“அகி மில்க்” நிறுவனர் திருமதி. அகிலாண்டேஸ்வரி முருகேசன் மைக்ரோ பயோலஜி பட்டதாரி. தனது ஆய்வின் அடிப்படையில் தஞ்சை – வல்லம்புதுர் கிராமத்தில் பால் பதப்படுத்தும் நிறுவனத்தை 2015 ல் நிறுவினார். பால் துறையில் மிகச் சிறந்த அனுபவமும், ஆர்வமும் கொண்ட இவர் ஒரு வெற்றிகரமான தொழில்முனைவோராக மாறி பாரதிதாசன் பல்கலைக்கழகம் மூலம் “சிறந்த தொழில் முனைவோர் விருது” வாங்கியது பாராட்டத்தக்கது. இவரைப் பேட்டி எடுக்கும் போது பால் உற்பத்தி குறித்து அதிகம் தெரிந்து கொள்ள முடிந்தது.
ISO சான்றிதழ் பெற்ற அகி மில்க் தனது வாடிக்கையாளர்களுக்குத் தரமான மற்றும் ஆரோக்கியமான பால், சீஸ், தயிர், நெய், பால்கோவா போன்ற பொருட்களை வழங்குவதாக உத்தரவாதம் அளிக்கிறது. பால் துறையில் ஒரு புதிய அளவுகோலை அமைப்பதில் உறுதியாக உள்ளது.
“நூறு கிலோ மீட்டர் சுற்றளவில் இருக்கும் விவசாயிகளிடமிருந்து பால் சேகரிக்கும் போது பால் தூய்மை மற்றும் தரம் சோதிக்கப்படுகிறது, சேகரிப்பு மையங்களிலிருந்து பண்ணைக்கு வந்த பின்னரும் மீண்டும் தர சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு செயல்முறைக்கும் பின்னர் பாலின் தரம் சோதிக்கப்படுகிறது. பால் கெடாமல் இருப்பதற்கான மற்றும் வெப்பநிலை எப்போதும் பராமரிக்கப்பட்டு, விநியோக மையங்களுக்கு பாலை அனுப்புகிறோம். இதனால் எங்கள் தயாரிப்புகள் எப்போதுமே முதல் தரம் நிரந்தரம்” என பெருமையுடன் கூறுகிறார் அகிலாண்டேஸ்வரி.
தொடக்கத்தில் ஒரு நாளைக்கு 4500 லிட்டர் பால் கொள்முதல் செய்தனர். 2016 ல் அது இரு மடங்காகி 9000 லிட்டராக உயர்ந்தது. முழுமையான தானியங்கி (Fully Automatic) இயந்திரங்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து அதன் மூலம் பால் தயாரிப்புகள் விற்பனைக்கு வெளி வருகின்றன. மூன்று கிராமங்களுக்கு ஒரு ஏஜெண்ட் என நியமித்து அவருக்கு தேவையான குளிரூட்டு சாதனங்கள் போன்ற வசதிகள் செய்து கொடுத்து அவர்கள் மூலம் சேகரிக்கப்பட்ட பாலை தங்களின் நிறுவனத்திற்கு கொண்டு வருகின்றனர்.
காவிரி ஆற்றை ஒட்டி இருக்கும் தஞ்சாவூர், நாகை பட்டுக்கோட்டை, திருச்சி போன்ற மாவட்டங்களில் விவசாயம், பால் உற்பத்தி மூலம் கிடைக்கும் வருமானமே முதன்மையானது. விவசாயத்தில் உள்ள கழிவு பொருட்கள் மாடுகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படுவதால் இப்பகுதியில் உள்ள விவசாயிகளில் பெரும்பாலோர் மாடுகளை வளர்க்கின்றனர்.
அகி பால் தனது நிறுவனத்திலிருந்து 100 கி.மீ தொலைவில் உள்ள இடங்களில் மட்டும் பால் கொள்முதல் செய்யும் திட்டத்தைக் கொண்டுள்ளது. காரணம் பால் கறந்து 2 மணி நேரத்திற்குள் தொழிற்சாலையை அடைந்தால்தான் அசல் பால் தன்மை மாறாமல் மேற்கொண்டு முறையாக பதப்படுத்தி விற்பனைக்கு அனுப்ப முடியும்.
அகி மில்க் மேலும் சீஸ் மற்றும் பல நறுமண சுவை கொண்ட பால் ஆகிய இரண்டு தயாரிப்புகளை விரைவில் விற்பனைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது அது மட்டுமல்லாமல் மூன்று மாதங்களில் தமிழ்நாடு முழுதும் இவர்களின் தயாரிப்புகள் விநியோகிக்க திட்டமிட்டுள்ளது.
அகி மில்க் நிறுவனம் தனக்கு மட்டுமல்லாமல் நாட்டில் உள்ள பால் வியாபாரம் செய்யும் விவசாயிகளின் நலத்தில் அக்கறை கொண்டவர்களாக செயல்படுகிறார்கள்.
கிராமங்கள் முழுவதும் வணிக வாய்ப்புகளை உருவாக்கி விவசாயிகளின் பால் பண்ணை வணிகத்தை வளர்க்க ஊக்குவிக்கிறது, அவர்களிடமிருந்து பால் வாங்குவதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்து பொருளாதாரம் மேம்பட வழிவகுக்கிறது.
பாலின் தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் முதலீட்டில் நல்ல வருமானம் கிடைக்கிறது. அகி பாலின் முக்கிய நடவடிக்கைகள் வெளிப்படைத்தன்மை மற்றும் ஒருமைப்பாடு மூலம் கிராம பால் விற்பனையாளர்களிடம் நம்பிக்கையை நிலை நிறுத்துவதோடு, அவர்களுடன் நீண்டகால வணிக உறவு நிலைக்கிறது.
அகி மில்க் நிறுவனத்தார் தங்களுக்கு பால் சப்ளை செய்யும் விவசாயிகளுக்கு சலுகை விலையில் தரமான கால்நடை தீவனங்களை வழங்குகின்றனர். தங்களின் சொந்த நிதியிலிருந்து குறைந்த வட்டியில் சுலப தவணையில் மாடு வாங்க கடன் கொடுப்பதோடு இவர்கள் சிபாரிசு செய்து வங்கி கடனையும் பெற்றுத் தர ஒரு ஆரோக்கியமான உறவை பேணி பாதுகாக்கின்றனர்.
இவர்கள் பள்ளி / கல்லூரி மாணவர்களை அவ்வப்போது தங்கள் நிறுவனத்துக்கு அழைத்து பால் பதப்படுத்தும் விதம் மற்றும் உற்பத்தி செய்யும் முறை குறித்து கற்றுக் கொடுத்து அவர்களை தொழில்முனைவோராக மாறுவதற்கான முயற்சியும் செய்கின்றனர்.
சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு இவர்களது தயாரிப்புகளை விரைவில் ஏற்றுமதி செய்ய இருக்கின்றனர்.
அகிலாண்டேஸ்வரி அவர்கள், தங்களின் நிறுவனம் இந்த அளவுக்கு வளர முதன்மைக் காரணம் தனது துணைவர் முருகேசன் அவர்கள் வழக்கறிஞராக பணிபுரிந்துகொண்டே, தனக்கு துணையாகவும் தூணாகவும் நிற்பதுதான் என தனது கணவரை பாராட்டி சொல்ல பரஸ்பர நன்றிகள் கூறி விடைபெற்றோம்.
தொடர்பு கொள்ள : 84288 59639 / 94428 47358வெப்சைட் : www.agimilk.com