தென்னிந்தியாவில் எந்த அளவு சக்தி மசாலா, ஆச்சி மசாலா பிரபலமோ அந்த அளவு இந்தியாவின் பல மாநிலங்களில் MDH மசாலா மிகவும் பிரபலம்.
இன்றைய பாகிஸ்தானில் உள்ள சியால்கோட் நகரில் 1923ஆம் ஆண்டு பிறந்த தரம்பால் , ஐந்தாவது வகுப்பை கூட தாண்டாதவர். தச்சுவேலை, கண்ணாடி, சோப்பு வியாபாரம் என பல்வேறு பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டாலும் அனைத்திலும் தோல்வி கண்டு பின்னர் தன் தந்தை நடத்தி வந்த மசாலா பொருள் வியாபாரத்தில் இறங்கினார்.
இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு 1959ஆம் ஆண்டு வெறும் 1500 ரூபாயுடன் டெல்லிக்கு வந்து, 650 ரூபாய்க்கு ஒரு குதிரை வண்டியை வாங்கி குதுப் சாலை – கரோல்பாக் இடையே 2 அணா கட்டணத்தில் குதிரை வண்டி சவாரி என தனது வாழ்க்கைப் பயணத்தை தொடங்கினார். பின்னர் டெல்லியில் உள்ள அஜ்மல்கான் சாலையில் ஒரு பெட்டிக் கடையை வாங்கி தனது தந்தை, சியால்கோட்டில் நடத்திவந்த மகாஷியன் டி ஹட்டியின் (MDH) மசாலா பொருள் வியாபாரத்தை தொடர்ந்தார்.
அப்போது பிரபலமாக இருந்த பிரதாப் என்னும் இந்தி நாளிதழில் தனது மசாலா பொருட்களுக்கான விளம்பரத்தை வெளியிட்டார். சிறிது காலத்துக்குள் சாந்தினி சவுக் என்ற இடத்திலும் தனது இரண்டாவது கடையைத் திறந்தார் .பின்னர் கீர்த்தி நகர் என்னும் இடத்தில் சொந்தமாக இடம் வாங்கி மசாலாப் பொருள் உற்பத்தியை 1959ஆம் ஆண்டில் தொடங்கினார். 2018 ஆம் ஆண்டில் 18 இடங்களில் தனது தொழிற்சாலைகளை நிறுவி சுமார் 1100 கோடி ரூபாய் வியாபாரத்தை எட்டும் அளவிற்கு நிறுவனத்தை உயர்த்தினார்.
முண்டாசு, முறுக்கு மீசை, கண்ணாடி, முத்து நெக்லஸ் ஆகியவற்றை அணிந்து கொண்ட அவரது உருவம் MDH நிறுவனத்தின் மசாலா பாக்கெட்டுகளிலும் விளம்பர செய்திகளிலும் அச்சிடப்பட்டது. குறைந்த விலையில் தரமான மசாலா பொருள் என்ற தாரக மந்திரத்தை குறிக்கோளாக வைத்துக்கொண்ட தரம்பால் மிக எளிதில் இந்திய நாட்டு நடுத்தட்டு மக்கள் வீட்டு சமையல் அறைகளில் இடம் பிடித்தார்.
தனது பொருட்களுக்காக தொலைக்காட்சி விளம்பரங்களில் தோன்றினார். “அசலி மசாலா சச் சச் “என்ற வானொலி மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்கள் மிகவும் பிரபலமானவை. இப்போது இந்திய மசாலா பொருள் தயாரிப்பில் இது ஒரு மிகப்பெரிய பிராண்டாக திகழ்கிறது .சுவிட்சர்லாந்து, ஜப்பான், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதோடு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்டாக்கிஸ்ட்கள், 4 லட்சத்துக்கும் மேற்பட்ட சில்லரை விற்பனையாளர்கள் நெட்வொர்க் மூலமாக இந்தியாவிலும் வெளிநாட்டிலும் விற்கப்படுகிறது. மிளகாய் தூள், மஞ்சள் தூள் என அரைக்கப்பட்ட மசாலா பொருள்கள் முதல் ரெடிமேட் மசாலாக்கள் வரை பல்வேறு வகையான மசாலா பொருட்களை MDH நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. 60க்கும் மேற்பட்ட மசாலா வகைகளில் டெகி மிர்ச் (Deggy Mirch) , சாட் மசாலா (Chat Masala), சென்னா மசாலா (Channa Masala) பாக்கெட்டுகள் மாதந்தோறும் ஒரு கோடி பாக்கெட்டுகளுக்கு மேல் விற்பனை ஆகிறதாம்!
2017 ஆம் ஆண்டில், மகாஷய் தரம்பால் குலாட்டியின் சம்பளம், FMCG பொருள்களை விற்கும் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளான ஆதி கோத்ரேஜ் மற்றும் கோத்ரேஜ் கன்ஸ்யூமர் நிறுவனத்தின் விவேக் கம்பீர், இந்துஸ்தான் யூனிலீவரின் சஞ்சீவ் மேத்தா மற்றும் ஐடிசியின் ஒய்.சி தேவேஸ்வர் ஆகியோரை விட அதிகம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
20க்கும் மேற்பட் பள்ளிகளை நிறுவிய தோடு ,200 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையும்குடிசைப் பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்களுக்காக மொபைல் மருத்துவமனைகளையும் நிறுவியிருக்கிறார். தனது தந்தை பெயரில் ஒரு அறக்கட்டளையை நிறுவி அதன் மூலம் பல்வேறு நற்பணிகளை பண உதவியை வழங்கிய இவர், இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய விருதான பத்மபூஷன் விருதை கடந்த 2019ம் ஆண்டில் பெற்றார்.
டிசம்பர் 3ஆம் தேதி, 97வது வயதில் காலமான தரம்பால் 1,500 ரூபாயில் இருந்து அறுபது வருடங்களில் 1500 கோடி ரூபாய்க்கு உயர்ந்தார். இவரது வளர்ச்சி வளரும் தொழில் முனைவோர்களுக்கு ஒரு நல்ல பாடமாக இருக்கும்.
ஸ்டார்ட் அப் அண்ட் பிசினஸ் நியூஸ் “இந்தியாவின் மசாலா சக்ரவர்த்தியின்” மறைவிற்கு அஞ்சலி செலுத்துகிறது.
இந்த லிங்க் மூலம் MDH நிறுவனத்தின் வீடியோ விளம்பரத்தை பார்க்கலாம்.