பொதுவாக சந்தைப்படுத்துதல் அனைத்தும் கீழ்க்கண்ட நான்கு வகைகளுக்கு உட்பட்டுதான் இருக்கும்.   

பழைய சந்தை-பழைய பொருள்

பழைய சந்தை-புதிய பொருள்

புதிய சந்தை-புதிய பொருள்

புதிய சந்தை-பழைய பொருள்

அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் கண்டவராயன்பட்டியை சார்ந்த  திரு.  மணிகண்டன் அவர்கள் மேற்கொண்டிருக்கும் முயற்சி “பழைய சந்தை புதிய பொருள்” வகையில் இருந்தாலும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் காரணமாக இவரது தயாரிப்பு மிகுந்த முக்கியத்துவம்  பெறுகிறது.

சுமார் 20 ஆண்டு காலம் மென்பொருள் துறையில் பணியாற்றி கைநிறைய சம்பாதித்துக் கொண்டிருந்த மணிகண்டன்,  மூன்று ஆண்டுகளுக்கு முன் எத்தனை நாளைக்குத்தான் “அரைத்த மாவையே அரைப்பது” என்று நினைத்து தன்னை ஒரு தொழில்முனைவோராக மாற்றிக்கொள்ள திட்டமிட்டார். பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்து சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிப்பது போல இளநீர், குளிர்பானங்கள் போன்றவற்றை அருந்துவதற்கு காலம் காலமாக நாம் உபயோகித்து வந்த ‘பிளாஸ்டிக் ஸ்ட்ராவை’ காய்ந்த தென்னங்கீற்றுகளை உபயோகித்து தயாரிப்பதுதான் மணிகண்டனின் புதிய கண்டுபிடிப்பாகும்.

எவ்லோஜியா எக்கோ கேர் பிரைவேட் லிமிடெட்  என்ற தனது  நிறுவனம் மூலம் லீஃபி ஸ்ட்ரா  (Leafy Straw) என்ற பெயரில் உறிஞ்சு குழல்களை தயாரித்து விநியோகித்து வருகிறார். வெளிப்புற ரசாயன பூச்சுகள் ஏதுமில்லாமல் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் தயாரிக்கப்படும்  இந்த உறிஞ்சு குழல்கள் 3   அளவுகளில் தயாரிக்கப்படுகின்றன. 

அவருடன் நாம் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

மும்பை நகரில் சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கான வியாபாரத் திட்டம் பிசினஸ் சம்பந்தமான BIGLEAP2020 தேசிய அளவிலான போட்டியில் பெங்களூருவைச் சேர்ந்த இந்நிறுவனம் 10 லட்சம் ரூபாய் பரிசினை பெற்றது . தொழிலில் புதுமையை புகுத்தவும், தொழில்முனைவோர்களை ஊக்குவிப்பதற்காக நிறுவப்பட்ட இந்த போட்டியில் சுமார் 300 நிறுவனங்களுக்கு மேல்  கலந்து கொண்டன. ஒரு தமிழரின் நிறுவனம், பரிசை  வென்றது  நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

காய்ந்த தென்னை ஓலைகளை கொண்டு  குழல் போல சுருட்டி தயாரிக்கப்படும் இந்த ஸ்ட்ரா எளிதில் மக்கும் தன்மை கொண்டது என்பதால்,  சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக பல்வேறு நாடுகளிலிருந்து பாராட்டுகளும் சான்றிதழும் வந்த வண்ணம் உள்ளது. இப்போது ஆஸ்திரேலியா அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து அதிக அளவில் ஆர்டர்கள் வந்தாலும் அவற்றை ஏற்று, சப்ளை செய்யும் அளவுக்கு உற்பத்தியைப் பெருக்குவதில் பல்வேறு சிரமங்கள் இருந்து வருகின்றன.

ஒரு நாளைக்கு சுமார் 5 ஆயிரம் குழல்கள்  தயாரிக்கப்படுகின்றன. இப்போதைய தேவைக்கு இது போதுமானதாக இல்லை. இவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உற்பத்தி செலவு அதிகம் என்பதால், விலையும் அதிகம். இதனால் உள்நாட்டில் சந்தைப்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. SPECIAL PURPOSE MACHINE என்று சொல்லக்கூடிய பிரத்தியேக இயந்திரங்களை வடிவமைத்து அதன்மூலம் உற்பத்தியைப் பெருக்குவதற்கான ஆராய்ச்சிகளும் மேம்படுத்தல் நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. எதிர்காலத்தில் உள்நாட்டு தேவைகளுக்கு குறைந்த விலையில் வழங்குவதற்கான சாத்தியங்கள் அதிகமாகவே உள்ளன. இதே மூலப் பொருளைக் கொண்டு, தட்டு, குவளைகள், கரண்டிகள் செய்வதற்கும் திட்டங்கள் இருப்பதாக மணிகண்டன் கூறுகிறார்.

கடந்த பத்தாண்டுகளில்  இந்த வகை பொருள் வரிசையில் அதிகமாக சந்தைக்கு வந்த தயாரிப்புகளில் ஒன்றுதான் பாக்குமட்டை தட்டுகள். ஆனால் இதை தொடர்ந்து சந்தைப்படுத்த, மூலப்பொருள் சீராக கிடைப்பது இல்லை.  ஆனால், தென்னை ஓலை கிடைப்பதில் சிரமம் இருக்காது. தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும் என திட்டவட்டமாகக் கூறுகிறார். பாக்கு மரத்துக்கு அதிகமாக தண்ணீர் தேவைப்படும். பாக்கு மரங்கள் வளரக் கூடிய இடங்களும் குறைவு. தென்னந்தோப்புகள் எல்லா ஊர்களிலும்   இருக்கின்றன.

தென்னை ஓலையைக்கொண்டு, தட்டு கரண்டி போன்றவற்றை இயந்திரங்கள் மூலம் தயாரிக்கத் தொடங்கிய பின்னர், தென்னந்தோப்புகள் அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள தொழில் முனைவோர் அல்லது தொழில் செய்ய விரும்புவோருடன் இணைந்து, அவர்களுக்கு இயந்திரங்களை நாங்களே வழங்கி, அவர்கள் தயாரிக்கும் பொருட்களை நாங்களே வாங்கி சந்தைப்படுத்தும் திட்டமும் இருப்பதாக நம்பிக்கையுடன் கூறுகிறார். மணிகண்டனின் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்து கூறி உரையாடலை முடித்துக் கொண்டோம். 

தொடர்புக்கு : 98867 31232

மணிகண்டன்

Spread the lovely business news