சுட்டெரிக்கும் வெயில்…. 44 நாள் கொண்டாட்டம்… 543 தொகுதிகள்…சுமார் 96.8 கோடி வாக்களர்கள்… 17 ஆவது நாடாளுமன்றத்துக்கான தேர்தல்!!

இந்தத் தேர்தல் திருவிழாவால் பல திட்டங்களின் செயல்பாடுகள் ஒரு தேக்க நிலையை சந்தித்து வருகின்றன. அது ஏன்? எப்படி?

ஒரு நாள் தேர்தல் ஊர்வலத்திலோ அல்லது பரப்புரையுரையிலோ கலந்து கொண்டால் ரூ 800 முதல் ரூ 1000 வரைக் கொடுக்கப்படுவதோடு சாப்பாடு, தங்குவதற்கு இடம், போக்குவரத்து வசதியும் வழங்கப்படுகிறது. எனவே தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியான சில தினங்களுக்குப் பிறகு வட இந்தியாவிலிருந்து தென் மாநிலங்களுக்குப் புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் பெரும்பாலோர் அவரவர் சொந்த ஊருக்குத் தற்காலிகமாகத் திரும்பிச் சென்றுவிட்டனர்.

பெரும் நிறுவனங்களின் தொழிலாளர்கள் தேவைக்கு ஆட்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பும் நிறுவனங்கள் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தொழிலாளர்கள் கிடைக்காமல் அல்லாடிக் கொண்டிருக்கின்றன. தென்மாநில நகரங்களில் தொழிலாளர்கள் கிடைப்பது அரிதாகி வரும் நிலையில் சில நிறுவனங்கள் வழக்கத்துக்கு மாறாக சம்பளம் / கூலி அதிகம் கொடுக்க சம்மதித்து வட மாநிலங்களிலிருந்து சிரமப்பட்டு ஆட்களை தேவைப்படும் நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கிறது. 

இந்திய வரலாற்றிலேயே இரண்டாவது முறையாக, அதிக நாள்கள் இடைவெளியில் அதாவது, 7 நிலைகளாக சுமார் 44 நாள்கள் நடைபெறும் மாபெரும் தேர்தல் இதுவாகும். 

உதாரணத்துக்கு, மும்பை புறநகர் பகுதியில் இருக்கும் பிரபலமான சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வேலை பார்க்கும் ஒருவருக்கு மாதச் சம்பளம் ரூ 14,000 ஆகும். ஆனால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபின் அவர் தனது சொந்த மாநிலமான உத்தரப்பிரதேசத்துக்குச் சென்று அங்கு தொடர்ந்து நடைபெற்று வரும் கூட்டங்கள், ஊர்வலங்கள் ஆகியவற்றில் கட்சி பாரபட்சமின்றி (!) அனைத்துக் கட்சி நிகழ்வுகளிலும் கலந்து கொள்கிறார். இதன் மூலம் அவர் மாதம் ரூ 22,000 – ரூ 24,000 வரை சம்பாதிக்க முடிகிறது எனக் கூறுகிறார்.

இந்திய அளவில் தொழிலாளர்களை பிறமாநிலங்களுக்கு வழங்கும் மாநிலங்களாக உ.பி, பீகார், மே.வங்கம், ஜார்கண்ட், ஒடிசா ஆகியவை இருந்து வருகின்றன. இதில் முதல் மூன்று மாநிலங்களிலும் தேர்தலானது அனைத்து 7 நிலைகளிலும் அதாவது ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 1 ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இதனால் புலம் பெயர் தொழிலாளர்களை நம்பியிருக்கும் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, குஜராத், மஹாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்களில் தொழிலாளர்களுக்குக் கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது.     

இதைச் சமாளிக்க சில நிறுவனங்கள் தொழிலாளர்களுக்குக் கூடுதல் சம்பளம், தங்குவதற்கான வசதி, உணவு, போக்குவரத்துச் செலவு என பல சலுகைகளைக் கொடுக்கவும் தயாராக இருக்கின்றன. இருப்பினும் எதிர்பார்த்த வரவேற்பில்லை.  

கோடைகாலத்தின் வெப்பத்தோடு தேர்தலும் சேர்ந்து கொண்டதால் மாநிலங்களுக்கு இடையே தொழிலாளர்கள் கிடைப்பது முன்பு இருந்த நிலையை விட 15 சதவீதம் குறைந்திருப்பதாக ஆட்சேர்ப்பு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். 

தொழிலாளர் பற்றாக்குறையானது கட்டமைப்பு, உற்பத்தி, சேவை வழங்குவது ஆகிய துறைகளில் வேலை செய்து வரும் இயந்திரங்களைக் கையாள்பவர்கள், வெல்டர்கள், விற்பனையாளர்கள், சேவை வழங்கும் டெக்னீசியன்கள், பொருள்களை டெலிவரி செய்பவர்கள், கிடங்குகளை மேற்பார்வை செய்பவர்கள் என பல தரப்புகளிலும் இருந்து வருகிறது. 

இந்தப் பற்றாக்குறையானது ஜூன் இறுதி வரை நீடிக்கும் என இத் துறை சார்ந்தவர்கள் குறிப்பிடுகின்றனர். ஜூன் 1 ஆம் தேதி தேர்தல் முடிவடைந்தாலும் அதன் முடிவுகள் ஜூன் 4 முதல் வெளியாகும் நிலையில் வெற்றி பெற்றக் கட்சிகள் வெற்றி ஊர்வலங்களை அடுத்து வரும் 10-15 நாள்களுக்கு மேற்கொள்ளும்பட்சத்தில் இவர்கள் கூடுதலாக வருமானம் ஈட்டுவதற்கு அது ஒரு வாய்ப்பாக அமையும்.

ஃபரிதாபாத் நகரில் ஸ்விக்கி நிறுவனத்தில் வேலைபார்த்து வந்த ஒருவர் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் அவரது சொந்த ஊரான பாலியாவுக்குச் சென்று விட்டார். அங்கு காலை 8 மணி அல்லது 9.30 மணியிலிருந்து மாலை 4.30 மணி வரை ஏதாவது ஒரு கட்சியின் தேர்தல் பரப்புரையில் கலந்து கொள்கிறார். இதற்காக அவருக்கு பிரியாணி, குளிர்பானம், டீ, சமோசா ஆகியவற்றை அக்கட்சி இலவசமாக வழங்குவதோடு பணமும் கொடுக்கிறது. இதன் மூலம் அவர் ரூ 22,000 சம்பாதிக்கிறார். ஸ்விக்கியில் அவருக்குச் சம்பளம் ரூ 16,000 அதுவும் வேறு ஊரில்.  இப்போது அவர் சொந்த ஊரில் இருப்பதாலும், தேர்தல் பரப்புரையில் கலந்து கொள்ளும் நாட்களில் உணவு இலவசம் என்பதாலும் அவரால் அவர் சம்பாதிக்கும் ரூ 22,000ல் பெரும்பகுதியைச் சேமிக்க முடிவதாகக் கூறுகிறார். 

இது தற்காலிகமானது என்றாலும் தினமும் சிரமப்படும் தொழிலாளர்களுக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களுக்கும் இந்த 44 நாள் தேர்தலானது அவர்கள் ஓரளவுக்குக் கூடுதலாக வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது. ஜூலை மாதத்திலிருந்து தொழிலாளர்கள் தட்டுப்பாடு அவ்வளவாக இருக்காது என இத்துறை சார்ந்தவர்கள் நம்பிக்கைக் கொண்டிருக்கிறார்கள். பார்க்கலாம்! 

Spread the lovely business news