்டுபோர்டு ஸ்டாண்ட் சுமார் மூன்றிலிருந்து நான்கு மடங்கு விலை மலிவானது. வலிமையான மற்றும் நீண்ட நாட்களுக்கு உழைக்கக் கூடிய வகையில் மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வுக் குறிப்பின்படி , வைரஸ் 90 மணி நேரம் பிளாஸ்டிக்கிலும், ஸ்டீல் மற்றும் இரும்பு பொருள்களில் 60 மணிநேரமும் உயிரோடு இருக்கும். ஆனால், அட்டைப் பெட்டியில் 16 மணிநேரத்திற்கும் குறைவாகவே உயிரோடு இருக்கும் என்று கண்டறிந்துள்ளனர்.
கார்ட்போர்டு அட்டைகளைக் கொண்டு நாற்காலிகள் போன்ற பலவிதமான பர்னிச்சர் பொருட்களை தயாரிக்க முடியும் என்று சொல்லி நம்மை அசத்துகிறார் கார்த்திக். புதிதாக துவங்க இருக்கும் அலுவலகங்களுக்கு அட்டைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மேஜை நாற்காலிகளை உபயோகிப்பதன் மூலம் ஆரம்ப முதலீடுகளை குறைக்கலாம் என்கிறார். அட்டைகளை கொண்டு உருவாக்கப்பட்ட இந்த மேஜை நாற்காலிகள் சுமார் ஓராண்டு முதல் இரண்டு வருடங்கள் வரை உழைக்கக்கூடியவை. எனவே, நிறுவனம் நன்கு வளர்ந்த பிறகு ஸ்டீல் அல்லது மர மேஜை நாற்காலிகளை வாங்கிக் கொள்ளலாம் என்கிறார். பொருட்காட்சிகள் போன்றவற்றுக்கு சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தெர்மோகோல் போன்றவற்றுக்கு மாற்றாக, அட்டைகளைக் கொண்டு பொருள்களை காட்சிப்படுத்தலாம்.நாம் நினைப்பதைப் போல அட்டைகளைக் கொண்டு உருவாக்கப்படும் தயாரிப்புகள் மிக இலகுவானது அல்ல. இதன் பயன்பாடுகள் வருங்காலத்தில் பெருமளவு புழக்கத்தில் வரும் என அடித்துக் கூறுகிறார். இதில் ஒரு சிறப்பு என்னவென்றால் நாம் அலுத்து சலிக்கும் வரை அட்டைகளை மறுசுழற்சி செய்துகொண்டே இருக்கலாம்
தனது தயாரிப்பை அறிமுகப்படுத்திய சுமார் பத்து நாட்களுக்குள் நாலாயிரத்துக்கும் அதிகமான சானிடைசர் ஸ்டாண்டுகள் தயாரிப்பதற்கான ஆர்டர்களைபெற்றுள்ளார் கார்த்திக். தனது தயாரிப்புகளை விளம்பரப்படுத்தி, உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார். கார்த்திக் பெற்றுள்ள எல்லா ஆர்டர்களும் ஏற்றுமதிக்கான ஆர்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக Thinking out of the box, பெட்டிக்கு வெளியே சிந்திப்பது என்பதை “மாத்தியோசி” என்பார்கள். இப்படி பெட்டியை வைத்து மாற்றி யோசித்த கார்த்திக்கின் முயற்சி வெற்றி பெற வாழ்த்து கூறி உரையாடலை முடித்துக் கொண்டோம்.
தொடர்புக்கு : 96770 10768
இ-மெயில் : karthicrathinam@gmail.com