நடுத்தர மற்றும் சிறுதொழில் நிறுவனங்கள் ( MSME), உரிய நேரத்தில் நிதி கிடைக்காததால்தான் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகின்றன என்று சமீபத்திய ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. தேவையான நேரத்தில் தேவையான கடன் மூலம் நடைமுறை மூலதனம் கிடைத்தால்தான் சிறுதொழில் அமைப்புகள் பயணிக்க முடியும். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வரும் சிறுதொழில் அமைப்புகளுக்கு நிதி உதவிகளை வங்கிகளில் இருந்து பெறுவதற்கு வகை செய்யும் வகையில் மத்திய அரசு ஏற்கனவே CGTMSE என்கிற திட்டத்தின்படி ரூபாய் 2 கோடி வரை எந்த சொத்தும் இல்லாமல் கடனாக வழங்க வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் நடைமுறையில் வங்கிகள் இத்தகைய கடனை தகுதியான நிறுவனங்களுக்கு தேவையான நேரத்தில் கொடுக்கிறதா என்று பார்த்தால் ஏமாற்றமே மிச்சம்.
இதில் அதிகம் சிரமப்படுபவர்கள் முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள். வங்கிகளை நம்பி சிறுதொழில்கள் நடத்தி வருபவர்தான்.
சிஜிடிஎம்எஸ்ஈ (CGTMSE) திட்டம் என்பது என்ன?
Credit Guarantee Funds Trust for Micro and Small Enterprises (CGTMSE) என்பது சிறு மற்றும் குறு தொழில்களுக்கான கடன் உத்திரவாத நிதி அறக்கட்டளை. இந்தியாவின் குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சகம்( MSME ministry) மற்றும் சிறுதொழில் வளர்ச்சி வங்கி (SIDBI) மூலம் நிறுவப்பட்ட அறக்கட்டளை இது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் நிதி நிறுவனங்களுக்கு கடன் உத்திரவாதம் அளிப்பதாகும். புதிதாக தொழில் முனைவோரும் சிறு தொழில்களில் ஈடுபட்டு இருப்போரும் கடனை திருப்பித் தருவார்களா என்கிற அச்சமில்லாமல் வங்கிகள் கடன் வழங்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கடன் வாங்கியவர்கள் அதை செலுத்தத் தவறும் பட்சத்தில் ஒரு குறிப்பிட்ட வரம்பு வரை வங்கிகளுக்கு கடனை அறக்கட்டளை (CGTMSE) திருப்பி செலுத்துகிறது .இது கடனுக்கான தொகையில் அதிகபட்சம் 85% வரை இந்த அறக்கட்டளை உத்தரவாதம் அளித்து திருப்பித் தருகிறது.
கடன் கொடுக்க தகுதியானவர்கள்:
இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் ( commercial banks), பிராந்திய சிறு வங்கிகளும்(Regional Rural banks), NBFC உட்பட 131 கடன் வழங்கும் அமைப்புகளுக்கு இந்த திட்டம் பொருந்துகிறது.
இவற்றில் NSIC மற்றும் SIDBI அடங்கும். இவர்கள் கொடுக்கும் கடனுக்கு அறக்கட்டளை உத்தரவாதம் கொடுக்கும்.
கடன் பெற தகுதியானவர்கள்:
அனைத்து வகை எஸ் எம் இ (SME) மற்றும் எம்எஸ்எம்இ (MSME) அமைப்புகளும் கடன் பெறத் தகுதியானவர்கள். இந்த திட்டத்தில் பயிற்சி நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள், வணிகர்கள் கல்விநிறுவனங்கள் ஆகியோருக்கு இடமில்லை. பெண்களால் துவங்கப்படும் தொழில்களுக்கு சிறப்பு சலுகையும் உள்ளது.
இந்த திட்டத்தின் முக்கிய அம்சமே எந்தவிதமான சொத்து அடமானமும் ( Collateral security), மூன்றாவது நபரின் உத்தரவாதமும் (Third party guarantee) இல்லாமல் 2 கோடி ரூபாய் வரை கடன் உதவி பெறுவதாகும். இவர்கள் வட்டிக்கு மேல் அதிகபட்சமாக 1.5 சதவிகிதம் உத்திரவாத தொகையாகவும், சர்வீஸ் சார்ஜ்
கொடுக்க வேண்டியிருக்கும். இந்தியாவில் பெரும்பான்மை புதிய தொழில் முனைவோர், சிறு தொழில் அமைப்புகள் தடுமாற்றம் அடைவது பிணைய சொத்து கொடுப்பதில்தான். இதை நிவர்த்தி செய்யும் வகையில் மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட இந்த திட்டம் பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. இருப்பினும் இந்த கடனை கொடுத்த பின் திருப்பிச் செலுத்தாத பட்சத்தில் தமக்கு ஏதும் பாதகம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் இந்தக் கடனை கொடுக்க மிகுந்த தயக்கம் காட்டுகின்றனர். சிறுதொழில் அமைப்புகளுக்கும் இந்த திட்டம் இருப்பது பெரிய அளவில் சென்றடையவில்லை. இந்தத் திட்டம் இருப்பதை தேவையான தொழில் நிறுவனங்கள் அறிந்து அவர்களது வங்கியை அணுகி உரிய கடனை தேவையான நேரத்தில் பெரும் பட்சத்தில் நாட்டின் உற்பத்தி பெருகி இந்த திட்டத்தின் முழு பயனை அடைய முடியும். வங்கி அதிகாரிகளிடம் இருக்கும் தயக்கத்தை நிவர்த்தி செய்யும் வகையில் ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்த வேண்டியது தற்போதைய தேவை.