உலகத்தில் சுற்றுப்புற சூழல் மாசுபாடு அதிகம் உள்ள நகரங்களின் பட்டியலில் முதல் இருபது இடங்களில் இந்தியாவின் 10 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. இது உங்களில் பலருக்கு கவலையும் அதிர்ச்சியுமாக இருக்கும். காரணம் உங்கள் வருங்கால சந்ததிகள் இந்த மாசுக் கட்டுப்பாடுகளை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்களோ என்று நினைத்து.
எல்லாம் தெரிந்திருந்தும் எதற்கும் கவலைப்படாமல் பலர் நமது ஊர்களையும் சுற்றுப்புறங்களையும் பல வகைகளில் சுகாதாரக் கேடுகளுக்கு ஆளாக்கி கொண்டிருக்கிறார்கள் என்பது மிகவும் வருந்தத் தக்கது.
இந்த சுகாதார கேடுகளை போக்குவதற்கு பல ஸ்டார்ட் அப் கம்பெனிகள் பலவிதமான முயற்சிகளை எடுத்து வருகின்றன.
சுற்றுப்புற சுகாதாரக் கேடுகளால் வானில் கலக்கும் நச்சு புகையால் இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 55 லட்சம் பேர் இறக்கிறார்கள் என்பது ஒரு ஆச்சரியமான உண்மை. இதற்கு முக்கியமான காரணம் டீசல் ஜெனரேட்டர்களால் வெளியேற்றப்படும் புகை. இது உங்கள் ஆயுட்காலத்தை பதினோரு மாதங்கள் குறைக்கிறது.
இந்தப் புகையை தடுக்கவும், அந்த புகையிலிருந்து பயனுள்ள சில பொருட்களை தயாரிக்கவும் “சக்கர் இன்னோவேஷன்” (Chakr Innovation) என்ற கம்பெனி ஒரு புதிய உத்தியை கண்டு பிடித்திருக்கிறது
இந்த கம்பெனி கண்டுபிடித்திருக்கும் கருவியை, ஜெனரேட்டரில் புகை வெளியேறும் குழாயில் பொருத்திவிட்டால் போதும். அது 90 சதவீதம் புகையை கட்டுப்படுத்தி அதை இங்க் ஆகவும், பெயிண்டாகவும் மாற்றுகிறது.
இந்த ஸ்டார்ட்-அப் கம்பெனியில் முக்கிய பங்கு வகிக்கும் ஆர்பிட் என்ற இளைஞர், ஒரு நாள் கரும்பு ஜுஸ் குடித்துக்கொண்டிருந்தார். அப்போது, கரும்பு ஜூஸ் இன்ஜினை இயக்க உதவும் ஜெனரேட்டர் வெளியிட்ட புகை சுவரில் பட்டு அங்கு கருமையான ஒரு பெரிய திட்டு உருவாகி இருப்பதை கண்டார். அதிலிருந்துதான் அவருக்கு இந்த ஐடியா வந்தது. இந்த கருமையை ஏன் பெயிண்டாக, இங்க் ஆக மாற்றக்கூடாது என்று யோசித்தார். அதன் விளைவுதான் “சக்கர் இன்னவேஷன்” என்ற இந்த ஸ்டார்ட் அப் கம்பெனி.
இந்த கம்பெனி தன் கண்டுபிடிப்புக்காக அமெரிக்காவின் சிக்காகோ பல்கலைக்கழக் விருது உட்பட பல விருதுகளை பெற்றுள்ளது.
இதிலிருந்து தயாரிக்கப்படும் இங்க் டெக்ஸ்டைல் பிரின்டிங், பேப்பர் பிரின்டிங் துறைகளில் பயன்படுத்தப்படுகிறது.
இந்த கருவியை டாட்டா, மகேந்திரா அண்ட் மகேந்திரா, இந்திய ராணுவம் ஆகியவை உட்பட பல கம்பெனிகள் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இணையதளம் : www.chakr.in.